ஆச்சார்யன் அனுக்ரஹத்தில் அடுத்து…
———————————
தசாவதார மகிமை !!!

ஆதியிலே அமரர்தமக் கெல்லாம் முன்னே
ஆழியிலோர் அற்புதமா மீனாய்த் தோன்றி
அண்டம னைத்தையு மழிவினின்று காத்த
அமலனவன் அரும்பாதம் போற்றி போற்றி !!

மாண்புடை அமரரோடு மாசடைந் தவுணர் கூடி
மாக்கடல் கடைந்தநாளில் மாதவத்தோ ரேத்தவந்து
மந்தார மலையதனை மகிழ்வோடு தாங்கிநின்ற
மாலவனின் மலர்ப்பாதம் போற்றி போற்றி!!

வண்மையொடு திண்மையும்சேர் வராகமாய் வந்தன்று
வல்லரக்கன் தன்னோடு வன்மத்துடன் பொருது
வனப்புடை நிலமகளின் வருத்தமதைத் தீர்த்திட்ட
வனமாலி வளர்பாதம் போற்றி போற்றி!!

அண்ட பகிரண்டமெலாம் அலறிய ரற்றிடவே
ஆறாச்சினத் தோடோ ரரியநர சிங்கமென்றே
அன்பனுக் கருளவே யக்கணமாங்கே நின்ற
ஆளரிநின் அருட்பாதம் போற்றி போற்றி!!

மூவடிமண் வேண்டிவந்த மூவாமுழுமுதலே – பின்
மூவுலகும ளந்துவென்ற முதுமுனியே !! மாவலியின்
கலிதீர்த்த கடுகனையக் கருணைக் களிறே
கள்வ ! நின் கவின்பாதம் போற்றி போற்றி!!

பரசுவதன் வேகமொடு பார்வையதன் கோபமதில்
பாவிகளைப் பலியிட்டப் பரம்பொருளே !! பண்டொருநாள்
தகப்பனின் கட்டளைக்குத் தாயையே தண்டித்த
தருமமே ! நின்பாதம் போற்றி போற்றி!!

தந்தைசொல் காத்தவனாம் தயரதன்தன் தலைமகனாம்
தரணியிலே தர்மமதன் தலைகாத்த மானுடனாம்
தலைவனுமாம் தொண்டனுமாம் தம்பியர்க்கு அண்ணனுமாம்
தயைக்கடலின் தண்பாதம் போற்றி போற்றி!!

அண்ணனாய்க் கண்ணனை அரவணைத்துக் காத்து
அனந்தனாய் அவனுறங்க அரவணை யாயிருந்து
உள்ளுறை மறைபொரு ளுணர்த்திநின்றிட்ட – எம்
உடையவரின் உயர்பாதம் போற்றி போற்றி!!

கள்வரிலும் கள்வனான கார்முகிலின் வண்ணனான
கஞ்சனுக்குக் காலனான கருணைமிகு தோழனான
பாண்டவர்க்குத் தூதனான பாதை சொன்ன மேதையான
பார்த்தசாரதி பைம்பாதம் போற்றி போற்றி!!

கலிமுடிக்க வெண்பரியான் கண்ணெதிரே வந்திடுவான்
கல்கியெனும் பெயருகந்து யுகமுடித்து வென்றிடுவான்
அதர்மத்தை வேரறுத்து அறமதனை நேர்நிறுத்தும்
அமரர்கோன வன்பாதம் போற்றி போற்றி!!

—————————-
தேசிகர் திருவடிகளே சரணம்….