செயற்கைக்கோள் உணர்த்தும் பக்தி மார்க்கம்

satellite

 

கடந்த அரை நூற்றாண்டில், மனித இனம் விண்வெளி ஆராய்ச்சியில் (Astronomy/Space science) மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. செயற்கைக்கோள்களை கணக்கில்லாமல் ஏவுவது முதல், சந்திரனில் கால்வைத்தது, செவ்வாயில் இறங்கி ஆராய்வது போக நம் பால்வெளியில் கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் சூரியக்குடும்பத்தின் எல்லை வரை சென்று ஆராய்ச்சி செய்யும் திறமையான விஞ்ஞானிகள் இன்று பலர் உள்ளனர்.

ஆனால், சற்று உள்நோக்கிப் பார்க்கும்போது அடிப்படையில் மனிதனின் மனமே ஒரு அளவிடமுடியாத ஆழம் உடைய விசித்திரம். அதைப் புரிந்து கொண்டு, வென்று, அடக்கி நல்வாழ்வு வாழ்வதென்பது ஒரு சிலருக்கே சாத்தியமானது. இக்காலத்தில் அதை இன்னும் மோசமாக்க லௌகீக விஷயங்கள் பல உண்டாகிவிட்டன. இந்நிலையில், இன்றைய குழப்பங்கள், சந்தடிகள், சிற்றின்பச் சச்சரவுகளுக்கு நடுவே எவ்வாறு இறைவனை உணர்ந்து அவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது தீர ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

இவ்வாறு மேம்போக்காக இரண்டு விஷயங்களும் தொடர்பே இல்லாதவையாகத் தோன்றினாலும், செயற்கைக்கோள்கள் ஏவும் முறையிலிருந்து எப்படி இறைவனை அடையலாம் என நாம் உணரமுடியும். 

——————–

முதலில், ஒரு செயற்கைக்கோளை ஏவுவதற்கு LAUNCH VEHICLE எனும் ஏவு ஊர்தி தேவை. அது மிகப் பெரியதாயினும், அதன் நுனியில் சுமார் பத்தில் ஒரு பங்கிலும் குறைவான அளவிலுள்ள சிறு எந்திரம் தான் இறுதியில் விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் உண்மையான செயற்கைக்கோள்.

எப்படி மனித உடம்போடு  ஒப்பிட்டால், மூளையின் அளவோ அப்படி. ஆனால், எதற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது? எது மனிதனை உண்மையில் இயக்குகிறது என்றால்?  மூளையும், அதனை ஆட்டுவிக்கும் கண்ணுக்குப்புலப்படாத ஆனால் மிகுந்த சக்திவாய்ந்த மனம் தானே? அவ்வாறே கொள்ளவேண்டும்!

Exploded_View_Proton

செயற்கைக்கோளைச்  சுற்றுவட்டப் பாதையில் அதன் இலக்கில் சரியாகக் கொண்டு சேர்ப்பது தான் மீதியுள்ள மிகப்பெரிய ஏவு ஊர்தியின் வேலை. அந்த நிகழ்வில், படிப்படியாக இந்த ஏவு ஊர்தியின் ஒவ்வொரு பாகமும் கழன்று விழுந்து, கடைசியில் மதிப்புள்ள அந்த முன்பகுதி மட்டுமே மிஞ்சி, அதற்குரிய இலக்கையோ அல்லது சுற்றுவட்டப் பாதையில் அதற்குரிய இடத்தையோ அடைந்து நிலைபெறும்.

 

அதே போல், இந்த சரீரத்தின் மூலமே பிறவிக்கடலைக் கடந்து பகவானின் திருவுலகை அடைய முடியும். இலக்கு அவன் இருப்பிடம் – வைகுந்தம். அதை நோக்கிச் செல்ல நமக்கு இந்த உடம்பு தேவை ஆனால், எதையெல்லாம் எப்போது துறக்க வேண்டுமோ அப்போது துறந்தால் தான் அவனை அடையமுடியும் என்பது நமக்குத் தெரிகிறதல்லவா? 

