image

ஆஷி மூஷி காமி காஷே? துமி சீட் ஏஷோ நம்பர்சே? அம்ரா இத்தி ஷேச்சே பைட்டோ போஷே? ரோஹோ தாமே தூஷி மாசீச்சே?

“டேய்! உங்க மனசுல என்ன தாண்டா நெனச்சிட்டுருக்கீங்க? எவனப் பார்த்தாலும் அவன் உங்க ஊர் பாஷை பேசுவான்னு அஸ்யூம் பண்ணிக்கிட்டு பேசுவீங்களா? ஏண்டா இப்படி டார்ச்சர் பண்றீங்க?”

——————-

என்ன இதெல்லாம்னு புரியாம முழிக்கிறவங்களுக்கு முதலில் இது தத்தம் தாய்மொழி மேல் கன்னா பின்னான்னு பற்று கொண்ட இரண்டு பேருக்கு மத்தியில் ஒரு விமானத்தில் நடந்த உரையாடல் எனத் தெளிவு படுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

ஏற்கெனவே நான் மூணு நாளா மீட்டிங், மீட்டிங்னு டின் கட்டின மாதிரி ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். இதுல நடு ராத்திரி கெளம்பற ஃப்ளைட், 12 கிலோ மீட்டர் தான் ஆனா 2 மணி நேரம் ஆகும்னு கூலா சொல்றவனுங்க, அந்த அளவு கொடுமையான சிட்டி ட்ராஃபிக், மகா மட்டமான ஒரு ஏர்போர்ட்டுல தமிழ்நாட்டில் இலவசப் பொருட்கள் வாங்க நிற்பது போல் ஒவ்வொண்ணுக்கும் நீஈஈஈஈள க்யூ என எல்லாம் தாண்டி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல சீட்ல விழுந்து சற்று கண்ண அயரலாம்னு நெனச்சா எல்லாத்துக்கும் சிகரம் வச்ச மாதிரி கடைசியில இவன் வேற.

‘ஓ! ஒரு தென்றல் புயலாகி வருதே’ ன்னு மலேசியா வாசுதேவன் ஹைபிட்ச்சில் பாடறாப்போல கோபம் கொப்பளிச்சுது. கவுண்டமணி மாதிரி “அதெப்படிடா என்னப் பார்த்து இப்படி கேட்ட நீயி?” ன்னு அவனை நான் கேக்க நெனச்சேன்.

மூணு நாளா பார்க்கறவனெல்லாம் மொதல்ல ஏதோ கடகடன்னு ராணி முகர்ஜி கமல் கிட்ட பேசறதாட்டமா ஒப்பிச்சிட்டு அப்புறமா “ஓ! உனக்கு எங்க பாஷை தெரியாதா? ஆனா நீ எங்க நாட்டுக்காரன் மாதிரியே இருக்கியே” (இருண்ட கண்டமான ஆப்பிரிக்கால கூட இப்படித்தான் சொல்லுவானுகளோ? இவனுக இம்சை தாங்கலடா. ராகவா, டாக்டர்கிட்ட போய் உன் கண்ண இல்ல ஃபுல் பாடியுமே மாஸ்டர் செக்கப் பண்ணனும் போலடா!) அப்படின்னு ஒரு சமாளிபிகேஷன் வேற.

விட்டா நீ எங்க நாடுதான்டான்னு தன் ரெண்டாவது சின்ன வீட்டோட மூணாவது கொழந்தையப் படுக்க போட்டு ஊர்வசி மாதிரி தாண்டி நிரூபிக்க இருந்தவனை தடுத்தாட்கொண்டு அவன் சீட்டுல போய் உட்காரச் சொன்னேன்.

“டேய்! எங்க முப்பாத்தா மேல ஆணையா நான் உங்க நாடு இல்லடா. உங்க பாஷை தெரியாதுடா.

அம்மா சத்தியம்டா!

அர்த்த ராத்திரியில

ஆகாய விமானத்துல

அக்கப்போர் பண்றீங்களே!

அடுக்குமாடா இது?”

ன்னு (வெ. ஆ. மூர்த்தி எபெக்ட்டில்) அழுதிருப்பேன்.

ஆனா, திடீர்னு ஒரு வேற ஒரு எண்ணம். இவனை இப்படியே விடக் கூடாது. அடுத்தவனுக்கு தன் ஊர் பாஷை தெரியுமா தெரியாதான்னு ஒரு நொடி யோசிக்கக் கூடத் தெரியாதவனுக்கு இப்படித்தான் புரிய வைக்கணும்னு நெனச்சு “நீ மட்டும் தான் எனக்கு புரியாத உங்க மொழியில் பேசுவியா! இப்போ பார்றா?” ன்னு அங்கேயே அப்படியே ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’ ன்னு ஏழெட்டு மனப்பாடச் செய்யுள் வாய் வரை வந்ததை அடக்கிக் கொண்டு மேற்கண்டவாறு சுருக்கமாக கதைக்கவும் செஞ்சேன்.

அந்த ஃப்ளைட்டில் வேறு யாருக்கும் தமிழில் ஒரு அக்ஷரமாவது தெரிந்திருக்கும் வாய்ப்பு என்பது இனிமேல் சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழவே விழாது என்ற அரசு அறிவிப்பு மக்களிடம் ஏற்படுத்தும் திடமான நம்பிக்கைக்கு இணையானது தான் என்ற தைரியத்திலேயே அவனிடம் அப்படிப் பேசினேன்.

உடனே அவன் முகம் நான் என் ப்ளஸ்டூ மேத்ஸ் கேள்வித்தாளைப் பார்த்த பார்வையை ஒத்து வெளிறியதையும் நான் கவனிக்கத் தவறவில்லை.

புரியாத மொழியில் (assumption இல்) ஒருத்தன் கிட்ட பேச ஆரம்பிச்சா அவனுக்கு எவ்வளவு பேஜாராக இருக்கும்னு இப்போ அவனுக்கு புரிஞ்சிருக்கும்ங்கற திருப்தியோட “கைப்புள்ள! இன்னும் ஏண்டா முழிச்சிட்டிருக்க? தூங்ஙங்ங்ங்ங்ங்ப்ப்ப்ற்ற்ற்ற்” ன்னு நான் நல்லா தூங்கிட்டேன். அவன் தூங்கினானோ இல்ல நான் என்ன சொல்லி இருப்பேன்னு மண்டையைப் போட்டு பிச்சிகிட்டு இருந்தானோ யாமறியோம் பராபராமே!!

Advertisements