human-brain-with-tumor

(சிறுகதை)

வழுக்கும் ஆங்கிலத்தில் போர்டிங் அறிவிப்பு வந்ததும்தான் ராஜேஷுக்கு சுயநினைவு வந்தது. அதுவரை அவன் JFK வில் இருக்க, மனம் எங்கோ தறிகெட்டு திரிந்துகொண்டிருந்ததை அவனே அறியவில்லை. ஒட்டவைத்த செயற்கைச் சிரிப்போடு வெள்ளைகாரி ஒருத்தி வழியனுப்பி வைத்தாள் என்ஜாய் யுவர் பிளைட் என்று. வழக்கமாய் அதை தலையசைத்து மதிக்கும் அவன் அன்று சரியான நிலையில் இல்லை. ப்ரெயின் ட்யூமர்? எப்படி? அதுவும் இருவருக்கும்? என்று அதிசயித்தான்.

 

கிட்டத்தட்ட 14 மணிநேரம் இன்னும் பறக்க வேண்டும். அதுவும் தனியாக இல்லாமல் இரு நண்பர்கள் பற்றிய துன்பச் செய்தியோடு. விமானத்தின் அடிவயிற்று கனத்தை விட அவன் மனம் இன்னும் அதிகம் கனத்தது.

 

செந்தில் அவன் கூட பள்ளியில் படித்தவன். அதிகம் பேசாத ஆனால் மிக புத்திசாலியான பையன். இவனுக்கும் அவனைப் பார்த்தவுடன் பிடித்து விட்டது. இரண்டு வருடம் பதினொன்று, பன்னிரண்டு வகுப்புகளில் உயிருக்குயிரான தோழன் ஆகிவிட்டான். பிறகு வெவ்வேறு வேலைகளுக்குச் சென்ற பின்னும் என்றுமே பள்ளியில் படித்த காலங்கள் போலவே அவர்களுக்குள் நட்பு தொடர்ந்தது. இப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சயமானது அவனுக்கு. அதற்குள் தலைவலி என்று போனவனுக்கு தலையில் இடியே இறங்கியது போல் இருந்திருக்கும். அதான் அவனோட அம்மா எப்பவும் டெலிபோனில் பேசும்போது உற்சாகமாய் பேசுவார்கள். ஆனால் போன முறை அப்படி இல்லாது இருந்த போதே ராஜேஷ் முடிவு செய்துவிட்டான். எதோ சரியில்லை. பிறகு ரொம்பவும் வற்புறுத்திக் கேட்டபின் அழ ஆரம்பித்து விட்டாள் அந்த அம்மா.

“பாரு ராஜேஷ், உன் பிரண்டுக்கு… ப்ரெயின் ட்யூமர்… ரொம்ப சிரமப்பட்டு பொண்ணு தேடி இப்போ தான் நிச்சயம் ஆகி இருக்கு. கல்யாணத்துக்கு இன்னும் 3 மாசம் இருக்கு. அதுக்கு நடுவுல…”

“சார், டூ யூ வாண்ட் எனிதிங் டு ட்ரின்க்? சார், எஸ்க்யூஸ்மீ…”

ஏர் ஹோஸ்டஸ் உலுக்கினாள். “நோ தேங்க்ஸ்” என்று மீண்டும் கண்களை மூடினான்.

 

இன்னொரு நண்பன்… வருண்… கல்லூரியில். ஒரே பிரிவு இல்லையென்றாலும் இருவரும் காலேஜ் புட்பால் டீமில் ஒன்றாக விளையாடினவர்கள். அவனும்  செந்தில் போல மிக நெருக்கமான நண்பன். அவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகி இருந்தது. அவனும் தலைவலி என்று ஹாஸ்பிடல் செல்ல… ஸ்கேன் எடுக்க… ப்ரெயின் ட்யூமர்… நொறுங்கிவிட்டான். புதிதாக கல்யாணம் ஆகி இன்னும் முழுதாக ஒரு வருடம் கூட ஆகவில்லை. கடைசியாக அவன் கல்யாணத்துக்காக வந்தது தான்….

 

ப்ரஸ்ஸல்சில் வேறு விமானம் மாறி உட்கார்ந்த போதும்… அதே நினைவுகள் மீண்டும் மீண்டும்…

 

சென்னையைத் தொட்டவுடன் நேரே செந்திலின் ஆஸ்பிடல் ஏர்போர்ட்டுக்கு அருகிலேயே… அவனுக்கு நாளன்னிக்கு ஒரு சர்ஜெரி என்று அவன் அம்மா சொன்னாள். அதனால் முதலில் அங்கு சென்றான். செந்திலின் ரூமுக்கு முன்னால் ஒரு இளம் பெண், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், அவருடைய மனைவி மற்றும் செந்திலின் அப்பா அம்மா. எல்லோரையும் தாண்டி ரூமுக்குள் சென்றால் மொட்டையாக செந்தில். கண்களில் நீர்த்துளி எட்டிப்பார்க்க கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு…. செந்தில் என்றான்… அவனுக்கே கேட்கவில்லை…. தொண்டையைக் கணைத்துக்கொண்டு மறுமுறை “செந்தில்”… என்றான் சத்தமாக. கண்ணை விழித்துப் பார்த்தான் செந்தில்.

