Child on hands

 

உனக்காகக் காத்திருந்தோம்

ஓரிரு வருடங்கள் தான்…

 

தேவனோ தேவதையோ

தேவை எல்லாம் இதுதான்…

ஒரு குட்டிச் சொப்புவாய்…

பஞ்சுபஞ்சாய் பத்து விரல்

செதுக்கிய ரோஜாஇதழாய்

சிறிய பாதங்கள் இரண்டு

பூனைக்குட்டியைப் போல்

புசு புசுவென உடம்பு

தூக்கிவைத்து முகத்தில்

மெல்லத் தேய்த்துக்கொள்ள…

திறக்கக் கூசும் சின்னக் கண்கள்

எச்சில் ஒழுகும் ஒரு பொக்கை வாய்

என் கன்னத்திற்கென்றே

அளவெடுத்துச் செய்த

சின்னஞ்சிறு உள்ளங்கைகள்….

சண்ண நீர் பீச்சி என்

முகமெல்லாம் சிதற அடிக்க

உப்புக்கரிப்பிலும் உணர

ஒரு சிறு உடல் வெப்பம்…

 

அவ்வளவுதான் எதிர்பார்ப்பு…

இல்லை… வைத்துக்கொள் என்று

இறைவன் தந்தான் ஒரு

துணியில் சுற்றி,

கண்கள் திறவாது

வயிறு மேலும் கீழும் போய்வர

வாய்விட்டு அழும் ஒரு

இன்பப் பொட்டலம்…

 

கண்ணே திறக்கவில்லை

சிரித்தாய் நீ….

சிலிர்த்தேன் நான்…

வாயார வைதேன்

அவனை… கடவுள் என்ற

ஓர வஞ்சனைக்காரனை….

எங்கு வைத்திருந்தான் உன்னை?

என்னிடம் அனுப்பாமல்

இத்தனை நாள் என்று…

அன்று முதல்…

என் நாட்கள் உனதாகின

விழித்திருக்கும் போதெல்லாம் உன்னை

விழுங்குவது போல் தான் பார்த்தேன்…

 

அகல விரித்தாலும் – சில

அங்குலங்களே நீளமான

உன் குட்டிக்கால்களை

அஞ்சலக முத்திரை போல்

அழுத்தி அழுத்தி எடுத்தேன்

அப்படியாவது என் முகத்தில்…

அடையாளம் வருமா?

வளர்ந்தால் போகுமே இந்த

வனப்பு? அதனாலா?

 

வயிற்றுவலியாம் உனக்கு…

விடாமல் அழுவாய் நீ…

அதையும் கூட ரசித்தேன்…

 

நான் யாரென உனக்கு

நன்கு தெரியும் முன்கூட…

என் இடது முழங்கை மட்டும்

உனக்கு பரிச்சயம்…

 

வசதி கேட்கும் உன் சின்ன உடம்பு

வாகாய் வந்து இடுங்கும் அதில்…

வலது கையால் முதுகில் தட்ட

வலி மறந்து உறங்குவாய்…

வலியை… என் கைக்குத் தந்து…

வலது கைக்கு மாற்றுவேன்

வணங்காது சில நொடி கூட

சிணுங்குவாய் மெலிதாய்….

இடதுகைக்கே பழையபடி

இடம் மாற்றுவேன் உன்னை…

இரவுகள் எத்தனையோ

இப்படித்தான் கழிந்தன…

இனிமைதான் நீ தந்த வலியும்…

 

இரண்டு வருடம்…

 

நீ இருந்தது என் கைமேல்…

உன் எச்சில் என்மேல் சிதற

உணவு ஊட்டியது என் கைகள்…

உன்னைப் படுக்கவைத்து

உன்னோடே உறங்குவேன்…

உறக்கத்திலும் விழித்திருந்தேன்

உனக்குக் காவலாய்…

 

பிறந்து சில நாட்களான

பூவின் சின்னஞ்சிறு விரல்

நகம் வெட்டும் கலையில்

நானே நிபுணனானேன்…

 

வளர்ந்தாய் நீ…

தளர் நடை

நடந்தாய் நீ…

தோளில் உனைச் சுமந்து …

துள்ளிக் குதித்தால்

சிரிப்பாய் நீ…

என் கண்ணுக்குள்

உன் புகைப்படம்

எடுத்து வைக்க மறந்தேன்…

போகட்டும்…

 

அழகிய மூன்றாம் பிறை நீ….

அதுதான் உன் உறவும் …

உன் மழலையை அன்று

உண்டு களித்தேன்

ஆனால் …

எவ்வளவு தூரம் சென்றாய்?

என்னை விட்டு நீ இன்று?

 

சட்டமோ சந்தர்ப்பமோ

முள்வேலியாய் நம்மிடையே

முளைத்தன எங்கிருந்தோ…

யோசிக்க ஒன்றுமில்லாது

மனம் பிணமாகும் தருணங்களில்

புதைகுழியில் அடைத்த

உன் நினைவே மீண்டு வரும்….

 

பிறகு…

என்றோ ஒரு நாள் சந்தித்தோம்…

உனைப் பார்த்தேன்

உண்மையில் மகிழ்ந்தேனா?

 

என்னையும் தெரியவில்லை…

என் இடது கையையும்… உனக்கு…

நானே அதிகம் நிறைந்த உன்

அன்றைய நினைவுகள் …

இன்றோ…

ஆழ் கடல் மழைத்துளியாய்

அடையாளங்கள் இன்றி…

 

அறிமுகம் செய்துவைக்கும் அளவு

அந்நியனாகிப் போனேனா?

நீ கிடந்து புரண்ட என்

இடதுகை இன்று….

பெறுநர் இல்லாத கடிதமாய்…

 

இமைகள் திறவாத நீயும்

இமைகள் மூடாத நானும் நிறைந்த

அழகிய மூன்றாம் பிறை நாட்களை

அசைபோட்டுக் கொண்டே

 

உன்னிலும் என்னிலும்

பெரியது வாழ்க்கை…

அதில் நான் பிறர்க்கும்

ஆற்றவேண்டிய கடமைகள்…

அவற்றை நோக்கி என்

அடியெத்து நடக்கிறேன்…

 

முன் செல்லும் பேருந்தின்

ஜன்னல் வழிப்பார்வையில்

பின் செல்லும் மரங்களாய்

உன் நினைவுகள்…

 

காலம் ஓடும்….

காண்பேன் உன்னை…

என் இடது கைக்கு மேலும்

எவ்வளவோ பெரிதாய் இருப்பாய்…

மீண்டும் சந்திக்கலாம்…

 

ஆனால்…

என்னை நீ கண்டுகொள்ளும்

அறிமுகம் தேவையற்ற

அந்நிலையில் மட்டுமே…

 

 

இப்படிக்கு….

என் இடது கை