Wrote in 2007… Inspired by Kalki’s flamboyant and  fantastic writing in tamil… 


Vanathi
Vanathi

Part  3

வானதி  பொன்னியின் செல்வன் மேல்  கொண்ட  காதல்

இந்த முறை…  கொஞ்சம்  நீளமாக எழுதுமாறு  அமைந்து  விட்டது … சிறிது  பொறுத்துக்   கொள்க …. வானதியை  பற்றி  கொஞ்சம் அதிகமாகவே சொல்ல வேண்டும் என்று தணியாத ஆர்வம் என்னையும் மீறி கொண்டு எழுந்தது … என்ன  செய்ய ?

சிறுபிராயத்திலேயே  தாயை  இழந்து , பின்  தந்தையையும்  சீக்கிரமே  பறி  கொடுத்துவிட்டு  அன்புக்கு  ஏங்கி  நின்ற  இந்த  சிறு  பெண்ணுக்கு, வாழ்வில்  ஒரே  பிடிப்பு  என்பது  தாய்  பாசத்தையொத்த இளைய  பிராட்டியின்  அன்பு  தான் … பருவம்  வந்த  பின்னும்  கூட,  குந்தவைக்கு  அவள்  குழந்தையாகவே  தெரிந்தாள் …
ஆனால்  வல்லிய  விதியானது  அவளையும்  விட்டுவிடவில்லை … வந்தது  ஒரு  காட்டுப் பூனையின் ரூபத்தில்…. பூனையோடு பொருந்த  (சண்டையிட ….) யானை  மேல்  வந்தான்  ஒருவன் … வேடிக்கையாக  இல்லை ? ஆனால்  கேவலம்  பறவை  இனமென்று  பாகுபாடு  பாராமல் , அந்த  இளம்  குஞ்சுகளின்  உயிரைக் காத்த அந்த கருணைமிகு இதயம் அவளைக் கவர்ந்துவிட்டது … யாராக இருப்பன் அந்த  யானைப் பாகன்?  களங்கமில்லா  தூய  பால்  போன்ற  அவள்  மனதை  கொள்ளை  கொண்டவன்  யார் ? என்ற  எண்ணங்கள்  அவளுக்குள்  மீண்டும்  மீண்டும்  தோன்றி  அவளை  இன்பமாக  வதைத்தன …

வெளி  உலகம்  என்றால்  என்ன  என்பதையே  அறியாது , கொடும்பாளுர்  ஒன்றே உலகம்  என்று  வளர்ந்து  வந்த ஒரு  அறியாப்பெண்; காதல், களவு  போன்றவற்றை  கனவில்  கூட  எண்ணிப்பார்த்திராதவள் … அதனால் … கள்ளம் , கபடம் , கவலை  ஏதும்  இன்றி  மனம்  போல்  ஆடிப்பாடி , களிப்பில்  மூழ்கிக்  கிடந்தவளின்  உள்ளத்தில்  இப்போது  ஏதோ  ஒரு  பெரும்  மாற்றம் … மானைப்  போல  துள்ளிக்கொண்டு  திரிந்த  கால்களில்  இன்று  ஒரு  சிறிய  தயக்கம், தடுமாற்றம் … தோகை  விரித்தாடும்  மயிலைப்போல  வான  வெளியெங்கும்  சுதந்திரமாக  சுற்றி  வந்த  அவளின்  மனம்  இன்று  கூண்டில்  அடைபட்ட  கிளியாக  ஆகிவிட்டது  ஏன் ?

குளத்தில்  விழும்  கல்  தண்ணீரில்  வட்ட  வட்டமாய்  அழகிய  அலைகளை  எழச்செய்வது  போல் … அவளின்  உள்ளத்தடாகத்தில்  ஒரு  அழகிய  வீர  திருமுகம்  இன்ப  அலைகளை  எழுப்பி  விட்டிருக்கிறது …. அந்த   அனுபவம்  அவளுக்குப்புதிதாக  மற்றுமின்றி  புதிராகவும்  இருந்தது … புரியாத  சிலவற்றில்  தான்  போதையும் , ஈடுபாடும்  அதிகம்  உண்டாகும்  என்பது  உண்மையோ?  தான்  கொடும்பாளூர்  இளவரசி  என்று  அறிந்ததும்  அவன்  கோபம்கொண்டு விருட்டென்று   திரும்பிச் சென்றது  ஏன் ? மீண்டும்  சந்தித்தால்  அவன்  ஏன்  அவ்வாறு  கோபம்  கொண்டான்  என  கேட்கவேண்டும் … அந்த  யானைப்பாகனை  மறுபடியும்  காண  முடியுமா ? என்றெல்லாம்  அந்த  சிறுபெண்ணின்  உள்ளத்தில்  பலவிதமான  எண்ணங்கள்  அலை  மோதின …

