old manஅப்பா நான் ஆகாஷை லவ் பண்றேன்பா. கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுது. என்ன சொல்றீங்க?

பிருந்தா, பிரபல தொழிலதிபர் மகாலிங்கத்தின் ஒரே மகள். பலநூறு கோடிகளுக்கு ஒரே வாரிசு.

நல்ல பையன்னா எனக்கு ஓகே மா. அதுசரி கொஞ்சநாள் முன்ன இன்னொரு பையன் உனக்கு ப்ரபோஸ் பண்ணி அதை நீ வேண்டாம்னு சொன்னதா சொன்னியே அவன் ஏதாவது மறுபடியும்?

அது தருண் பா. அவன் ரொம்ப நல்லவன். கலகலப்பா எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசுவான். சூப்பரா மிமிக்ரி இமிடேஷன்லாம் பண்ணாலும் யார் மனசும் நோகாம பார்த்துப்பான். அனாதைப் பையன் ஆசிரமத்துல வளர்ந்து பொறுப்பா படிக்கறவன்.

சரி… ஆகாஷ் எப்படிமா?

அவனும் நல்லவன்தான். இவனை மாதிரி கஷ்டப்படறவன் இல்ல. கொஞ்சம் வெல் டு டூ ஃபேமிலி. பேமண்ட் சீட்ல தான் படிக்கறான். பெர்ஃப்யூம், காரு, ஐஃபோன்னு கொஞ்சம் பந்தா பார்ட்டி ஆனா அதானோ எனக்கென்னமோ ஆகாஷை புடிச்சிருக்குப்பா.

சரிமா… என் முடிவுக்காக நீ காத்திருப்பேல்ல? ரொம்பவும் டைம் எடுக்க மாட்டேன். பயப்படாத.

சரிப்பா…

நாளைக்கு ரெண்டு பேரையும் தனித்தனியா மீட் பண்றேன். அப்புறம் என் முடிவை சொல்றேன்.

சொன்னது போலவே இருவரும் மகாலிங்கத்தைத் தனித்தனியே சந்தித்தனர். ஆனால், கல்யாணம் என்ற பேச்சையே அவர் எடுக்கவில்லை. பெண்ணின் கூடப் படிக்கும் நண்பர்கள் என்ற முறையில் ஜாலியாக அதே சமயம் அவர்களின் பாடி லாங்க்வேஜை மட்டும் உன்னிப்பாகக் கவனித்துவைத்துக் கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து…

அவசரமா நான் தூசிப்பட்டிக்கு போகணும்மா… ஒரு சின்ன வேலை… கிட்டத்தட்ட 40 வருஷம் கழிச்சி நம்ம சொந்த கிராமத்துக்குப் போக வேண்டிய சூழ்நிலை… போயிட்டு வந்து என் முடிவைச் சொல்றேன்… ஓகே?
ஓகேப்பா… சிரித்தாள் பிருந்தா…

 

அடுத்த நாள்…

 

ஆகாஷ் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட்டு உட்கார்ந்திருக்க, இன்ஜின் ஆயில் வாடை மூக்கைத் துளைத்தது. ஏதோ பழைய ஒர்க் ஷாப் போல இருக்கே என்று நினைத்தான்…

அப்போது ஒரு .குரல்..

 

டேய்! இதோ பார். இதுல 10 கோடி இருக்கு. பேசாம எடுத்துகிட்டு தொழிலதிபர் மகாலிங்கம் மகளை விட்டு போயிடு. வீணா அந்தப் பொண்ணு வாழ்க்கையில விளையாடாத. பிரச்சனை வேணான்னுதான் பணம்… சொன்னதாக கேக்கல… அப்புறம் நடக்கறதே வேற…

இல்ல. அவளை நான் உயிரை விட அதிகமா காதலிக்கறேன். பணம் தேவையில்ல. அவளே என்னை பிடிக்காதுன்னு சொல்லட்டும் அப்போ மறு கேள்வி கேட்காம போயிடுவேன்…. மிகப் பரிச்சயமான ஒரு லேடீஸ் பர்ஃப்யூம் வாசனையை முகர்ந்து கொண்டே பதில் சொன்னான். அதோடு மெல்லிய விஷமப் புன்னைகையை மறைத்துக் கொண்டு…

சரி… போ ஆனா இன்னும் 2 நாள் உனக்கு கெடு. யோசிச்சு சொல்லு என்று அவன் வாயில் துணியை அமுக்கி ஜீப்பில் ஏற்றியது ஒரு கும்பல்.