 

உடனே புன்னகையோடு “வாடா… யார் சொன்னது உனக்கு” என்று கேட்டான். பதில் சொல்லாமல் ஒரு சிரிப்பு சிரித்தான் ராஜேஷ்.

எல்லாம் சரியாகிடும்டா… நீ ஜாலியா இரு…. என்றான்

நிச்சயமா… நான் மொதல்ல ஒடஞ்சு போய்ட்டேன்டா…. அதுவும் நிச்சயதார்த்தம் முடிஞ்ச பின்னாடி இப்படி… அவங்க வீட்லயே போய் பேசினேன்… உங்க பொண்ணுக்கு வேற வாழ்க்கை பார்க்கறதுன்னா தாராளமா பாருங்கன்னு…

ஆனா….. இரு… நான் அவளையே கூப்பிடறேன்….

என்று சொல்லி வெளியில் நின்ற அந்த இளம்பெண்ணை மட்டும் உள்ளே வரச்சொன்னான்.

ராஜேஷ்… இது கீதா…. 

கீதா… ராஜேஷ்…என் ஸ்கூல் பிரண்ட்… 

யு ஆர் கிரேட் என்றான்… கீதாவிடம்…

இல்லண்ணா… தனக்கு இந்த வியாதி இருக்குன்னு மறைக்காம வந்து சொன்னாரே… இவர் தான் கிரேட்… என்றாள்…

 

சில வினாடிகள் அந்த ஜோடி தங்கள் கண்களால் பரிபாஷையில் பேசியதை அந்நியனாக அவன்  பார்த்திருக்கக் கூடாது ஆனாலும் என்ன ஒரு புரிதல் அதுவும் கல்யாணத்துக்கு முன்பே என்று வியந்து வாழ்த்தி விட்டு…

 

வரேண்டா செந்தில்… எதுன்னாலும் போன் பண்ண சொல்லு அம்மாவை ன்னு சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

அடுத்து வருணின் ஆஸ்பிடல்… அங்கேயும் அதே போல் ஐம்பது வயது பெரியவர், ஒரு முப்பது வயது இளைஞன், ஒரு இளம்பெண் கழுத்தில் தாலியோடு, வருத்தத்தோடு வருணின் பெற்றோர்கள். உள்ளே சென்றான்…வருணும் மொட்டையாக. அனால் செந்திலிடம் இருந்த உற்சாகம் இல்லை.

எல்லாம் சரியாகிடும்டா… அதே வாசகம்…

ப்ப்ச்ச்… நீயாவது வந்தியேடா… என்றான் வருண்

கடைசியா உன் கல்யாணத்துக்கு வந்தேன்… ஆனா மறுபடியும் உன்னை இப்படி பார்க்க வருவேன்னு நெனைக்கலடா… 

ம்ம்ம்…. ஒரு ரெண்டு நிமிஷம் இரு… நான் கூப்பிடறேன் என்று சொல்லிவிட்டு வெளியே நின்றிருந்த மூவரையும் அழைத்தான். அவர்கள் பையில் கொத்தாக நூலில் தையல் போட்ட வெளிர் பச்சைநிறத்தில் நீளவாக்கில் மடிக்கப்பட்ட பெரிய தாள்கள் இருந்தன. புரிந்து கொண்டான்….

வந்தவர்கள் சில நிமிடம் கழித்து எந்தவித சலனமும் இன்றி வெளியேற, வருண் ராஜேஷை உள்ளே அழைத்தான்….

 

பார்த்துட்டியா? பேப்பர்ஸ் ஸைன் பண்ணிட்டேன்… வேற என்ன பண்ண முடியும். ஒரே பொண்ணு… அவளும் ரெண்டு மாசம் பார்த்தா…. அப்புறம் இது சரிவராதுன்னு … நோ சாய்ஸ்…

 

ராஜேஷால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கொஞ்ச நேரம் பேசிவிட்டு வெளியில் வந்து ஒரு மரத்தடியில் நின்று சில நிமிடம் யோசித்தான். ஒரே நாளில் இருவேறு அனுபவம்… இந்த இரண்டு பேரில் யார் நல்லவள், யார் கெட்டவள்? தெரியவில்லை.

 

நல்லவர்களா கெட்டவர்களோ அதை முடிவு செய்வது நம் வேலையன்று. அது சரியானதும் அன்று என எண்ணிக்கொண்டே…. தன் மொபைலைப் பார்த்தான். 4 மிஸ்ட் கால்கள். அவனது அட்வொகேட்.

அப்புறம் ஒரு மெசேஜ் வேறு… ஹாய் ராஜேஷ், நெக்ஸ்ட் ஹியரிங் இன் யுவர் சைல்டு கஸ்ட்டோடியன் கேஸ்  இஸ் ஆன் 4th ஜூன். கால் மீ வென் யூ கேன். 

 

செந்தில் போல தனக்கும் ப்ரெயின் ட்யூமராவது வந்திருக்கலாமோ என்ற எண்ணம் வந்ததை அவனால் தவிர்க்க முடியவில்லை.