Capture

 

 

“இப்போவாவது படிக்கலாமே?”

 

என்ற என் தந்தையின் வார்த்தை தான் என்னை உரமேற்றி உந்தித்தள்ளி வீறுகொண்ட வேங்கையாக்கி வெறிகொண்டு படிக்கவைத்து வெற்றி பெற வைத்தது….

 

அப்படியெல்லாம் சொல்லனும்னா நான் கோலிவுட் ஹீரோ ஹீரோயினியாகத்தான் இருக்கணும். இல்லன்னா இப்டிக்கா ட்ரெயின் ஏறி அப்படிக்கா அதே ஊருக்கு கலெக்டரா வர நான் என்ன சூரியவம்சம் தேவயானியா? சரி… அதெல்லாம் இருக்கட்டும்.

————————————–

ஈக்கோ டூரிசம், மெடிக்கல் டூரிசம் எல்லாருக்கும் தெரியும். எக்ஸாம் டூரிசம் தெரியுமா?

 

நான் அப்போ 12 வது முடிச்சிருந்தேன்…. (உன் மூஞ்சிக்கெல்லாம் பிளாஷ்பேக் தேவையான்னு கேக்கறவங்க ஒன் ஸ்டெப் பேக். சரி கேட்டுத் தொலையறோம்னா மட்டும் ப்ரொசீட்)

 

எங்க விட்டேன்… ஆங்… 12 வது… இந்த பப்ளிக் எக்ஸாம் இருக்கே! மனுஷனை கொல்றதுக்குன்னே இருக்கும். எப்போ பாரு படி படின்னு பாக்கற எல்லாரும் சொல்வாங்க. பாத்ரூம்ல ஒரு 2 நிமிஷம் எக்ஸ்ட்ராவா இருந்துட்டா போதுமே “இந்த டைம்ல மேத்ஸ்ல ஒரு 5 மார்க் கேள்வி படிச்சிருக்கலாமே”ன்னு உசுர வாங்கிடுவாங்க.

 

ஏனய்யா! கழிவறையில் கண நேரம் கண்ணசந்ததற்கு காண்டாகிறீர்களே! காலை 4 லிருந்து நள்ளிரவு வரை கணிதம், இயற்பியல், உயிரியல் என கரைத்துக் குடிப்பவனுக்கு கடைசியில் வேறு என்னய்யா ஆகும்?

 

வேதியியலில் துவங்கி “பேதி”யியலில் தான் ஒவ்வொரு நாளும் முடிகிறதய்யா! அப்படி என்னய்யா? சதாப்தி போல கீழே சரமாரியாகப் போகும் போது கூட சைன் தீட்டா காஸ் தீட்டா என்றால் எப்படி? சேச்சேச்சே!

 

அப்புறம் இந்த பெத்தவங்களுக்கும் “அடடா! பையனுக்கு 16-17 வயசாச்சே! டீனேஜை டச் பண்ணி 4 – 5 வருஷமாச்சே. படிச்சு மட்டும் என்னத்த பெருசா கிழிக்கப் போறான். அப்படியே நாலு கல்யாணங்காட்சிகளுக்கு கூட்டிட்டு போனா ஒரு நாலு பேர் இவனைப் பார்க்க, இவன் ஒரு நாப்பது பேரை (அய்யோ போதாதே!) பார்த்து வச்சாத்தானே ஒரு சுமூகமான முடிவுக்கு வந்து பையன் லைஃப்ல செட்டில் ஆக வழி செய்யலாம்” னு ஒரு தொலைநோக்குப் பார்வை, தெளிவான சிந்தனை, நிதர்சனமான எண்ணமே இருக்காது.

 

அப்படியே தப்பித் தவறி கூட்டிட்டு ஒரு விசேஷத்துக்கு போயிட்டா, யாரோ புண்ணியவான் “எம் பொண்ணு கூட (பசங்களா? அந்த டாபர்மேன்களைப் பத்தி எவனுக்கு கவலை! நமக்கு பொமரேனியன்கள் போதும்!) 12வது தான். ஆனா வீட்ல சின்சியரா உக்காந்து படிச்சிகிட்டிருக்கா” ன்னு கொளுத்திப் போடுவான்ல.