மெல்லிய குரலில் மகாலிங்கம் சொன்னார்….

பரவால்லம்மா ஆகாஷ் நல்லவன்னு நிரூபிச்சிட்டான். பணத்து மேல ஆசைப்படாம, மிரட்டலுக்கும் பயப்படாம நீதான் வேணும்னு சொன்னானே! நீயே அதைக் கேட்கணும்னு தான் மறைவா நிக்கச் சொன்னேன்.

ஹைய்யா… அப்பான்னா அப்பா தான்… நான் போய் இப்போவே ஆகாஷைப் பார்த்துட்டு வந்துடறேன்.
ஓகே கண்ணு… ஆனா அவன் கண்ணுல படாதே… நாம அவன் மேல சந்தேகப் படறோம்னு அவன் தப்பா நெனைக்கப் போறான்…

 

ஆகாஷின் கண்ணை அவிழ்க்காமல் அவன் தெருவுக்கு அருகில் உள்ள ஆளில்லாத சந்து ஒன்றில் அவனைத் தள்ளிவிட்டு ஜீப் பறந்தது… அந்த இடம் ஒரு அநாதை ஆசிரமத்துக்குச் சொந்தமான இடம்… ஹை கோர்ட்டில் வழக்கில் சிக்கியதால் யாருக்கும் உபயோகமின்றி வேலிபோடப்பட்டு வீணாக இருந்தது.

தருண் மாலை நேரங்களில் தனிமையை நாடி அங்கே வருவதுண்டு… அப்படி அன்று ஆகாஷை கை, கால், கண்கள் கட்டப்பட்ட நிலையில் அங்கே கண்டான். ஆனால் பின்னாலேயே ஒரு ஸ்கூட்டியில் சற்று தள்ளி பிருந்தா வந்து கொண்டிருந்தாள்… அவள் மெதுவாக அதே சமயம் ஆகாஷின் இந்த நிலையைக் கண்டு பதறாமல் இருப்பதும் தருணுக்கு மிகவும் வியப்பளித்தது.

ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. நான் அவ கிட்ட லவ் சொன்னப்போ அதை அவ மறுத்துட்டு நம்ம நல்ல பிரெண்ட்ஸா இருப்போம். நானும் ஆகாஷும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு சொன்னா… ஆனா இப்போ எப்படி இவ்ளோ கூலா இருக்கா? என்று மனதில் பலப்பல பேர்முட்டேஷன் காம்பினேஷன்களை   ஓடவிட்டு ஒரு முடிவுக்கு வந்தான். அவள் பார்ப்பதை உறுதி செய்துகொண்டு ஆனால் இவன் அவளை பாராதது போல ஆகாஷை எழுப்பித் தூக்கினான்…

 

ஆகாஷ்… என்னடா ஆச்சு?

 

தெரியலடா… யாரோ பணம் தரும். பிருந்தாவை விட்டு ஓடிடுனு மெரட்டுனாங்கடா … என்று சொல்லிக்கொண்டே ஆகாஷ் முற்றும் மயங்கிப் போனான்…

 

கைத்தாங்கலாக அவனை  ஒரு சிறிய மண்டபத்துக்கு கொண்டு சென்றான் தருண். பின்னாலேயே பிருந்தா வருவதை அவ்வப்போது  உறுதி செய்து கொண்டாலும் அவளை கவனிக்காதது போல நடந்து கொண்டான்.

 

பின்னாலேயே வந்த பிருந்தா தன்னை தருணோ ஆகாஷோ பார்க்கவில்லை என்று உறுதியாக நம்பி அவர்கள் இருந்த மண்டபத்தின் வெளியில் மறைந்து நின்றாள். தருணைப் பற்றி அவளுக்கு சிறிது சந்தேகம் இருந்தது. அதற்கு இப்போது விடை கிடைக்கலாமல்லவா என நினைத்து அவர்களைப் பார்க்கும்படி இல்லாது பேச்சு மட்டும் கேட்கும் தூரத்தில் நின்றாள்.

 

பேச்சுக்குரல்  கேட்டது…. ஆகாஷின் அலட்டலான கிண்டல் நிறைந்த குரல்… அடிபட்டு மயக்கமாகவில்லையா?  

