rama_seventrees

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு  சுக்கிரீவனின் முகத்தில் தெளிவையும்  பயமின்மையையும் கண்ட அனுமன் மனம் மகிழ்ந்து கூறினான்

“அரசே! எனக்குத் தெரியும். என்றாவது உம் துயரங்களுக்கெல்லாம் விடிவு வரும் என்று. இதோ சூரிய குலத்தோன்றலான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைக் கண்ட உடனேயே உமது கஷ்டங்களெல்லாம் பனித்துளியைப் போல மறைந்து போயினவே! சூரிய புத்திரனான உமக்கு உதவ அந்த சூரிய வம்சத்தின் கொழுந்தே வந்திருக்கிறான்”

 

“நீ சொல்வது சரிதான் அனுமந்தா! ஸ்ரீ ராமனைப் பார்த்தவுடன் எனக்கு இன்னொன்றும் தோன்றியது. என்னைப்போல அவரும் தன் பிரிய மனையாளை பிரிந்து துயருறுகிறார். என் வேதனை அவருக்கு நன்றாகவே புரியும்”

 

“புரிகிறது அரசே!”

 

“இல்லை அனுமந்தா! நைஷ்டிக பிரம்மச்சாரியான உனக்குப் புரியாது. சீதையை நான் பார்த்ததில்லை எனினும் ஸ்ரீ ராமனின் தர்ம பத்தினி எப்படி இருப்பாள் என்று என்னால் யூகிக்க முடியும். அழகும் அறிவும், அன்பும் பண்பும் ஒருங்கே அமைந்து கருணையில் கடலையும் வெல்லும் காரிகை ஒருத்தியைப் பிரிந்து எப்படி அவர் உயிர் வாழுகிறாரோ என்று நான் உணர்ந்தேன். அவ்வாறு நீ உணரும் காலம் விரைவில் வரும்” என்று பதிலுரைத்தான் சுக்ரீவன்.

 

“ஆம் அரசே! அழகிய பெண்களை பிரிவதனால் வரும் துன்பம் அளவில்லாதது என உலகோர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். உம்மையும் ஸ்ரீ ராமனையும் பார்த்தபின் அதன் வலியை நன்கு உணர்கிறேன்.

 

“ஆனால் அனுமனே! அழகு அழியக்கூடியது. நான் பெண்களின் உடல் அழகைச் சொல்லவில்லை. அகத்தின் அழகு நிலையானது. அதைச் சொல்கிறேன். நல்ல குணம் என்பது நற்செடியைப் போல நல்ல பெற்றோர் வளர்ப்பினால் வருவது. அதுவே குணமில்லாப் பெற்றோரால் வளர்க்கப்பட்டால் முட் செடியாக வளர்ந்து பிறந்தகம், புக்ககம் என்ற இரண்டையும் பாழ் படுத்திவிடும். இவையெல்லாம் மனித இனத்தின் வரைமுறைகளென காலம் காலமாக இருப்பவை. சீதையின் பெற்றோர் மிகுந்த புண்ணியசாலிகள். நற்குணங்கள் நிறைந்து, ஈகை, எளிமை, அன்பு, பண்பு அனைத்திலும் சிறந்து விளங்கி முன்னுதாரணமாக விளங்குபவர்கள். அதே போல தசரத சக்கரவர்த்தியின் புகழ் இந்த உலகையும் தாண்டி மேலுலகம் வரை சிறப்புற்று விளங்கியது என இலக்குவன் கூறுவதில் வியப்பொன்றுமில்லை. இத்தகைய சிறப்பு மிக்க இரு குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஸ்ரீ ராமனும், சீதையும். அதனால் தான் அவர்களின் பிரிவு அவர்கள் இருவரையும் அனலில் புழுவாய்த் தவிக்க விடுகிறது.

 

“உண்மை தான் அரசே!”

