இராசி பலன் (Rasi Palan) 

grandparents_family_portrait_cartoon1_t750x550

இராமுவுக்கு ஒரு பெருத்த சந்தேகம்… தனக்குள்ளேயே பேசிக்கிட்டான்…

தினமும் காலங்காத்தால டிவியில வர்ற இராசிபலன்கள்ல அப்படி என்னதான் இருக்குமோ தெரியல…

ஏன், அம்மா அத மட்டும் மறக்காம பாக்கணும்? 

நான் பொதுவா இந்த மாதிரி ராசி பலன்கள் பத்தி கவலைப்படறதில்ல… ஆனா என் ராசி வரும்போது மட்டும் கொஞ்சம் கவனமா கேக்க முயற்சி பண்ணுவேன்… ஆனா 12 ராசிகளையும் விடாம பாக்கறாளே…

எதுக்குன்னு பல தடவை யோசிப்பேன்….

அதேபோல கோவிலுக்குப் போனா அர்ச்சனைத் தட்டு வாங்கி கொறஞ்சது ஒரு 10 பேர், நட்சத்திரமாவது சொல்லுவா…

அம்மா, ஒரு சீட்டுக்கு ஒரு பேர் தான் சொல்லலாம்னு போட்டுருக்குமா… அர்ச்சகரும் எதோ பரவாயில்லன்னு பண்றாரு… போதும்மா… உன்னோட பேரன் பேத்திகள் இருக்காங்க இல்ல… அப்புறம் மத்தவங்க பேர் எல்லாம் ஏன் சொல்ற…. 

அது மட்டுமில்லாம… நீ சொல்ற பேர் எல்லாம் இப்போ நம்மகூட கோவிலுக்கு வந்திருக்காங்களா? இல்ல வரத்தான் போறாங்களா? இல்லையே… பின்ன எதுக்கு? இப்போ கூட யார் யார் வந்திருக்காங்களோ அவங்க பேர் மட்டும் சொன்னாப் போதுமே …”

அப்படின்னு பல தடவை சொல்ல நெனச்சிருக்கேன்…

கொஞ்சம் ஆழமா யோசிக்கும் போது தான் எனக்கு பளிச்சுன்னு வெளங்கிச்சு…

ஒரு நாள்ல எத்தன தடவ…

“டேய் பாவம்டா  கிருஷ்ணன்… மகர ராசி இல்ல அவன்… குருபலன் இருக்கு ஆனாலும் கல்யாணம் அமைய மாட்டேங்குது… நல்ல பையன்…

இந்த காலத்து பொண்ணுங்களுக்கும் அவங்களப் பெத்தவங்களுக்கும் நல்ல குணம் எங்க தெரியுது? இந்த மேட்ரிமொனியல் வெப்சைட்ல பாத்தா எல்லாரும் டபுள் டிகிரி வேணும், BE படிச்சிருக்கணும், சொந்த வீடு இருக்கணும், ஒரே பையனா இருக்கணும், நாத்தனார், மாமியார் தொல்லை இருக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போடறாங்க… ம்ம்ம் அவன் கல்யாணந்தான் பாக்கி…”

“பாவம்…  மல்லிகா, ரிஷப ராசிகாரி அதான் ஏழரைச்சனி போட்டு வாட்டுது… வயசான காலத்துல எப்படி கஷ்டப்படறாளோ…”  

“செவ்வாய் தோஷம் இருக்கறவங்களுக்கு கூட இந்த குரு பெயர்ச்சி நல்ல இருக்குமாமே? அப்பாடா… இந்த பத்மினிக்கு ஒரு நல்ல மாப்ள அமைஞ்சான்னா போதும்டா…” 

“ரேகாவுக்கு பையன் பொறந்திருக்கானாம். மிதுன ராசி… அவ அம்மாக்கு கூட மிதுன ராசி தான்… பேரனுக்கும், பாட்டிக்கும் ஒரே ராசி…ரொம்ப சந்தோஷம்…” 

நான் பல சமயம் நெனைப்பேன்…

“உனக்கு இருக்கறதோ ரெண்டு பசங்க… என் அண்ணனுக்கும் கல்யாணமாகி கொழந்தைங்க இருக்கு.

எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா (கல்யாணமாகித்தான்…)   

எல்லாரும் கடவுள் அருளால நல்லா வசதியாத்தான் இருக்கோம்… ஆனாலும் தேவை இல்லாம நீ எதுக்கு மத்தவங்களப் பத்தி கவலைப்படற… சில பேர் உன்னப்பத்தி கவலைப்படறாங்க… இல்லன்னு சொல்லல… அவங்களப் பத்தி பேசு, நெனச்சிக்கோ…

ஆனா மத்தவங்கள? 

கடன் கேக்க வந்துட்டு எகத்தாளமா பேசிட்டுப் போனவங்கள… 

சாவு காரியம் நடக்கற வீட்ல தண்ணியப் போட்டுட்டுவந்து பிரச்சினை பண்ணவங்கள…

கம்மி சம்பளத்துலயும் தன் குடும்பத்தோட இன்னும் ரெண்டு குடும்பங்களையும் அந்த கொழந்தைங்களையும் கூடவே வச்சு பராமரிச்சு…

நீயும் ஆரம்பத்துலேந்து  பொறந்த வீடு, புகுந்த வீடுன்னு பாரபட்சம் பாக்காம எல்லாருக்கும் உதவி செய்ய ஒத்துழைச்ச என் அப்பாவையே முன்கோபக்காரன், சிடுமூஞ்சி ன்னு திட்டினவங்கள…

எல்லாம் எதுக்கு நெனைக்கணும்? 

உனக்கு என்ன நாட்டாமைன்னு நெனப்பா? எதுக்கு மத்தவங்க பிரச்னையை உன்னோடது போல கவலைப்படற”

அப்படின்னு பல தடவை நேரிலேயே கேட்டிருக்கிறேன்…

ஆனா… எப்பவும் நீ சொல்ற ஒரே பதில்…

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை…

நானும் உன் அப்பாவும் சின்ன வயசில எவ்வளோவோ கஷ்டப்பட்டிருக்கோம், இவங்க எல்லாரும் ஏதோ ஒரு விதத்துல நமக்கு help பண்ணிருக்காங்க… அட ஒண்ணுமே செஞ்சிருக்கலன்னாக்கூட நம்மால முடிஞ்ச  அளவு நாம் உதவி செய்யலாம். இல்ல, குறைந்தபட்சம் அவங்களுக்காக பிரார்த்தனையாவது செய்யலாமே… “

இப்போ புரியுது…

நீ பெத்த புள்ளைங்க மட்டுமில்லாம… நம்ம குடும்பத்துல, சொந்தத்துல, நட்பு வட்டத்துல நெறையப் பேர், நீ அவங்களுக்கு, சித்தியோ, மாமியோ, நாத்தனாரோ, பிரெண்டாவோ, ஏன் தங்கையாவே இருந்தாலும், 

ஏன், உன்ன “அம்மா” (ஸ்தானத்துல) ன்னு கூப்பிடறாங்கன்னு… 

எங்க வாழ்க்கை ஏன் நல்லா இருக்குன்னு… 

நெனச்சிக்கிட்டே ஆபீஸ் கெளம்பினான்…

———————————————–