 

(நம்ம மைண்ட் வாய்ஸ்: அட சதிகாரா, கெட்ட எண்ணம் புடிச்சவனே, குரூர புத்திக்காரா… உனக்கெல்லாம் டோனால்டு ட்ரம்ப் மாதிரி தான் மாப்பிள்ளை வருவான். பிடீ சாபம்!)

 

எனிவே, அப்போ மந்திரிச்சி விட்ட கழுதை (வழக்கமா ஆடு தானேன்னு கேக்கப்படாது. இது என் ஸ்டோரில்ல?) மாதிரி படிச்சி பப்ளிக் எக்ஸாம் முடிச்சி, ஒருவழியா என்ட்ரன்ஸ் கூட தட்டுத் தடுமாறி கடந்து, பெருமூச்சு விட்ட வேளையிலே…

 

நெறைய (கண்ட கண்ட!) நேஷனல் லெவல் இன்ஸ்டிட்யூட்க்கெல்லாம் என்ட்ரன்ஸ்க்கு எழுதிப் போட்டேன். மை டியர் நைனாவும், பெத்த கடனுக்கு, அவர் சம்பளத்தை, ஷங்கர் பட புரொடுயூசர் கணக்கா சும்மா தண்ணியா விட்டார், போஸ்டல் ஆர்டர், டிடி, மணியார்டர்னு. ஓப்பனிங்லாம் எப்பவும் நல்லாவே இருக்கும். அப்ளிகேஷன்லாம் நான் ரெம்ப சின்சியரா போடுவேனே! அப்புறம் எல்லா எக்ஸாம் ஹால் டிக்கட்டும் வேற கரீட்டா வந்திடும். (உங்க கடமை உணர்ச்சியைப் பார்த்து கண்ணே கலங்குதுய்யா!).

 

ஆனா, நாம தான் பப்ளிக் எக்ஸாம்க்கே பப்பாளிப்பழம் குடுத்தவங்களாச்சே (திருநெல்வேலிக்கே அல்வா போரடிக்குதுபா). எல்லா எக்ஸாமும் எழுதினேன். அதுக்காக, மதுரை, சென்னை, திருச்சி, கோவைன்னு (ஆஆங்… சீர்காழி, மாயவரம், கும்பக்க்கோணம்…) எல்லா ஊருக்கும் நானும் அப்பாவும் போவோம்.

 

எக்ஸாம்ல பதில் எழுதினேங்கறதை விட, என் கற்பனை குதிரை கண்ணு மண்ணு தெரியாம தறிகெட்டு மேஞ்சி திரிஞ்சதுன்னு தான் சொல்வேன்.

 

உதாரணமா, மதுரையில தியாகராஜர் காலேஜ்ல ஆர்கிட்டெக்சர் (B.Arch) என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல spectacle ஒண்ணு வரைன்னு கேட்ட கேள்விக்கு ஆன்ஸரா “அந்த பெரிய மலை, அவலாஞ்சி, சாக்லேட் ஃபாக்டரி” எல்லாம் கொண்ட ஒரு இயற்கைக் காட்சியை வரைஞ்சு ஷேடு எல்லாம் குடுத்துண்டு இருந்தேன்.

 

பின்னால இருந்து பார்த்த எக்ஸாம் சூபர்வைசர் கண்கலங்கி, “டேய்! நீங்க எல்லாம் எங்கருந்துடா வர்றீங்க?”ங்கற மாதிரி கேவலமா ஒரு பார்வை பார்த்தாரு. “வீரன் வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம். போய்யா! நாங்கல்லாம் ஆரையும் பாப்போம்ல…” ன்னு சொன்னான் மாதிரி செம கெத்தா முடிச்சிட்டு வந்தேன்.

