koodu

 

 

திவ்யா. பேரைக்கேட்டதும் எதோ இளம் வயது சிட்டு எனத் தோணலாம். இவளும் அவ்வாறு இருந்தவள் தான். ஆனால், காலவெள்ளத்தில் எல்லாரையும் போல் அவளும் முதுமையடைந்து இன்று பேரில் மட்டுமே இளமை ஒட்டிக்கொண்டுள்ளது. அவளும் இப்போது  பில்டரில் டிகாஷன் இறங்கியபின்னர் இருக்கும் ஊறின காபிப்பொடியைப்போல் பிரயோஜனமின்றி ஒட்டிக்கொண்டிருக்கிறாள். அவள் மருமகள் சொல்லி அவளது மகன் கொண்டு வந்து விட்ட காப்பகத்தில்.

 

திவ்யா அவள் குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் பலே கில்லாடி எனப் பெயரெடுத்தவள். “அக்கா, சீனியர், மாஸ்டர்” என அவளுடன் வேலை செய்த பல ஜூனியர்கள் அவரவர் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இவளிடம் ஆலோசனை கேட்டு  அவள் அட்வைஸே வேதவாக்கு என இருந்த காலங்கள் எல்லாம் உண்டு.

 

அவையெல்லாம் இன்று மனதில் ஒரு தனிமையான மூலையில் லேசாக எட்டிப்பார்க்க, அவள் தன் ரூம் வாசலையே ரொம்ப நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று வழக்கமாக அவள் பையனும் பேரனும் வந்து பார்க்கும் நாள். வாரம் ஒருமுறை முடிந்தால் பையன் வந்து பார்த்துவிட்டுப் போவான்.

அதுவும் அவன் “பலே பலே கில்லாடி” பொண்டாட்டி நல்ல மூடில் இருந்து, வேறு ஏதும் வீக்கெண்டு ப்ரோக்ராம் இல்லாமல் இருந்து, முக்கியமாக அவள் பெற்றோர் தங்கள் பேரக்குழந்தையோடு வழக்கமாக வெளியே செல்லும் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தால். எனவே வருவார்களா இல்லையா எனத் தெரியாமல் வழியையே பார்த்துக் கொண்டிருப்பாள். ஏனென்றால், அவன் தன்  மாமியார் வீட்டில் தான் குடி இருக்கிறான்.

 

“என் அப்பா அம்மா வீட்டில் தான் இருக்கணும். வேறு எந்த ஊருக்கும் வரமாட்டேன்” னு. கல்யாணம் ஆகும்போதே அந்தப் பெண் கறாராகச் சொல்லிவிட்டாள்

அதனால் என்ன? இரண்டு பெண் குழந்தைகள் உள்ள வீடாச்சே, இவன் அவர்கள் மருமகனாக அல்ல, மகன் போல இருக்கட்டுமே என எண்ணித்தான் திவ்யாவும் அதற்குச் சம்மதித்தாள். உண்மையில் அதற்காக இப்போது வருந்துகிறாள்.

 

மனது எருமை போல பழைய காலங்களை அசை போட்டது. அப்போது அவளுக்கு முப்பது, முப்பத்தஞ்சு வயதிருக்கும். குழந்தை ரொம்ப சின்னவன். மூணு வயசுக்குள் தான் இருக்கும். அப்போதெல்லாம் அவள் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள்.

அவளுக்கு வேலை என்றால் சுவாசத்தை விட முக்கியம்.

வாழ்க்கையில் தன்னை ஒருத்தர் மதிக்கவேண்டுமேன்றால் தனக்கு நல்ல குணங்கள், பழக்க வழக்கங்கள், சொந்த பந்தங்கள் எல்லாம் தேவை இல்லை, சம்பாத்தியம் வரும் ஒரு வேலை மட்டும் இருந்தால் போதும் என்பது அவள் தனக்குத்தானே பெற்ற ஞானோதயம்.

அவள் அப்பா “எக்காரணத்தைக் கொண்டும் வேலைய விட்டுடாதே. புருஷன், புள்ளைகுட்டி எல்லாம் வேலைக்கு அப்புறம் தான்”னு அவளுக்குப் படிச்சுப்படிச்சு சொன்ன  தாரக மந்திரம்.

