Wrote in 2007… Inspired by Kalki’s flamboyant and  fantastic writing in tamil… 


Kundavai & Vanthiyathevan
Kundavai & Vanthiyathevan

Part 1  

வந்தியத்தேவன்குந்தவைமேல்கொண்டகாதல்

விபத்து  என்பார்களே… அது  இதுதானோ? …

அதுவும்  விபத்தின்  முடிவு  இன்பமானதாக  இருந்துவிட்டால்?  …

அதுதான்  நம்  நாயகனுக்கு  நேர்ந்தது… குடந்தை  ஜோதிடர்  வீட்டில்  அவன்  கண்டது  என்ன? சோதிடரையா? வானதியையா? இல்லவே  இல்லை … குந்தவையின்  பொன்முகம்  ஒன்றைத்தான் … ஆயிரம்  காவியங்கள்  புகழ்ந்து  பாட  ஒண்ணாத  அவள்  அழகிய  திருமுக  மண்டலத்தைத்தான் … அதுவரை  அவனுக்குள்  இருந்த  இதயம்  வெளியேறி, அவன் எதிரில், வியப்பும், மகிழ்ச்சியும் ஒரு  சேரப்பொலிந்த குந்தவையின்பால் சென்று  கலந்தது…

அவள்  இளவரசியோ  அல்லது  சாதாரணபெண்ணோ, அந்த  நொடியில்  அவனுக்கு  அது எதுவுமே தோன்றவில்லை … அங்கே , அந்த  வேளையில் அவன்  இளவரசியை  சந்திப்பதை  எதிர்பார்த்திருக்கவும்  வாய்ப்பில்லை …. எத்தனையோ  போர்க்களங்களில், அவன்  எதிரிகளின்  கூரிய உலோக வாட்கள் சாதிக்க  முடியாததை, இப்பெண்ணின் கண்களாகிய வாள்கள் சாதித்து  விட்டனவே !!!  அவனை  அடியோடு  சாய்த்து  விட்டனவே !!! இதுதான்  இயற்கையின்  இணையில்லா வலிமையோ… இதுதான்  இன்ப  விபத்து  என்றால், எத்தனை  முறை  வேண்டுமானாலும்  இந்த  விபத்தில்  சிக்கிக்கொள்ளலாமே … என்று  எண்ணுகிறான்  நம்  நாயகன்.

ஆனால், அவள் இளவரசி என்று தெரிந்ததும், குந்தவைக்கு  வந்த  அதே  தயக்கம், இன்னும்  அதிகமாகவே  அவனுக்குள்  எழுந்து பாடாய்ப்படுத்துகிறது … தன் நிலை என்ன? அவள் நிலை என்ன? அரசர்கள்  எல்லாம்  அடிபணிந்து  சேவகம்  செய்யக்கூடிய  “அரசிளங்குமரி” எங்கே? அனாதையாய் பழங்குடியின் பெருமையை  மட்டும்  தாங்கியிருக்கும் தான் எங்கே? தனக்கென்று  ஒரு  நாடில்லை… ஏன்? சொந்தமாய் வீடு  கூட  இல்லை…  இது  பொருந்துமா? நடக்குமா? உலகம்  தான்  ஏற்குமா? என்று  அவனும்  பலவாறு  சிந்திக்கிறான் … ஒரு  பெண்ணின்  கண்களுக்கு  உள்ள  சக்தியை  எண்ணி எண்ணி வியக்கிறான்…. மனப்போராட்டங்களில் தன்  அமைதியை இழக்கிறான் …  ஆனாலும் அதில் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்து அதில் திளைக்கிறான் …

காதல் என்ற ஒன்றை இதுவரையில் அவன் கேள்விப்பட்டுதானிருந்தான்… ஆனால்  அதை இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறான் … ஒவ்வொரு முறையும் அவள் பொன்முகத்தில் தோன்றும் பலவகை பாவங்களில், அவள் தன்னை சிறிதளவேனும் விரும்புகிறாளா?  இல்லையா? என்ற கேள்விக்கான  விடையை தேட முயல்கிறான் .. ஆனால் அவள் கண்களை பார்த்தபின், தான் எங்கு இருக்கிறோம், என்ன  செய்கிறோம்,  என்ன எதிர்பார்த்து அவள் முன்பு இந்த நிமிடம் நிற்கிறோம் என்பதெல்லாம் அவனுக்கு எங்கே ஞாபகம் இருக்கின்றன? அவன்தான் தன்னையே அவளிடம் தொலைத்து விட்டானே…

அவள் தன்னை விரும்புகிறாள் என்பதை அவன் அறிவான் .. அவளும்  தான் அவளை நேசிப்பதை  அறிவாள்… எனவே, பெரிதாக பேசிக்கொள்ள ஒன்றும் இல்லை … ராஜாங்க  விஷயங்கள், பாண்டிய நாட்டாரின் சதிச்செயல்கள், பழுவூர்  இளையராணியின் பழிவாங்கும் படலம் இவற்றுக்கு நடுவே, காதல் கவிதைகள் புனைந்து மகிழ இருவருக்குமே நேரம் இல்லைதான்…. அதற்கான  சமய  சந்தர்ப்பங்களும் அமையவில்லைதான் ….

காவலர்களிடம் இருந்து  தப்பி வந்து அவசர அவசரமாக ஓலை கொடுக்க வேண்டும், திரும்ப உடனே புறப்பட்டு இலங்கை செல்லவேண்டும், பின்  திருடன் போல் பதுங்கிப்பதுங்கி மாறுவேடம் பூண்டு அவளை மீண்டும் வந்து சந்திக்க வேண்டும் .. அடடா .. எத்தனை இம்சைகள் .. இதற்கு நடுவே காதல் கீதம் பாட எப்படி மனமிருக்கும்?

இத்தகைய நெருக்கடிகளிலும் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட  நம்பிக்கையும், அன்பும் வலுவடைந்ததே தவிர நலிவடையவில்லை … சேர்ந்து இருக்கும் சமயங்களில், அவர்கள்  தங்கள்  காதலைப்பற்றி பேசியதைவிட, சோழ நாட்டைப்பற்றி கவலைப்பபட்டதுதான் அதிகம்…. ஆனாலும் அவர்கள் இருவரும் தங்கள் காதலின் மேன்மையை அறிவார்கள்… அதை வர்ணனைகள், வார்த்தைகள் எனும் மொழியின் சிறைகளுக்குள் அடைத்து வைத்து ரசிக்க இருவருமே விரும்பவில்லை !!! …

நாம் கூடத்தான் … சரி தானே?