 

இல்லடா.. எங்க வீட்ல நல்ல வசதி தான்… ஆனா பிருந்தாவோட அப்பா கோடீஸ்வரன் இல்ல. சில்லறைத்தனமா இப்போ பத்து கோடிக்கு ஆசைப்பட்டா அழகான  அவர் பொண்ணு அப்புறம் அவரோட பலநூறு கோடி சொத்து எல்லாம் எப்படி கிடைக்கும்? அதான் வேணாம்னு சொன்னேன்… 

 

பிருந்தாவுக்கு தலை கிறுகிறுவென சுற்றியது. உடனே… பொறுமையான வேறொரு குரல்…

இது தப்புடா… நானும் தான் அவளை லவ் பண்ணேன். இஷடம் இல்லைன்னு தெரிஞ்சு விலகிட்டேன்…. இந்த மாதிரி தப்பை பண்ணாதடா… பிருந்தா நல்லவ… அவ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்… ப்ளீஸ் டா… உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்… 

 

போடா டேய்…. இதென்ன சினிமாவா? எங்கிருந்தாலும் வாழ்கன்னு… 

 

அதன்பின் பிருந்தா கேட்க நினைத்தாலும் முடியவில்லை… கண்களில் அணை உடைந்தது போல் நீர் வழிய மொத்த உணர்ச்சிகளும் உறைந்தது போல் ஓசைப்படாமல் கிளம்பினாள்… தருணை சந்தேகப்பட்டோமே…  ஆகாஷா இப்படி? 

 

அடுத்த மாதம்… தருண் வெட்ஸ் பிருந்தா என்று அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழைக் கண்டு ஆகாஷ் திகைத்து நிற்க… தருண் தன்னைத் தூக்கியது வரை தான் அவனுக்கு நினைவே இருந்தது என நினைத்துக் கொண்டே அதிர்ச்சியில் சிலையானான்….

 

இதற்கு இரண்டு வாரம் முன்பு ஒரு நாள் அதிகாலையில்… தருண் தன் சொந்த ஊருக்குப் போவதற்காக பஸ்ஸில் கிளம்பினான்…

 

தூசிப்பட்டிக்கு ஒரு டிக்கெட்… 

 

ஆறு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, தூசிப்பட்டிக்கு 5 கிலோமீட்டர் முன்பேயே இறங்கிக் கொண்டான்… அங்கிருந்து ஒரு பர்லாங் தென்னந்தோப்பு, பனைமரங்கள்,வயல்களைத் தாண்டி ஒரு மண்மேட்டின் முன்பு கொஞ்ச நேரம் அமைதியாக நின்று விட்டுப்  பின் அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தான்… மனதுக்குள் நினைத்துக் கொண்டான்…

அம்மா, நீ சொன்னது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. கண்ணா பிரகாஷு… தொழிலதிபர் மகாலிங்கம் நம்ம ஊர்க்காரர் டா. அப்பாவோட கிளோஸ் பிரெண்ட் மட்டும் இல்லை, பிசினஸ் பார்ட்னர் ஒரு  சின்ன வியாபாரியா அவர் கடன் சுமையோட கஷ்டப்பட்ட காலத்துல…. ஒரு நாள் திடீர்னு அப்பா பேச்சு மூச்சு இல்லாம ஆகிட்டாரு… மகாலிங்கமா? மகாலிங்கமா இப்படி பண்ணிட்டான்? அப்ப்டீங்கற வார்த்தைகளைத் தவிர வேறு எதுவுமே அவரால் பேச முடியவில்லை. அதுதான் அவர் கடைசியாக பேசின வார்த்தைகளும்… 

 

மனதின் பாரம் மலையைப் போல கனத்தது தருணுக்கு. அதன் பின்னால் நடந்தவை அலையாக நினைவில் மோதின… அந்த ஊரிலிருந்து சென்னை கிளம்பி வந்தது… தீ விபத்தில் தன் குடிசையோடு பெற்றோரும், எல்லா சர்டிபிகேட்டும் எரிந்து விட்டதாகச் சொல்லி ஒரு ஆசிரமத்தில் சேர்ந்தது. அங்கு தருணாக மாறியது முதற்கொண்டு இன்று வரை…

அம்மா, அப்பாவுக்கு என்ன கிடைக்கணுமோ அது கிடைச்சாச்சு… எனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை… நீ ஆசைப்பட்டது போல… பிருந்தா உண்மையிலேயே நல்லவ… மகாலிங்கமும் தான்… ஆனால் இது அவர் நமக்குப் பட்ட கடனுக்கு…. 