ஆனால் …  அவன்தான்  இந்த  நாட்டு  மக்களின்  ஆத்மார்த்தமான  அன்புக்கு  உரியவன் … அரசற்கு  அரசர்களை  எல்லாம்  அடி  பணிய  வைக்கும்  அஞ்சா  நெஞ்சன் , வீரத்தில் , கருணையில் , அழகில்  இந்த  அகிலமே  போற்றும்  `அருள்  மொழி  வர்மன் ‘… என்று தெரிந்தவுடன் அந்த உண்மை  அவள்  உள்ளத்தில்  பேரிடியாக  இறங்கியது … நாடே  போற்றும்  இளவரசரை , கேவலம்  ஒரு  யானை  பாகன்  என்று  நினைத்தோமே ? இந்த  அரசே  அவனுடையது … அவனுக்கே  அரசாங்க  உத்யோகம்  வாங்கித்தருவதாக  சொன்னோமே … என்ன  வேடிக்கை , இல்லை .. மூடத்தனம் ? என்றெல்லாம்  அவள்  நினைத்து  உள்ளம்  கலங்கிக்கொண்டிருந்த வேளையில், அவன்  முன்னே  தீபம்  ஏந்தி  நின்று , அவனை  வாழ்த்தி , வெற்றி  மலை  சூட்டி  வழியனுப்ப  வேண்டும்  என்றால் ? …

தயக்கமும் , குற்ற  உணர்வும் , அவற்றோடு  பெண்களுக்கே  உரிய  இயற்கையான  அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பென்னும் நால்வகை  உணர்ச்சிகளும்  ஒருங்கே  உந்தித்தள்ள , அவன்  தன்னை  ஏறெடுத்துப்பார்த்த அந்த  நொடியில் , அவள்  தன்வசம் இழந்து  மூர்ச்சை  ஆகிச் சரிந்தாள் …  ஆனால் … இது  அபசகுனத்திற்கான   அறிகுறியல்ல … அவளை  அவன்  எப்போதும்  நினைவில்  வைத்திருக்க  தூண்டும்  நல்லதொரு  சந்தர்ப்பம்  என்பதையோ … அவனும் , இப்படி  ஒரு  விசித்திரப்பெண்ணை  முதன்  முதலில்  பார்த்ததைத்  தன்  ஆயுள்  முழுவதும்  மறக்கப் போவதில்லை  என்பதையோ …, பாவம் , அப்பேதை  அறியாள் …
அவனை  ஒரு  வேலைக்காரன்  என்று  பரிகாசம்  செய்தது , அவன்  போர்க்களம்  போகும்  சமயத்தில் , விபத்து  போல்  தீபத்தை  தவற  விட்டது  என்பதையே  அவள்  மனம்  நினைத்து  கொண்டிருக்க … அந்த  நினைவுகளே  அவன்  மீது  அளப்பெரும் காதலாக  உருப்பெற்று  வளர்ந்து  வருவதை  அவள்  அறிந்திறாள் ….  இருந்தாலும் , அவனை  மணந்து  கொள்ள  இந்த  சோழ  நாட்டின்  ஒவ்வொரு  கன்னிப் பெண்ணும்  விரும்புவாள் … அதையே  தான்  செய்தால் … பட்டமகிஷி  ஆகும்  எண்ணத்திலேயே !!!  என்ற  ஏளனப்பேச்சும் வரும் … யானைப்  பாகனாகவே  அவன்  இருந்திருக்கக்கூடாதா ?… “நான்  அவனை  யானைப்பாகனாக  இருக்கும்போதே  விரும்பினேன் … அவன்  இளவரசனா  என்று  அப்போது  எனக்கு  தெரியாது … அதைப்பற்றிய கவலை அப்போது  அல்ல  எப்போதும்  எனக்கு  இல்லை , அவன்  அன்பு  ஒன்றே  ஏன்  பிறவியின்  பயன் , அவன்  இதயமே  எனக்கு  அரியாசனம் “… என்றெல்லாம்  அடிக்கடி  தனக்குத்தானே பேசிக்கொண்டு , தன்  காதலுக்கு  உரமேற்றி  வளர்த்துவந்தாள்  …. பிரதிபலன்  எதுவும்  எதிர்  பாராத  காதல்  தன்னுடையது  என்று  நிரூபிக்க  ஒரு  தருணம்  வாராதா  என்று  வாடி  வருந்திக்கொண்டிருந்தாள்  …
அத்தகையவனை …ஒரு  நாள்  கடல்  கொண்டு  விட்டது  !! என்ற  செய்தி  வந்தால்? … அதை  அவள்  காதுகள் கேட்டனவா ? இல்லை , அதற்கு  முன்னமே  அவள்  உயிர்  அவளிடத்தில்  இல்லை  என  அறிந்து  கொண்டாள் … இனி  யோசிக்க  என்ன  இருக்கிறது ? இந்த  உடம்பேனும்  கூட்டைப்பற்றி இனி  என்ன  கவலை ? அவனோடு  வானவெளியில்  நட்சத்திரமாக  ஜொலித்திருக்கவும் , சோலைத்தென்றலோடு  கூடவே  சேர்ந்து  வரும்  பூக்களின்  நறுமணம்  போல , அவன்  ஆவியோடு  சுற்றித்திரிந்திருக்கவும்  அவள்  தயாராகி  விட்டாள் … ஓடையில்  பாய்ந்து  தன்  உயிரை  விட்டுவிட  துணித்து  விட்டாள் … ஐயோ  பாவம் , … அது  கைகூடவில்லையே … தன்னைக் கரை ஏற்றிக்காப்பாற்றி, தன்  உள்ளம்  கவர்ந்தவனோடு  தன்னை  சேர விடாமல்  பிரித்தது  யார் என்று  தெரிந்து கொள்ள  அவள்  விரும்பாததில்  என்ன  ஆச்சரியம் ? ஆனால் …அவனை  கடல்  கொண்ட  செய்தி  உண்மையல்ல  என்று  அறிந்ததும்  உண்டான  இன்பத்துக்கு  அளவே  இல்லை … ஆஹா … ஒரு  நொடியில்  எவ்வளவு  பெரிய  தவறு  செய்ய  இருந்தோம்  என  எண்ணி  மகிழ்வதற்குள் … அவன்  இன்னொரு  பெண்ணை  நேசித்துக்கொண்டு  இருக்கலாம்  என்று  கேட்கும்  படி  நேர்ந்ததே … என்ன கொடுமை  !!! போகட்டும் … அவன்  யாரை  விரும்பினாலும் … என் காதல்  மாறாது … அவன்  உயிரைக்காத்த  பெண்ணை  அவன்  விரும்புவதில்  தவறு ஒன்றுமில்லை  …. ஆனாலும் , தான்  தன்  தூய  அன்பைக்காட்ட  ஒரு  வாய்ப்புக்கூட  கிடைக்கவில்லையே  என்று  எண்ணி  அவள்  இன்னும்  வேதனைப்பட்டாள்  …