 

“நான் என் கதையை சற்று எண்ணிப் பார்க்கிறேன். என் பிரிய ருமை இன்று வாலியின் வசத்தில். கழுகின் காலில் சிக்கிய புறாவைப் போல். கொடும் எரிமலையின் வாயில் விழுந்து விட்ட மல்லிகையைப் போல் அவள் எப்படி நொந்து வாடுகிறாளோ. அவளை நான் மீண்டும் என்று பார்ப்பேனோ? ஸ்ரீ ராமனைக் கண்டதும் எனக்கு சிறிது நம்பிக்கை உண்டானது உண்மைதான். ஆனால்… ”

 

“என்ன பிரபு? எதற்கு சந்தேகம்? மூவுலகையும் ஒரு பாணத்தால் வெல்லும் வல்லமை படைத்தவன் ஸ்ரீ ராமன். சரணம் என்று அடைந்தோருக்குத் தன உடல் பொருள் ஆவியையே தந்து காக்கும் சரணாகத வத்சலன். தோளோடு தோள் சேர்த்து இளையவனும் போர் புரிந்தால், ஈரேழு பதினாலு லோகங்களும் பஸ்பமாகிவிடாதோ? வாலி வலிமையானவன் தான். ஆனால் எனக்கு அனுவின் முனையின் ஆயிரங்கோடியில் ஒரு பங்கு கூட அவநம்பிக்கை இல்லை பிரபு. தாங்கள் கலங்க வேண்டாம். ஸ்ரீ ராமனைப் பூரணமாக நம்பி அவர் சொல்வதைச் செய்யுங்கள்”

 

“ஸ்ரீ ராமனின் பராக்ரமத்தில் எனக்கு சந்தேகம் இல்லை அனுமந்தா! ஆனாலும், என் மூளையின் ஓர் மூலையில் அச்சம் மிச்சம் இருக்கிறது. அடிவாங்கி ஓடி வந்தவன் நானல்லவா! துந்துபி போன்ற கொடிய அரக்கர்களையே கொசுக்கள் போல நசுக்குபவன் வாலி. அவனை எப்படி வில்லேந்தி வந்த இரு மானிடர்களை நம்பி எதிர்ப்பேன்?”

 

vaali

 

“அரசே! இதற்கு ஒரே உபாயம் தான் உள்ளது. நேரே ஸ்ரீ ராமனிடம் சென்று அவரையே கேட்போம். அவர் தனது பராக்கிரமத்தை வெளிக்காட்டுமாறு செய்து உங்கள் பயத்தை நிச்சயம் போக்குவார்.

 

என்று சொல்லி ஸ்ரீ ராமனிடம் சென்று வணங்கி நின்றனர்.

 

எப்போதும் மந்தகாசப் புன்னகை மாறாத முகில் வண்ணனும் “வா நண்பா! என்ன செய்யவேண்டும் உனக்கு என்று தயங்காமல் சொல். எதுவானாலும் செய்து முடிக்கக் கடமைப்பட்டுள்ளேன். உன் நடை தளர்ந்து உள்ளதை கவனித்தேன். மூச்சும் சீராக இல்லையே. உன் கண்கள் உள்ளடைந்து உன் மனம் ஏதோ தீவிர சிந்தனையில் அல்லது கவலையில் ஆழ்ந்துள்ளதை வெளிப்படுத்துகின்றன. உன்னைத் தழுவும் போதே உணர்ந்து கொண்டேன் உன் உடலின் சிறு நடுக்கம் தன்னை. என்ன வேண்டுமென சொல்” என்றான்.

 

“சூரிய குலச் செம்மலே! என் மனதை நான் சொல்லாமலேயே இவ்வளவு தூரம் குறிப்பறிந்து கொள்கிறீர். அடியேனின் மனதில் ஏற்பட்டுள்ள தொய்வுக்கு நீர் தான் மருந்தும் தர வேண்டும்”

 

“ஆஹா! அதற்குத் தானே காத்திருக்கிறேன். சொல் சொல்”

 

“நீர் உடன் இருக்கும் போது என் தமையன் வாலியுடன் போர் புரிவதில் எனக்கு பயமில்லை. ஆனால்…

 

ஆனால் என்ன?