 

அதே நாள்… மகாலிங்கத்தின் கிரானைட் இழைத்த அலுவலகத்தில், அவரது நீண்ட நாள் விசுவாசியான மேனேஜர் தியாகு கேட்டார்…

எப்படி சார்? இது?… 

 

கண்ணாடி பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டே மகாலிங்கம் கூறினார்…

 

ரொம்ப நாளா கேப்பீங்களே… எதுக்கு வருஷா வருஷம் நம்ம கம்பெனி லாபத்துல ஒரு கணிசமான தொகையை சேகர்ங்கற பேர்ல பிக்ஸட் டெபாசிட்ல போடா சொல்றீங்கன்னு? தருண் தான் அதுக்கு விடை… அவன் அன்னிக்கு என் வீட்டுக்கு வந்தானே, அவன் முக ஜாடை, கை  கால் அசைவிலேர்ந்து அவன் பேச்சு வரை அவனிடத்தில் நான்  என் முதல் முதல் பிசினஸ் பார்ட்னர் என் மானத்தையும் உயிரையும் ஒரு விதத்தில் காப்பாற்றின என் சின்ன வயசு சிநேகிதன் சேகரைத் தான் பார்த்தேன். அதான் உடனே தூசிப்பட்டிக்கு அவசரமா  கிளம்பிப் போனேன். அங்கே என்னோட பழைய நண்பர்கள் கிட்டே விசாரிச்சேன். நான் கொஞ்ச வருஷம் ஊரை விட்டு ஓடிப்போனப்போ சேகர் கல்யாணம் பண்ணிகிட்டான்னும்.. .ஆனா சீக்கிரமே மனசு பேதலிச்சு  இறந்துட்டான்னும் சொன்னாங்க. ஒரே ஒரு பையன் இருந்ததாகவும் அவனும் எங்கேயோ போய்ட்டாததாகவும் தகவல் கிடைச்சுது.

 

அப்புறம் வந்து தருணோட ஆசிரமத்துல விசாரிச்சேன். அவன் தூசிப்பட்டிலேந்து வந்தாங்கறதைத்தவிர வேற எதுவும் அவங்களுக்குத் தெரியலை. ஆனா எனக்கு உறுதியாகிடிச்சு… ஆகாஷ் மயங்கி இருந்த சரியான சமயத்துல தருணும் ஒரு காய் நகர்த்தினான்… அவனோட எண்ணமும் எனக்குத் தெரிஞ்சுது…  ஆனாலும் இந்த சொத்து இன்னிக்கி இருக்கறதுக்கு காரணமே சேகர் தான். ஆனாலும் அவனுக்கு நான் செஞ்சது துரோகம் தான்.

தருண் என் பொண்ணை உண்மையாக நேசிக்கிறான். அவனுக்கு என் பணம் குறி இல்லை. என்னைப் பழிவாங்கவும் அவன் நினைக்கலை…. அதான்…. எல்லாத்தையும் யோசிச்சி  என் நன்றிக்கடனை தீர்க்க இப்படி ஒரு பிளான் போட்டேன்….

 

ஆகாஷுக்கு இந்த பொண்ணு இல்லன்னா இன்னொண்ணு… பிருந்தாவுக்கும் அவன் மேல இருந்தது ஒரு வெறும்  ஈர்ப்பு அவ்ளோ தான்.  அவன் வெறும் குரோட்டன்ஸ் செடி. அவனை நம்பி வாழ முடியாது. இத்தனை சொத்தையும் கட்டிக்காப்பாத்தும் திறமையும் பொறுமையும் அவன்கிட்ட இல்லை… 
ஆனா தருண் என்கிற பிரகாஷ் ஆலமரம்… அவனுக்கு பணத்தோட அருமையோட  கஷ்டம்னா என்னன்னும்  நல்லாவே  தெரியும். என் பொண்ணை நல்லா வச்சுப்பான். எனக்கும் என் பொண்ணுக்குக் கெடச்ச வரம்…  புரியுதா? 

 

மினெரல் வாட்டரை பாட்டிலோடு கவிழ்த்துக்கொண்ட பிறகும் தியாகுவுக்கு வாய் வறண்டே இருப்பதாக எண்ணினார்…. ஆயாசம் மிக… அப்படியே சோஃபாவில் சாய்ந்தார்… .

சார்…. நீங்க எங்கேயோ போய்ட்டிங்க… இனிமே உங்க பேரு மாஸ்டர் ஸ்ட்ரோக் மகாலிங்கம்னு வச்சுக்கலாம்… ..

என்று சொல்லிக்கொண்டே…