air-hostess-82662

பிசினஸ் கிளாஸ்லயே போனாலும் ஆப்பு வைக்கறதுன்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டா அதை யாராலும் மாற்ற முடியாது.
இந்த ஏர் சைனா காரங்களுக்கு பூர்வ ஜன்மத்தையெல்லாம் தெரிஞ்சுக்கற பவர் இருக்குமோ? பாபி சிம்ஹா அப்பாவியா சொல்வாரே “பாஸ்! இவர்கிட்ட ஏதோ ஷக்தி இருக்கு”ன்னு அது மாதிரி?
நான் போன பிறவியில் ஆடாகவோ மாடாகவோ தான் இருந்திருக்கணும். பூர்வ ஜன்ம பந்தம் விடாது கருப்பு மாதிரி இன்னும் தொடருது. எந்த நாட்டுக்கு போனாலும் கடைசில இலை, தழை, குச்சி, காஞ்ச சருகு இதெல்லாம் தான் சாப்பிடக் கெடைச்சா பின்ன வேற எப்படி நெனைக்கறது?
FullSizeRender.jpg
அட சாதாரணமான்னா பரவாயில்லய்யா! சொளையா ஒண்ணேமுக்கால் லட்சம் ரூபாய்க்கு பிசினஸ் க்ளாஸ் டிக்கெட் (கம்பெனி தான்! பின்ன? நாமெல்லாம் முடிஞ்சா ஃப்ளைட்லயே ஃபுட்போர்டு அடிக்கிற கேஸாச்சே!) வாங்கிட்டு இப்படி குடுத்தா மனுஷனுக்கு கோவம் வராதா?
அர்த்த ராத்திரி (எனக்கு!)
அஞ்சு மணிக்கு எழுப்பி
ஆகாரம்னு சொல்லி
ஆடு சாப்டறதக் குடுத்தா
ஆத்திரமா வராதா?
அகையின்…
ஆகாய விமானத்துல
அக்கப்போரா?
ஆனா இந்தமுறை ‘டா’ இல்ல!  போன முறை மாதிரி இப்போ கோவம் வரல!

(ஏர் ஹோஸ்டஸ் அப்படி…ஹிஹி)  அழகிய அக்கப்போர்!

பார்த்திபன்-விவேக் எஃபெக்ட்டில் சொன்னா…

ஒரு
ஏரோபிளேனையே      (ஒண்ணுங்கீழ ஒண்ணு? அதான சார் கவிதை?)
கப்பலா
மாத்திட்டாளே!!          (அடடே! ஆச்சர்யக் குறி!)
மேற்கண்ட ஹைக்கூக்கு அர்த்தம் புரியலைன்னா யாராவது ஒரு டீனேஜ் பையனையோ பெண்ணையோ கேட்டு தெரிஞ்சுக்குங்கோ…
air-hostess-23398239
என்னதான் இருந்தாலும் மகளிரணி இல்லியா? யார் கண்டா? நான் எதிர் காலத்துல எலக்‌ஷன்ல நின்னு (ஏன் நின்னா என்னங்கறேன்? சில —– க்கெல்லாம் நான் எவ்வளவோ பரவாயில்ல தானே!!) ஜெயிக்க வேணாமா?
ஆனா அவளுக்கு ஓட்டு இங்க இருக்கணுமே? அட விடுடா! வாக்காளர் லிஸ்ட்ல பேர் இருந்தா மட்டும்? அவங்கவங்க ஓட்டை அவங்களே போட முடியாது!
சரி சரி! ஆட்டைய கவனி!
“பெண்ணே! ஒரு வேளை உனக்கும் எனக்கும் பூர்வ ஜன்ம பந்தம் இருக்கலாம் (இரு! இரு! ஃப்ளாஷ்பேக் எல்லாம் இப்போ வேண்டாம். முடியல என்னால!) அதற்காக இந்தப்பிறவியிலும் அதே ஞாபகத்துடன் எனக்கு இலை, தழைகளைத் தின்னக் கொடுக்கிறாயே? என்ன நியாயம் இது?” ன்னு இலக்கிய ரசனையோடு (இப்போதான் இதெல்லாம் அணை உடைந்த வெள்ளமாய் வரும்!) கேட்க நினைத்தாலும், இங்க்லீஷ் தான் புரியும் என்பதால்…
“ஐ வாஸ் எக்ஸ்பெக்டிங் சம் ரைஸ்”… (ஆத்தா! சோறு, சோறு குடு! ங்கறதத் தான் டீசண்டா இப்படி!)  ன்னு கேட்கவும்,
எதோ வேற்று கிரக ஜந்துவைப் போல என்னைப் பார்த்தாள். “டேய்… அங்க பாருடா… உன் கூட பிசினஸ் கிளாஸ்ல வர்ற எல்லாரும் என்ன சாப்டறானுங்கன்னு… நீ தான் அரிசிச் சோறு கேக்கற” ன்னு நினைச்சிருப்பா.
சரி அவளுக்கு என்ன தெரியும்? எதோ இவனும் டீசன்ட் ஃபெலோ தான் போலன்னு முதல்ல சாலட் கொண்டு வந்தாளோ?
நான் நெனச்சேன்… “கோட்டெல்லாம் போட்டிருக்கேனே ன்னு ஏமாந்துட்டியா? சீச்சீ… இப்படியெல்லாம் ட்ரஸ் பண்ணிக்கிட்டு இருந்தாலும் எங்களுக்கெல்லாம் வெறும் சாலட், பன், அண்ட் சாண்ட்விச் எல்லாம் சாப்ட்டா சாப்ட்ட பீலிங்கே இருக்காது.
நல்லா சோத்தப் போட்டு, கொழம்புகளை ஊத்தி சும்மா மிக்ஸ் பண்ணி உள்ள தள்ளினாத்தான் சாப்ட்ட மாதிரியே இருக்கும்.”
நான் ரைஸ் இல்லயான்னு கேட்டதும், “இருக்கு இருக்கு, நீ இத மொதல்ல சாப்டுவன்னு கொண்டுவந்தேன்” ன்னு சொன்னா.
நானோ, “அப்படியா? என் ராசாத்தி! ரதி அக்னிஹோத்ரி! இத மொதல்லயே சொல்றதுக்கு என்ன? இவ்ளோ ஃபீலிங்ஸ் விட்டிருக்க மாட்டேனே”ன்னு நெனச்சி, “ஓகே! ஓகே! நோ ப்ராப்ளம்” ன்னு வெயிட் பண்ணேன்.
அப்புறம் ரைஸ் கொண்டு வந்தா, அப்புறம் தான் எனக்கு கண்ணுல ஒளியே வந்துது. ப்ளேட் கிளியர் பண்ண வந்தவ “என்ன மீல்ஸ் செட்ல இவன் வேற எதையுமே தொடவே இல்லையே” ன்னு ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து மீண்டும் ஒருமுறை விமானத்தைக் கப்பலாக ஆக்கிவிட்டுச் சென்றாள்.
எனிவே, அக்கப்போராக ஆரம்பிச்சாலும், கடைசில அரிசிச் சோறால ஆட்டம் அமைதியாக முடிந்தது.
வயிறு திம்முனு ஆக, சிம்பதி வோட்டுல ஜெயிச்ச எம்.எல்.ஏ மாதிரி நானும் நிம்மதியா தூங்க ஆரம்பிச்சிட்டேன்.