 

வாலியைப் பற்றி நீர் என்ன அறிந்து கொண்டீரோ தெரியாது. இருந்தாலும் சொல்கிறேன். அவன் தினமும் இந்தப் பரந்த உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் சென்று நீராடுவான். அனாயாசமாக இந்த உலகையே சுற்றி பலமுறை வலம் வருவான். மேரு மலை போன்ற தேகம் கொண்ட துந்துபி என்னும் அரக்கனை துவந்த யுத்தத்தில் கொன்று நரசிம்மன் போல அவன் நெஞ்சைப் பிளந்தான். பின் அவன் தேகத்தை எலும்புத்துண்டு போல எளிதில் தூக்கி எறிந்தான். அது இந்தக் காட்டின் ஓரிடத்தில் மாமிச மலை போல் கிடக்கிறது.

 

“சரி சுக்ரீவா! இதையெல்லாம் என் இப்போது என்னிடம் சொல்கிறாய்? ஒரு வேளை என் வீரத்தை சோதித்துப் பார்க்க எண்ணமோ? அப்படியென்றால் தயங்காமல் கேள். உன் மனக்கவலை போக்க நான் எது வேண்டுமானாலும் செய்வேன். தம்பி லக்ஷ்மணா! வா! இப்போதே நம் நண்பனின் மன வருத்தத்தைப் பஞ்சாகப் பறக்க விடுவோம்” என்று கூறி கிளம்பினான்.

 

வழியில் துந்துபியின் சடலம் கிடக்க அதைப் பார்த்து ராமன் தன தம்பிக்கு ஆணையிட்டான். “தம்பி! அந்த உடலை அப்புறப்படுத்து”

 

உடனே தன கால் கட்டை விரலால் விளையாட்டுப் போல அந்த மலைபோன்ற உடலை இலக்குவன் நெட்டித் தள்ள, அது பல காத தூரம் பறந்து கண்ணை விட்டு மறைந்து எங்கோ தூரத்தில் போய் விழுந்தது. சுக்ரீவன் வியப்பில் ஆழ்ந்தான். இவர்கள் சாதாரணமான மானிடர்கள் இல்லை என அனுமன் அறுதியிட்டுக் கூறியது நினைவுக்கு வந்தது. ஆனால் அனுமனோ, ஆச்சர்யமே துளியும் இல்லாது இதை எதிர்பார்த்தவன் போல் அமைதியாக இருந்தான். பின்  சுக்ரீவன் ராமனிடம் வேண்டினான்.

 

“ஸ்ரீ ராமா! உன் தோள்வலியை சிவதனுசு உடைந்தபோதே உணர்த்திவிட்டாய். அடியேனின் மனத் திருப்திக்காக இதோ இங்கு நிற்கும் மரா மரங்களில் ஒன்றை உன் அம்பால் துளைத்துக் காட்டினால், என் மனத்தின் பதைப்பு தணியும். தயை கூர்ந்து செய்வாயா?” என்றான்.

 

அந்த மரம் சாதாரணமானது அன்று. வானைத் தொடுமளவு உயர்ந்து வளர்ந்து இந்திரனின் வஜ்ராயுதம் கூட வளைந்துவிடும் எனும்படியாக  பருத்து கனத்து இலை கிளைகளோடு கூடிய ஒரு சிறு குன்றைப் போல இருந்தது.

