tamil

Tamil is one of the most beautiful and phonetically enchanting languages in the world… 

உலகிலுள்ள அழகான மொழிகளில் (பொருளில் மட்டுமல்ல… வடிவிலும்) தமிழும் ஒன்று…  எத்தனை விதமான ACCENTS எனப்படும் பலவித வட்டார வழக்குகளில் நாம் தமிழை ரசித்திருக்கிறோம்…

“ஏனுங்க” ன்னு மரியாதையான வார்த்தையக் கேட்டாலே  தெரிஞ்சிக்கலாம் அது கொஞ்சும் “கொங்கு தமிழ்” னு… “லே… என்னாலே” ன்னா அது கண்டிப்பா தெற்கத்தித் தேன்தமிழ் னு தெரிஞ்சிக்கலாம்…  “நீ ஏலே கெடந்து சலம்புத…” ன்னு அவங்க கேக்கறதே ஒரு அழகு…  “புள்ளும் சிலம்பினகாண்” என்ற ஆண்டாளும் தெற்கத்திப் பெண் தானே…

இதே போல பழங்காலத் தொண்டை நாடு, சோழ நாடு, பல்லவ நாடு  ( இன்னாபா, துன்ட்டியா,  வந்துகினியா ன்னு கேக்கற சிங்காரச் சென்னைத் தமிழ் உட்பட)  என ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனிச்சிறப்பான தமிழை அனுபவித்தோம்…

கன்னித்தமிழ் முதல் கணினித்தமிழ் வரை தமிழின் பயணம் வியப்புக்குரியது… ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு எழுத்துக்கும் அதற்குரிய மதிப்பும் உள்ளது. எந்த வார்த்தையில், எந்த எழுத்து வர வேண்டும் என்பது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு…

அவற்றில் முக்கியமானவை…

“ல”, “ள”, “ழ”  கரங்கள்…

மற்றும்

“ன”, “ண”, “ந” கரங்கள்…  

 

இவற்றை தவறாக உச்சரிக்கும் போது காதில் தேன் வந்து பாயாது… தேள் கொட்டுவது போல்தான் இருக்கும்…

ஆனா இந்த காலத்துல இதையெல்லாம் யாரு பாக்கறாங்க??

தமிழ் மேல தண்ணி லாரிய விட்டு ஏத்தறாங்க…

தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என மெல்லிசை மன்னர் திரு. MSV அவர்களால் தான் திருப்பி அனுப்பப்பட்டதையும், பின் கடும் பயிற்சிக்குப்பின் அவரிடமே பல பாடல்களைப்  பாடியதையும் “பாடும் நிலா பாலு” அவர்கள் சொல்லி இருக்கிறார்.

அவரே,  இசைஞானி இளையராஜா வார்த்தை உச்சரிப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் சரியாக வரும் வரை விடவே மாட்டார் என்றும் சொல்லி இருக்கிறார்… இசைஞானியின் இசையில் பாடும் இந்தி மொழிப்பாடகர்களோ, பாடகிகளோ கூட அதற்கு விதி விலக்கல்லர்…

ஆனா… இந்த காலத்துல நம்ம …

கொலவெறி-தமிழ்
செல்பிபுல்லத்-தமிழ்
லூசுப்பென் -தமிழ்
TVகாம்பியர்-தமிழ்

என வித விதமாக அனுபவிக்கிறோம்…   (கருமம் டா…)

எங்க ஏரியா உல்ல வராத…

ன்னு பாடக்கேட்டா உள்ளயே போய் நல்லா நாலு சாத்து சாத்தலாம்னு தான் தோணுது…

லூசுப்பென்னே, லூசுப்பென்னே

அப்புறம்

வச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்“குல்ல”

ன்னு பாடினா,

சத்தியமா, உன் “மண்டைக்குள்ள” ஒண்ணுமில்ல !!!

