bharatha

சட்டென தன் மீது விழுந்த மழைத்துளியால் கவனம் மீள்வரப் பெற்று ஆகாயத்தைப் பார்த்தான் பரதன்.

மழையா? இராமன் இல்லாத இந்த பூமியிலாஅவன் இருந்தவரை அள்ளிக்கொடுத்த இயற்கையால் மும்மாரி பெய்த பூமியில் இன்று ஆவாரம்பூ தானே முளைத்துக்கிடக்கின்றது. அறத்தின் வடிவான தந்தையும் போனபின் என்ன புண்ணியம் மிச்சம் இந்த மண்ணில்? புன்னகையையே பொன்நகையாகப் பூண்டிருந்த மக்கள் முகத்தில் இன்று துயரத்தின் வடுக்களே மிஞ்சியிருக்கிறன. சந்தோஷப் பெருக்கெடுக்கும் சரயூ  இன்று வெறும் சஞ்சல ஓடையாக மாறிவிட்டதே

வரங்களென்று வாங்கி வம்சத்திற்கே என்னை வசையென வாழ வைத்துவிட்டாளே !! எத்தனை ஜன்மம் எடுத்து அந்தப் பாவத்தைக் கழுவுவேனோ

என உள்ளுக்குள் பொங்கும் எண்ணங்களோடு போர் புரிந்து கொண்டே, பரதன் நன்கு காய்ந்த மரக்கட்டைகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து பொறுக்கி வருகிறான். அவன் பின்னே சற்று தள்ளி அவன் சொன்னபடியே ஏன் என்னவென்று கேளாமல் சத்ருக்னனனும் காய்ந்த மரக்கட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.

ஆயிற்று நாளையோடு பதினான்கு ஆண்டுகள். என்னைப் பீடித்த பழிச் சொல் அழியும் காலம் கனிந்து விடும் நாளையோடு. ஒன்று அண்ணன் வந்து இந்த ஆட்சியை ஏற்கவேண்டும். இல்லையேல் நான் இந்த தீயில் விழுந்து மடிய வேண்டும். எதுவாகினும், எனக்கு விமோசனமே. ராஜ்ஜியத்தில் நாட்டமின்றி அண்ணனுக்காகவே வாழ்ந்து உயிர் துறந்தான் எனும் புகழே எனக்குப் போதுமே.

அதுசரி, தம்பி சத்ருக்னனைப் பற்றி நான் எண்ணவில்லையே? எவ்வாறு இளையோன் லக்ஷ்மணன் இராமனின் பின்னே சென்று அவன் அனுபவிக்கும் எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவிக்கிறானோ, அதே போலல்லவா இவனும் எனக்காக மன்னன் மகனாய்ப் பிறந்தும், மரவுரி தரித்து, மண்ணில் படுத்துறங்கி, சந்நியாசி போல வாழ்கிறானே. என்ன கைம்மாறு செய்வேன் இவனுக்கு?

என பரதன் எண்ணிக்கொண்டே தம்பியைப் பார்த்து கேட்கிறான்.

சத்ருக்னா, கட்டைகள் எதற்கு என கேட்கவில்லையே நீ?

“தெரியும் அண்ணா! உன் சபதம். “

அதிகம் பேசுபவனில்லை அவன். பேசினால் அதில் அர்த்தம் நிறைந்தல்லவோ இருக்கும். அவன் அன்னையைப் போல. அவளல்லவோ அன்னை!! ஆஹா!!

சத்ருக்னா, நாளை எப்படியும் எனக்கு ஒரு விடிவு வந்துவிடும். ஆனால், உனக்கு நான் பட்ட கடனுக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 

அண்ணா! பிறந்த நாள் முதல் அன்னை எனக்கு சொல்வது ஒன்றே தான். பரதனுக்கு நீ நிழல் போன்றவன். அவன் அழுதால் அழு. சிரித்தால் சிரி. அவனுக்கு சேவை செய்வதே உன் பிறவிப்பயன் எனச் சொல்லிச்சொல்லித் தானே வளர்த்தாள். அதனால் தானே இலக்குவன் வனம் ஏகினான். என் கடமையையே நான் செய்கிறேன். அதில் நீ எவ்வாறு கடன் பட்டவனாகிறாய்?

இல்லை தம்பி! ராஜ்ஜியசெல்வத்தால் கூடப் பிறந்தோர் கூடப் பகைவராக மாறும் நிலை வரலாம். வரும் யுகங்களில் அது நடக்கும். ஆனால் என் சபதத்தால் உன்னை இவ்வாறு சிரம்ப்பட வைக்கிறேனே!!