 

அப்பா ஒரே வார்த்தை தான் கேப்பாரு. அவர் ஒரு வெண்டிங் மெஷின் மாதிரி. காசு போட்டாத்தான் வார்த்தை வரும்ங்கற சிக்கன சொப்பன சுந்தரி டைப். அப்பவும் கேப்பாரு. எப்படி எழுதினேன்னு. சூப்பர்பா ன்னு சொல்லுவேன். அவரும் நம்புவாரு (பாவம்! வேறவழி?)

 

எஞ்சினீரிங், மெடிக்கல், வெட்னரி ன்னு ஏகத்துக்கு நமக்கு ஒத்தே வராத விஷயங்களுக்கெல்லாம் முயற்சி பண்ணேன். ஒரு ரிசல்ட் கூட பாசிடிவா வரலை. நைனா “கோதாவரி!

நேக்கு நன்னா புரிஞ்சுடுத்துடீ” ன்னு அம்மா கிட்ட சொல்லியிருப்பாரோ என்னவோ!

 

ஒரு முறை கடைசி எக்ஸாம் எழுத பாண்டிச்சேரி போனோம். ஓட்டல்ல ரூம் போட்டு தங்கி, அடுத்தநாள் காலைல எழுந்து நான் ரெடி ஆனேன். அப்போதான் அப்பா மெதுவா சொன்னாரு.

 

அந்த வார்த்தையினால பீச்ல எழுந்த அலை எல்லாம் அப்படியே நிற்க… பறந்து கொண்டிருந்த பறவைகள் அப்படியே நின்று விட… ஐஸ்க்ரீம் சாப்டற குழந்தை அப்படியே வாயைத் திறந்து சிலை போல உறைய… காத்துல ஆடின மரங்கள் (என்னை மாதிரியே) அப்படியே சட்டுனு அசையாம போக… கட்டிங் போட மூடியைத் திறந்த குடிமகன்கள் திகைக்க… ஊறுகாய் தொட்டவங்க உதட்டருகில் கொண்டு நிறுத்த… நெப்போலியன் நினைவிழக்க… ஜானி வாக்கர் ஜகா வாங்க… (பின்ன பாண்டிச்சேரில தானே நடந்தது இந்த சரித்திரம்…)

 

அப்பா மட்டும் பேசினாரு… இன்னும் எனக்கு மனசுல நிக்கற வார்த்தை அது.

 

“இப்போவாவது கொஞ்சம் படிக்கலாமே?”

 

அப்போ அவருக்கு புரிந்திருக்கும்… இதுதான் “எக்ஸாம் டூரிசம்” ன்னு…

 

நான் வழக்கம் போல இத்தனை நாளா புக்கை “வச்சி செஞ்சதையே” இன்னும் ஒரு அரைமணி நேரம் செஞ்சேன். வழக்கம் போல குதிரை மேய… ரிசல்ட் ஊத்தல்… இதெல்லாம் நமக்கென்ன புதுசா? அப்புறமும் மனம் தளராது “காஷ்மீர் ப்யூட்டிபுல் காஷ்மீர்” க்கெல்லாம் அப்ளிகேஷன் போட்டேன். நல்ல வேளையா ஹால் டிக்கெட் வராததால மை டியர் நைனாவோட ஆல்ரெடி காலி பர்ஸ் காப்பாற்றப்பட்டது.

 

சோ, இவ்வாறாக எக்ஸாம் எழுதும் சாக்கில் பார்த்த ஊர்கள் பல. இதுதான் நானே கண்டுபிடித்த “எக்ஸாம் டூரிஸம்” டெக்கினிக்கி. தஞ்சாவூர் கல்வெட்டுல இதைப் பதிக்க ட்ரெய்ன் டிக்கெட் கூட எடுத்திட்டேன்னா பார்த்துக்கோங்க…

 

ஓ! மாணவ மணிகளே! கழகக் கண்மணிகளே! உங்கள் கனிவான கவனத்திற்கு.

 

நைனாக்களே! எச்சரிக்கை. உங்கள் பிள்ளைகள் உண்மையிலேயே தேர்வுக்கு படித்திருந்தால் மட்டுமே டிக்கெட் ரிசர்வ் செய்யுங்கள். புரிந்ததா? 😂😂

————————-

#competitive #exam