ன்னு தான் எனக்குப் பாடத்தோணுது…

எங்கெங்கெல்லாம் பாடல்களில் சில வார்த்தைகள் வருதோ… உதாரணத்துக்கு

உ”ல்லு”க்கு”ல்ல”
கோயில் ம”னீ ”
து”ல”சி மாடம்
உனக்கு”ல்” நானே
நெஞ்சுக்கு”ல்ல”
மனசுக்கு”ல்ல”
உ”ல்ல”த்தை 

 

என உச்சரிக்கப்படும் போதெல்லாம்… ஏன்டா தமிழ் தெரிஞ்சுருக்கு நமக்குன்னு கடுப்பு தான் வருது…

ஏதோ ஒரு சிலபேரைப்பற்றி மட்டுமே சொல்வதாக நினைக்க வேண்டாம்… இவை அனைத்துமே வெறும் ஒரு சோறு தான்…

அவர்கள் தமிழில் பாடுவதையோ, அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளையோ கட்டாயம் வரவேறக்கத்தான் வேண்டும்.

இசையமைப்பாளர்கள் தான் அவர்களின் வார்த்தை உச்சரிப்புப் பிழைகளுக்கு முழுக்க முழுக்கப் பொறுப்பு…

ஆனா இப்படி கொடுமையா உச்சரிச்சு பாடறதுதான் “இன்னிக்கி ட்ரெண்டு” அப்படின்னு அவங்களும் அப்படியே பாடி மத்த பாடகர்களையும் உசுப்பேத்தி விட

அதையும் நம்ம கேக்க நேரும் போது தான் தமிழனாப் பொறந்தது தப்போன்னு தோணுது…

இது ஒரு பக்கம்னா…

டிவில காம்பியரிங்னு சில “&&&&&&&&” கள் வருதுங்க பாருங்க….

அய்யய்யோ அதப்பத்திப் பேசினா தேவை இல்லாம நம்ம BP தான் ஏறுது… என்ன காலக்கொடுமைடா இதுன்னு நொந்து போறோம்…

தொல்காப்பியத் தமிழை விடச் சிறந்தது 

“தொகுப்பாளினிகள்”   தமிழ்…

ஹாய்… என்ன “பன்றீ”ங்க       (ஏய்… யாரச் சொல்ற???)

அப்படின்னு அவங்க சொல்றதே அவங்க கிட்ட ஒருதடவயாவது டெலிபோன்ல பேச 15  நாள் மாங்கு மாங்குன்னு முயற்சி பண்றவங்களத்தானோ அப்படின்னு தான் எனக்கு தோணுது…

புற்றீசல் மாதிரி புறப்பட்டு வர்ற இந்த மாதிரி
புண்ணாக்குகளால நமக்கே தமிழ்  மறந்துடும் போல… 

அப்படிப் பேசினாதான் வாய்ப்பு கெடைக்குது… TV Channel காரங்க அதத்தான வேணும்னு கேக்கும் போது, பொழப்புக்கு என்ன பண்றது? அதே “@@@” போல சாக்கடையில்  இறங்க வேண்டியது தான்…

“மைக் கெடைக்கற வரைக்கே நல்ல வடிவான தமிழில் தான் கதைக்கிறீர்கள் ஆனால்,
மைக் கையில் கிடைத்ததும் வேறு மாதிரி பேசி தமிழைக்  கொலை செய்கிறீர்கள் தானே”  

எனக் கேட்பது உண்மையே…

ஆனால், சகலகலா வல்லவனின் சத்புத்திரியே… 

“உல்லம் துல்லுமா”  

ன்னு பாடிக் கேக்க மனசு வலிக்கத்தான் செய்யுது…
“எலந்தக் காட்டில் பொறந்தவதானே”… அப்படின்னு ஒரு பாட்டு ஞாபகம் வருது…

அப்பாவுக்கு AMERICAN  ACCENT சொல்லிக்குடுத்தியே
அழகு அம்மணி, அதே அப்பாகிட்ட
அழகான தமிழ் உச்சரிப்பையும்
அப்பப்போ கொஞ்சம் கத்துகிட்டா என்னன்னு கேட்கத்தோணுது… 

“அடப்போய்யா… இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்க நீ… இந்த மாதிரி பேசறது தான் இந்த கால ஸ்டைல்” னு இளைய தலைமுறையில் சிலர் கூறுவது என் காதில் விழாமல் இல்லை…

ஆனால், இந்த பதிவைப்படித்த பின்
ஏதேனும் “ஒருத்தரின்” உச்சரிப்பு மாறுமேயானாலும்,
அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே…

 

———————————————————————————–