சின்ன வயசிலிருந்து அவளுக்கு அவள் சொந்தக்காரர்கள் மேலேயே நல்ல அபிப்பிராயம் இல்லாமல் போனதற்கு அவள் பெற்றோரும் காரணம். எல்லா அத்தை, மாமாக்களும் சுயநலமாக நடந்து கொண்டனர் என்று அர்த்தம் படும் படியே அவள் முன்னேயே  சண்டை போட்டால் பின் அதைப் பார்த்து வளரும் குழந்தைக்கு வேறு என்ன மாதிரி எண்ணம் வளரும்?

 

ஆனாலும், அவர்கள் குடும்பத்துக்கு கவுரவம் மிக மிக முக்கியம் என்பதால், பட்டும் படாமல் இருக்க வேண்டும் என்ற படிப்பினை அவள் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது. அது கல்யாணத்துக்குப் பின் அவள் புருஷன் வீட்டாரையும் அவ்வாறே நினைக்கத் தூண்டியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மூக்குக் கண்ணாடி அழுக்காயிருந்தால், பார்க்கும் எல்லாமும் அழுக்காய் தானே தெரியும். அதனாலேயே அவள் தன மாமியார் வீட்டோடு பெரிதாக ஒட்டவில்லை.

 

அவள் நண்பர்கள் வட்டாரமும் கிட்டத்தட்ட இதே மனநிலையில் உள்ளவர்கள் தானோ என சந்தேகம் வரலாம். இருக்கலாம். யார்கண்டது. ஆனால், யார் என்ன சொன்னாலும் அது நல்லதா கெட்டதா என ஆராயும் அறிவு இவளுக்கு இல்லை எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், படிப்பில் சூரப்புலி, ஸ்டேட் ரேங்க் ஹோல்டர்.

ஆனால், இந்த கம்ப்யூட்டர் காலத்தில் படிப்பிற்கும் பண்பிற்கும் சம்பந்தம் இருக்கான்னு கேட்டால். கேள்வி தான் மிஞ்சும். அது இருக்கட்டும்.

 

இதோ வந்துவிட்டார்கள். பேரனும், பிள்ளையும் லேட்டாக. அதனால் வழக்கமான இரண்டு மணி நேரத்துக்கு பதில் இப்போது ஒரு மணி நேரம் தான் அவள் அவர்களோடு செலவழிக்க முடியும். இரண்டு மணி நேரம் என்பது அவள் மருமகளின் ஆணை. அதை மீற பையனால் முடியவே முடியாது. அவன் என்னவோ பார்க்க உற்சாகமாகத்தான் தெரிந்தான். ஆனால், சிரிப்பில் ஒரு வேதனை தெரிந்ததை உணர்ந்தாள். அம்மாவாச்சே?

 

பேரன் நன்றாக விளையாடினான். கண்ணாமூச்சி, ஹைபை, தாயம் எல்லாம். நடு நடுவே பையனோடு பேசினாள். அவனோ கையில் இருந்த செல்போனில் அடிக்கடி வரும் மெசேஜ்களைப் படிப்பதும், பதில் அனுப்புவதுமாகவே இருந்தான். இவளோடு சிக்கனமாக பேசினான்.

 

என்னப்பா எப்படி இருக்க? ன்னு கேட்டாள். பதில் இல்லை. “எப்படிப்பா இருக்க?” ன்னு மறுபடி சத்தமாகக் கேட்டாள்.“ஆங்! நன்னாருக்கேம்மா!” நிமிர்ந்து கூடப் பார்க்காமல் விட்டேத்தியாக பதில் வந்தது.

 

“குட்டி ஸ்கூலுக்கு ஒழுங்கா போறானா?” ன்னு கேட்டாள்.

இப்போது நிமிர்ந்து பார்த்தான். கடைசியாக மெசேஜ் வந்து மூன்று நிமிடங்கள் ஆகிவிட்டதே.

“போறாம்மா” ன்னு மெல்லிய சிரிப்போடு பதில் சொன்னான். கொஞ்சம் சந்தோஷப்பட்டாள்.