தம்பி,  எவ்வளவு ஆண்டுகளாயிற்று பழைய மாதிரியான அயோத்தி நகரத்தைக் கண்டு. இப்போது நான் காண்பது அயோத்தியா? இல்லவே இல்லை. இந்திரனின் அமராவதிப்பட்டினம், குபேரனின் அழகாபுரி இன்னும் பிரபஞ்சத்தில் உள்ள என பிற மகா நகரங்களையெல்லாம் விஞ்சும் வகையில் அல்லவா இருந்தது அயோத்தி. செல்வச் செழிப்புக்கும், அறத்துக்கும், மக்களின் மகிழ்ச்சிக்கும் அளவின்றி அனைவரின் கண்படவல்லவோ வாழ்ந்து வந்தோம்?

இந்திரன் வந்திருந்தபோது அவன் வியந்தல்லவா போனான்?

தசரதரே நான் என் அமராவதிக்கிணையான வளமும், வனப்பும் எங்குமேயில்லை என்ற இறுமாப்புடன் இருந்தேனே! இன்று உங்கள் அயோத்தியின் ஐஸ்வர்யம்  என் கர்வத்தை தூள் தூளாக்கிற்றே!” 

இந்திரா! அறமென்னும் அஸதிவாரமதில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தழைத்தோங்கும் ஆல விருட்சம் எங்கள் இஷ்வாகு குலம் என நீ அறிவாயல்லவா? ஆட்சியும், அதிகாரமும் அரசனுக்குப் பொறுப்புகளே என்றுணராமல் ஆணவத்தில் நீ ஆடினாயே. அதனால்தான் சம்பராசுரனை அழிக்க உனக்கு என் சகாயம் தேவைப்பட்டது. இது என் பெருமை அன்று. என் முன்னோர் செய்த புண்ணியங்களும், எம் குல தெய்வமும் தாம் எனக்கு அரணாக இருந்தன

என உரைத்தாராமே என் தந்தை. அன்று அவருக்குத் துணையாய் என் குல வீரமும், மானமும் காத்திட்ட என் அன்னை… சீ சீ.. அப்படிக் கூப்பிடவே கூசுகிறதே… மனம் பிறழ்ந்து இப்படி ஒரு வரத்தை என் தந்தையிடம் கேட்டாளே. அடடா!! கேகயன் வம்சத்திற்கே தீராப்பழி உண்டாக்கி விட்டாளே…

ஓங்கிய பெரும் காடுகளையே அழிக்கும் சிறுதீக்குச்சியைப் போல வந்தாளே கூனி என் குலத்தில். அவளால் தானே… இன்று நீயும் நானும் இங்கே. நம் பிரிய சகோதரர்கள் எங்கோ வனத்திலே.

அண்ணா பண்டித சிரோமணியான, வேதம் முற்றும் கற்றறிந்த நீயா இப்படிப் பேசுகிறாய்? பரந்தாமனே உலகை ஆள்பவன். அவன் ஆணைப்படியே சர்வமும் நடக்கின்றன என நான் உனக்கு நினைவூட்ட வேண்டுமா?

ஆனாலும், சகுனங்கள் சதி செய்து, நாளை நம் தமையன் வரவில்லையென்றால் நான் தீயில் பாய்வேன். நீ என் செய்வாய்?

என்ன கேள்வி இது அண்ணா? என்ன செய்வேன் என நீ நினைக்கிறாய்? இலக்குவனிடம் ராமன் இப்படி வினவினால் என்ன சொல்வானென எண்ணுகிறாய்?

சரிதான் சத்ருக்னா !! ஆனால் நான் எதற்கும் தயார். என் வார்த்தையிலின்று நான் பின் வாங்க மாட்டேன். என் தாய் என் மேல் வைத்த வரமெனும் தீயை, நான் நாளை வளர்க்கப்போகும் தீயில் எரிப்பேன்.  ஆனாலும், என் பாவம் என்னைப் பின் தொடருமே. இராமன்  கானகம் செல்ல நானும் காரணமன்றோ?

தமையனே! அவன் அவதார நோக்கமென்னவென்று உணரவில்லையா நீ? அந்த ராகவ சிம்ஹம்  நினைத்திருந்தால், ஒரு ஹூங்காரத்தில், இந்த அண்ட சராசரங்களையும் பொசுக்கி விட முடியாதா? ஒரு சிறுபிள்ளைக்காக தூணைப்பிளந்து தோன்றியவனல்லவா? அன்பர், அமரர், அடியவர் துயரம் தீர்க்க அவன் இவ்வளவு சிரமப்படவேண்டுமோ?  அன்னை சீதை சக்தி அளப்பரியது அல்லவா? அபலையாய் இராவணனிடம் சிக்கிக்கொண்டாளென எண்ணுகிறாயா?தேவர், அமரர் வேண்டுகோளுக்கு இணங்கி அல்லவோ இந்த அவதாரமே நிகழ்ந்துள்ளது.

rama-killing-ravana

சரி தான் தம்பி. ஆனால், இராமன் காட்டுக்குச் சென்று தான் இதைச் செய்ய வேண்டுமா? அயோத்தியின் அரசனாகப், படை நடத்தி பகை அழித்து அறம் காத்து அமரர்க்கு அமைதி அளித்திருக்கலாமே !!