 

“சுக்ரீவா! இதற்கா இவ்வளவு பீடிகை? ஒரு மரம் இல்லையே, ஏழு மரங்களல்லவா இருக்கின்றன. இதோ பார்!” என்று தன் கோதண்டத்தை வளைத்து ஒலி எழுப்பினான். அதுவரை அமைதியாக இருந்த காட்டில், பேரிடி போல் ஒரு ஒலி எழுந்தது. பறவைகள் பதறிச் சிதறி திசைக்கொன்றாகப்  பறந்தன. நன்கு தின்று கண் சொருகி மரக்கிளைகளில் உறங்கி கொண்டிருந்த குரங்குகள் ஒரு கணம் அலறி  அங்குமிங்கும் செய்வதறியாது தாவிக் குதித்தன. புற்றுகளில் இருந்த பாம்புகள் வெளியே வந்து விழுந்து படமெடுத்து நெளிந்தன. ஒரு கணத்தில் அந்தக் காடே குலுங்கிப் பின் நிலைக்கு வந்தது.

 

வில்லை வளைத்தான் ராமன். மூச்சை உள்ளிழுத்துத் தன் முழு பலத்தையும் தோள்களில் தேக்கி, சூரிய குலத்தின் வீரத்தை வெளிக்காட்டும் வாய்ப்பை எண்ணி மனம் மகிழ்ந்து, ஒரு முறை அந்த ஏழு மரங்களையும் தீர்க்கமாகப் பார்த்தான். பின் ஒரு மின்னல் அங்கே பளீரென்று வெட்டி மறைந்தது. பாணம் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்று அந்த மரங்களைத் தாக்கிற்று.

 

முதல் மரத்தில் துளைவிழ – அவன்

மூளை திடுமென உயிர்த்தெழ – அம்பு
இரண்டாம் மரத்தைத் துளைக்க
இதுநிஜமோ என்றவன் மலைக்க
மூன்றாம் மரம் துளைபட – அவன்
மூச்சிரைப்போ மிகுந்திட – அம்பு
நான்காம் மரத்தைத் துளையிட- லோக
நாதன் இவனெனப் புரிந்திட – அது
ஐந்தாம் மரத்தில் புகுந்திட – சொச்ச
ஐயமும் அறவே மறைந்திட – அம்பு
ஆறாம் மரத்தைத் துளைத்திட – அவன்

அங்கமும் பொங்கி வியர்த்திட – அம்பு
ஏழாம் மரத்தில் ஊடுருவ –  அவன்
வீழ்ந்தான் ராமன் சீரடியில்

 

ஏழு மரங்களையும் நொடிக்கும் குறைவான நேரத்தில் துளைத்து இராம பாணம் அவன் அம்பறாத்தூணியில் அமைதியாய் அடைக்கலமானது.

 

“ராமா! என்னை மன்னித்துவிடு. உன் பராக்ரமம் தெரிந்தும் உன்னை சோதிக்க எண்ணம் கொண்டேன். அது பயத்தினாலே தானே அன்றி உன் மேல் கொண்ட அவ நம்பிக்கையால் அன்று. இந்த நொடி நான் தெளிந்தேன். வாலியின் வாழ்வை முடிக்க உன்னைத் தவிர வேறு எந்த சக்தியும் இல்லை என” என்று ராமனின் பாதத்தில் சுக்ரீவன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.

 

“சுக்ரீவா! இதை நான் அவமரியாதையாகவோ அவமானமாகவோ எண்ணவில்லை. உன் மனப்போக்கு தெரிந்தே தான் இதற்குச் சம்மதித்தேன். இதோ நாளை வாலியின் கடும் பாறை போன்ற மார்பைப் பிளக்க இந்த மரங்களை ஒரு பயிற்சிக் களமாக எண்ணிக் கொண்டேன். கவலையை விடு. வா! நாளை உனக்கு விடிவு நாள்” என்று சொல்லிக் கொண்டே அவனைத் தூக்கித் தன் மார்போடு அணைத்துக்கொண்டு இராமன் ஆசுவாசப்படுத்தினான்.

 

அனுமனும் இலக்குவனும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

—————————

ஆசார்யன் திருவடிகளே சரணம்