ஆச்சார்யன் திருவுள்ளம்…
————————————————————————————
திருவரங்கம்

தித்திக்கும் கவியமுதும் தீந்தமிழும்
தினந்தோறும் கேட்குமெங்கள் திருவரங்கம் !!

கழனியில் களித்தாடும் கயல்களோடு
கமலமும் கண்சிமிட்டும் கவினரங்கம் !!

தெங்கோடு கன்னலும் காவிரியும்சூழ
தேவுலகைப் பழிக்குமித் தேனரங்கம் !!

பெரியாழ்வார் பெண்பிள்ளை பேரன்பால்
பெருமானுள் சேர்ந்திட்டப் பெருவரங்கம் !!

இரவியவன் குலத் திறைவனுடன்
இலக்குமியு மிலங்கு மின்னரங்கம் !!

விழிகொண்டு வீடணன் வீடுநோக்கி
விமலனவன் வீற்றிருக்கும் விண்ணரங்கம் !!

பாணர்மகன் பத்துக்கே பரமபதம்
பரிசளித்து விட்டதெம் பண்ணரங்கம் !!

பதினோரு ஆழ்வாரும் பாடிப்பாடி
பரவசக்கூத் தாடிநின்ற பாட்டரங்கம் !!

இருநூற்று நாற்பத்தி யேழுடனே
ஈடின்றித் திகழுமெங்க ளிசையரங்கம் !!

உற்றாரை யுவக்குமந்த உத்தமனே
உயிர்கொண் டுறைகின்ற உயரரங்கம் !!

சேராத செல்வமும் சேர்ந்திருக்கும்
செழிப்புடைய தெங்களின் செவ்வரங்கம் !!

தனக்கென்று வாழாவெம் பெருமானார்
தவயோகி வாழ்ந்திருக்குந் தனியரங்கம் !!

எதிராசர் தானான திருமேனி
ஏற்றமாய் விளங்குமெம் மெழிலரங்கம் !!

ஆழ்வாரோ டரையரோ ராயிரம்பேர்
அகமகிழ்ந்து அனுபவித்த அணியரங்கம்

நம்பினோர்க்கு நற்கதியே நல்குமெங்கள்
நம்பெருமாள் நடுவிருக்கும் நல்லரங்கம்

————————————————————————————
தேசிகர் திருவடிகளே சரணம்….