 

பின் இந்த ஏவு ஊர்தியை முதற்கட்டமாக விண்ணில் செலுத்த (மனிதனை இறைவனை நோக்கிச் செலுத்த) ENGINES எனப்படும் உந்து விசை தேவை.

நமக்கு நம் குடும்பமும், பெரியோர்களும் மற்றும் கல்வி தரும் ஆசிரியரும் நல்ல கருத்துகளை, கதைகளைச் சொல்லிச் சொல்லி நமக்கு நல்வழி காட்டி இறைவனை நோக்கிய நம் நீண்ட நெடிய பாதையை ஆரம்பித்து வைப்பர்  எனலாம்.

இங்கு இன்னொரு முக்கியமான தடையாக உள்ள விஷயம் புவி ஈர்ப்பு விசை. அதைக் கடந்து செல்வதே அனைத்திலும் கடினமானதாகும்.

அதேபோல், மனதை நல்வழிப்படுத்தி பக்திசிந்தனை வருவதற்குத் தடையாக பல (இந்த்ரிய சம்பத்தப்பட்ட) விஷயங்கள் பலவும் மலிந்துள்ளன. அவைகள் தாம் புவிஈர்ப்பு விசை போல நம்மை மேலே செல்லவிடாது கீழ்நோக்கி இழுக்கின்றன. அத்தகைய விஷயங்களைத் தாண்டியே பகவத் சிந்தனை வரவேண்டியிருப்பதால் இது மிகுந்த சிரமமான காரியமாகும். ஆனாலும், சிறுவயதிலேயே இதற்கான (சத்சிந்தனை) விதையை விதைத்து விட்டால், பிறகு சிரமப்பட வேண்டியிராதே! ஒரு கட்டத்திற்குப்பின் இவைகளின் வலிமை குறைய, அவை தாமாகவே கழண்டு உதிர்கின்றன.

MESSENGER_-_exploded_launch_vehicle_diagram

பின் ஏவு ஊர்தி (உடம்பு) செயற்கைக்கோளைச்  (மனதை)  சுமந்து கொண்டு மேலே பயணிக்கையில், இரண்டாம் கட்ட உந்து விசை தேவையல்லவா?

அதுபோல, நமக்கு பாகவதர்களின் சம்பந்தம் ஏற்படவேண்டும். பாகவதோத்தமர்களுக்கு நாம் பணிவுடன், பக்தியுடன் செய்யும் மரியாதையும், சேவையுமே நம்மை பக்திமார்க்கத்தில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.

இவ்வாறு சரியான பாதையில் உந்தப்பட்டு செயற்கைக்கோள் (நம் மனம்) இறைவனை நெருங்கும் போது, மிக அத்தியாவசியமான மூன்றாம் கட்ட உந்து விசையாக நமக்கு அமைவது ஆச்சார்யன் கிருபையும், ஆசீர்வாதங்களும் தான். அவை இல்லையெனில் நாமும் கடலில் விழும் செயற்கைக்கோள் போல ஊழியில் அமிழ்ந்து, கடைத்தேற்றமே (இலக்கை = இறைவனை) பெற முடியாது.

acharya

ஆச்சர்யனிடம் பூரண சராணகதி அடைவதால் அவர் பெருங்கருணை கொண்டு நம்மை இறைவனின் திருப்பாதங்களில் சேர்ப்பிக்கும் பெரும்பொறுப்பை ஏற்று முக்திக்கு வித்திடுகிறார்.

இவ்வாறு இலக்கில் சென்று சேர்க்கப்பட்ட செயற்கைக்கோள் போல, நாமும் இறுதியில் பரம்பொருளைச் சென்று சேரும் பரமானந்த நிலையை அடையலாம் என உணர்வோம்.

 

————–

ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!