அண்ணா நன்றாக எண்ணிப்பார். மனித உருவில் வந்த மகாதேவனே அவன். அவன் வாழ்க்கையே அவன் செய்தி. இதெல்லாம் அவன் சங்கல்பமே அல்லவா?

வெறும் மானிடனா அவன்? நமக்கு தமையனாகப் பிறக்க வந்த தாமோதரன். உந்தியில் பிரமனை உருவாக்கிட்ட உயர்பரம்பொருள். நடப்பதெல்லாம் அவன் நாடகமே. அதில் நமக்கு பங்கேற்க வாய்ப்பளித்ததே அவன் அளவற்ற கருணையால்தானே!நாமெல்லாம் வெறும் கருவிகளே. அவன் நடத்தும் நாடகத்தில் நடிகர்களே.

இஷ்வாகு குலதனமான அந்த பெரிய பெருமாள் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். நம் அண்ணனுக்கு தோல்வி என்பதே இல்லை. அத்தகைய திறன் ஈரேழு பதினாலு லோகத்திலும் உள்ள எவருக்கும் இல்லை.

இவை எல்லாம் விட, விலைமதிப்பிலா அதிசயப் பொருள்,  ஆயிரம் யுகங்கள் தவம் செய்தாலும் கிடைக்காத அரிய பொக்கிஷம், அகில உலகிலும் அமரர், தேவர், தவசிரேஷ்டர்கள் எவருக்கும் கிட்டாத பாக்கியம் அல்லவோ உனக்குக் கிடைத்தது, அண்ணா !!

bharath

இராமன் உனக்கு அழியாப் புகழ் மட்டுமல்ல இனி பிறவா வரமன்றோ அளித்துள்ளான். பாதுகா சம்பந்தத்தினால்.

எப்படிச் சொல்கிறாய் தம்பி?

அண்ணா! பொதுவாக உலகில் அடமானமாக வைக்கப்படும் பொருள்  விலை உயர்ந்ததாகத் தானே இருக்கவேண்டும். அப்படிப்பார்த்தால், இராமனை விட அவன் பாதுகைகளுக்கு உயர்வல்லவா? நித்தியசூரிகளுக்கும் கிடைக்காத பாக்கியம் பாதுகா கைங்கர்யம் அது உனக்கு வாய்த்ததே !!

பார்த்தாலே பாவம் தொலைக்கும் பாதுகைகளை உன்னிடத்தில் அடமானம் வைத்துவிட்டல்லவோ தமையன் இராமன் கானகம் ஏகினான். உலகையே அளந்து நின்ற அவன் திருப்பாதங்களைத் தாங்கும் திருப்பாதுகைகள் உன்னிடத்திலல்லவோ இன்று உள்ளன. அதை மீட்க அவன் கட்டாயம் வருவான். கலங்காதே!!

உண்மை தான் சத்ருக்னா !! மேலே பார், இத்தனை வருடங்களாய் இத்திக்கை திரும்பிப் பாராத வருணதேவன், ஏன் இன்று இப்படிக் கார்மேகத் திரளாய் வந்து நிற்கவேண்டும்? நம் தமையனின் நல்வரவைத் தான் சூசகமாக அறிவிக்கிறாரோ? இங்கே பார், என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு மெல்லிய இன்ப உணர்வு பரவுகிறது. இதன் காரணமென்ன?  அண்ணன் நாளை கட்டாயம் வருவான் தம்பி! நான் நம்புகிறேன்.

அண்ணா!! என் உள்ளுணர்வும் அழுத்தமாகச் சொல்கிறது. நாளை வரும் நல்ல செய்தி என்று. அற்புதன் ஒருவன் அதைக் கொணர்வானென்று. அண்ணலும், அன்னையும் அவன் பின்வருவரென்று.

ஆமாம் தம்பி, உன் வார்த்தைகள் நம்பிக்கையூட்டுகின்றன. நல்ல செய்தியை எதிர்பார்த்து நாம்  இருப்போம்.

நாளை விடியும் சூரியன் நமக்கு நல்வழியை நல்கட்டும். வா செல்வோம். !!

———————–

ஆசார்யன் திருவடிகளே சரணம்