உடனே பீப் பீப் னு சத்தத்தோட மெசேஜ். ஒரு மைக்ரோசெகண்ட் பையன் முகத்தில் வேதனை. ஆயிரம் கத்திகள் உடம்பில் குத்தினால் ஏற்படும் வலியைவிட அதிகமாய்.

 

புரிந்து கொண்டாள். அவளுக்குப் புரியாமல் இருக்குமா? அவள் தான் இதெல்லாம் செவ்வனே செய்தவளாயிற்றே. அம்மாவையோ அக்காவையோ பார்க்கப் போகும்போதெல்லாம் தன் புருஷனுக்கு அரை மணி நேரத்தில் ஆயிரம் மெசேஜ் அனுப்பி அவனை துடிக்க வைத்தது அவளுக்கு ஞாபகம் வராமலா போகும்.

 

“உங்க வீட்ல எல்லாரும் உன்னை வலைபோட்டு இழுக்கறாங்க. ஒடம்பு சரியில்லன்னு பொய் சொல்லி.

உன்ன ஏமாத்தி நடுத்தெருவுல நிக்க விட்ருவாங்க.

நீ பாட்டுக்கு கெளம்பி போயிட்ட. வீக்கெண்டுல எனக்கு லோன்லியா இருக்கேனேங்கற கவலை இல்லாம. நீ இருந்தும் நான் லோன்லியா பீல் பண்ணா அப்புறம் என்னத்துக்கு நீ? 

நீங்க உங்க பேமிலி எல்லாம் ஒண்ணா இருக்கணும்னா என்ன டேஷ்க்கு என்னை கல்யாணம் பண்ணின?” 

 

என்றெல்லாம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் மொபைலில் டைப் பண்ணித் தள்ளின கைகள் இன்று நடுங்க ஆரம்பித்துவிட்டன.

 

பையன் எவ்வளவோ முயற்சி செய்தான் தன் வேதனையை மறைக்க. ஆனால், அம்மாவுக்கு தெரியாதா? வேறு வழி இல்லை. மறைக்க முயனறும் முடியாமல் அவன் எழுந்து புல்வெளிக்கு போய்விட்டான். அங்கு போனவனும் மெசேஜ் பார்த்து பதில் அனுப்பியவண்ணமே இருந்தான். பின் வந்து

“அம்மா லேட் ஆகிடுத்து. நாங்க வர்றோம்” னு சொல்லி பேரனைக் கூப்பிட்டுக் கொண்டு கிளம்பினான்.

 

“அடுத்து எப்போ வருவப்பா?” என்று கேட்டாள். “தெரியலம்மா. ஆனா ப்ரீயா இருந்தா கண்டிப்பா வருவோம் வராம போவோமா?” னு சுரத்தே இல்லாமல் சொன்னான்.

அவளுக்கு இதுவும் நன்றாகவே புரிந்தது. அதாவது அவள் மருமகள் ப்ரீயாக இருந்தால் என்று அர்த்தம். அவள் போடுவது தான் ப்ரோக்ராம்.

 

பின்னே இளமைக் காலத்தில் திவ்யாவே மாமியார் வீட்டில் அதிக பட்சம் இரண்டு மூன்று நாள் தான். அதுக்கு மேல் தங்கியதே இல்லை. புருஷனையும் தங்கவிட்டது இல்லை. பேரனைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். வேலைக்குப் போவது என்பது அடிக்கடி அங்கு போகாமல் இருக்க ஒரு நல்ல சாக்காக அமைந்துவிட்டதே. அதையே மருமகள் தனக்கு செய்யும் போது எப்படி குற்றம் சொல்ல முடியும்.

 

மவுனமாக கையசைத்தாள். காருக்குள் இருந்து கை ஆட்டின பேரனின் முகம் கண்ணுக்குள்ளேயே நின்றது. இன்னும் ஒரு அரை மணியாவது அவனுடன் விளையாடி இருக்கலாமே என்ற நினைவு அவளுக்கு துக்கத்தைத் தந்தது.

மனதின் மறுபுறம் ஏனோ மாமியார், மாமனார் முகங்கள் கணநேரம் வந்து போயின.

திரும்பி வந்து அமைதியாக தன் படுக்கையில் படுத்துக் கொண்டாள். மனமாகிய எருமை மீண்டும் அசை போட ஆரம்பித்தது.