அன்று  ஒரு  நாள் , காவிரித்தாய் , கரை  புரண்டு  பொங்கி  வந்த  தன்  அன்பினால் , அவளை குடந்தை  ஜோதிடர்  வீட்டுக்கூரையோடு  சேர்த்துக்கொண்டு  சென்ற  போதும்,  தன்  உயிரைப்பற்றிய  கவலை  சிறிதும்  அவளுக்கு  இல்லை … ஆனால் , தன்னை  மீட்க  வெள்ளத்தில்  குதித்த அந்த  ஓடக்காரப்பெண்ணை  தான்  காப்பாற்ற  வேண்டும் , அவள்  இளவரசருக்கு  செய்த  உதவிக்கு , பிரதி  உதவியாக  தான்  அவளைக்காப்பற்றியாக வேண்டும் , இளவரசரின்  மேல்  உள்ள  தன்  மெய்  அன்பை  நிரூபிக்க  இது  போல்  ஒரு  பொன்னான  தருணம்  என்றும்  அமையப்போவதில்லை  … அந்த  முயற்சியில்  தான்  இறக்க  நேரிட்டாலும் , மரணத்தை  மனமுவந்து  ஏற்றுக்கொள்ள வேண்டும் , அதை  இளவரசர்  உணரும்  போது  அவர் கண்களில் துளிர்க்கும் ஒரு  சொட்டு கண்ணீர் மட்டுமே  தனக்குப்போதும் … என்று  எண்ணியே  பூங்குழலியை  அவள்  முதலை  வாயினின்று  காப்பாற்றினாள்……
ஆனால் அவள்  விஷயத்தில்  விதியின்  விளையாட்டுகள்  இனிதாகவே  இருந்தன …. தன்  மனம் கொண்ட நாயகனும்  தன்னை  நினைத்து  அல்லும்  பகலும்  மருகுகிறான்  என்று  அறிவதை  விட  ஒரு  இனிய  செய்தி  வேறு  என்ன  இருக்க  முடியும் ? அதை  அவன்  வாயினாலேயே  கேட்கும்  போது , அந்த  நொடிக்க்காக`வே  தான் உயிர்  வாழ்ந்திருப்பதாக  அவள்  நினைப்பதில்  வியப்பொன்றும்  இல்லையே ?
தன்  காதலன்  இறந்த  செய்தி  கேட்டு  தன்னுயிரை  விட்டுவிடத்துணிந்தவள் , தன் காதலனைக் காப்பாற்றியவளை தான்  காப்பாற்றி,  அவன் நன்றிக்கடனை  தீர்க்க  தன்  உயிரையும்  கொடுக்க  முன்வந்தவள், தன்  காதல்  அவன்  மீது  தானே  ஒழிய  அரியாசனத்தின்  மீதில்லை  என்ற  சபதத்தில்  இருந்து  வாழும்  வரை  வழுவாமல்  இருந்தவள் … அந்த  உத்தமியின்  காதல் தான் அனைத்திலும் சாலச்சிறந்தது  என்பதில்  சந்தேகம் என்ன?  ….