310AD154-8919-4337-A896-995AE9E52FBD.jpeg

 

கணேச ஐயர் மெஸ் என்று ஊருக்கு ஒன்றாவது நிச்சயம் இருக்கும். எந்த ஊரானாலும், மாமி மெஸ், அம்மா மெஸ் என்று பேச்சிலர்களுக்கு என்றே …
அப்படி ஒரு பாயிண்ட் தான் இந்த கணேச ஐயர் மெஸ். சின்ன ஒட்டு வீடு அதில் முன் பகுதியில் கடை. பின் பகுதியில் தட்டி வைத்து இரண்டாய்த் தடுத்து அவர் வீடு. சாமான் வைக்கும் குடோன் என கஷ்ட ஜீவனம். ஆனாலும், தரத்தில் அவர் என்றுமே விட்டுக்கொடுத்ததில்லை. எல்லாக் கடைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிகமாகவே வைப்பவர்.
“என்ன அய்யிரே! இப்படி இருந்தா நாளைக்கு எப்படி பொட்டப்புள்ளைங்களைக்  கரைசேர்த்துவீங்க? ஏற்கெனவே ரெண்டு. இப்போ இன்னொன்னு வேற… விவரமா இருக்க வேணாமா? கொழம்பு, ரசமெல்லாம் இப்படியா தாராளமா தருவீங்க? நாப்பது ரூபாய் வாங்கிட்டு அறுபது ரூபாய்க்கு மீல்ஸ் தரீங்களே!” என்று சீண்டுவதற்கென்றே ஆள் வரும். பக்கத்து மளிகைக்  கடையில் வேலை செய்யும் மணி தான். ஆனால் ஐயர் சிரித்துக்கொண்டே பதில் சொல்வார்.
“மணி! என்ன தலைவர் படம் முதல் நாள் முதல் ஷோவா? செட்டியார் தர்ற சம்பளம் எப்படி காணும் உனக்கு ப்ளாக்ல டிக்கட் வாங்க? சொல்லு… முந்திரியா? கிஸ்மிஸ்ஸா? இந்த மாசம் எதுல லாபம் நீ பார்த்த?” என்று மடக்கினால்,
“அட விடுங்க அய்யரே! ஊர்ல உலகத்துல அவனவன் என்னென்னமோ பண்றான்… சரி  நான் வரேன்…” என்று நழுவி விடுவான்…
ஆனாலும் அவர் பாலிசி அவர் தொடர்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் காலை 8 லிருந்து 9 வரை ஒரு 10 – 15 இட்லிப் பொட்டலங்களை பையில் வைத்துக்கொண்டு சைக்கிளில் கிளம்புவார். அவர் சைக்கிளில் போவது மட்டும் தான் தெரியும் பல பேருக்கு. எதற்கு என்று பெரும்பாலும் தெரியாது.
சங்கரன் இம்மிக்ரேஷன் முடித்து வர ரொம்ப நேரமாகி விட்டது. ஏர்போர்ட்டில் அவருக்கான பெயர்ப்பலகை “டாக்டர் சங்கரன் (USA) , நியூரோசர்ஜன் ” என்று மட்டும் சிக்கனமாக முடித்து விடப் பட்டிருந்தது. ஆனால், அந்த சங்கரனைத் தெரியாத ஆஸ்பத்திரிகளே வட அமெரிக்கக் கண்டத்தில் இல்லை என்று வரவேற்க வந்திருந்த கூட்டத்தில் சில பேருக்குத் தான் தெரியும். ஒவ்வொன்றாக எழுதினால் மீனம்பாக்கம் முதல் பல்லாவரம் வரை நீளும் சங்கரனின் படிப்புகளும், அவார்டுகளும், மெடல்களும்.
பெல்கம் ஹோம் டாக்டர்! பீ ஆர்  பெரி மச் பெயிட்டிங் பார் யூ ஈகர்லி. திஸ் லிட்டில் கார்ல்… இட் ஈஜ் எ பெரி பெரி….  என்று சரியாய் டியூன் செய்யாததால் விட்டு விட்டு பேசும் விவிதபாரதி போல் அவர் திணற…
ஹம் ஹிந்தி மே பீ பாத் கர் சக்தே ஹைன் டாக்டர் …
அப்படின்னு சங்கரன் சொன்னவுடன் தான் அந்த சீப் டாக்டர் மொஹந்திக்கு பத்துநாள் விடாத டயரியா படக்கென நின்றது போல ஒரு பெரிய நிம்மதி….
வழிநெடுக அவர்கள் செய்த சிகிச்சைகள், அவற்றின் பலன் முதல் நேற்றைய தினம் திடீரென வந்த ஸ்வாசக் கோளாறைத் தாங்க முடியாத அந்த 15 வயதுச் சிறுமி படும் அவஸ்தையை சொன்னார்கள். அனைத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்டு காரிலிருந்து இறங்கப் போனவன், திடீரென அந்த வயதானவரைப் பார்த்தான். எதோ நினைவு வர… அவசரம் என்பதால் அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஓட்டமும் நடையாய் ICU நோக்கிச் சென்றான். அவசரம் அவசரமாய் குளித்து அறுவைசிகிச்சைக்கான உடை மாற்றி பேஷண்ட் கேஸ் ஹிஸ்டரி கொண்டு வரச்சொன்னான்.
முதலில் அவள் விலாசத்தைப் பார்த்த போதே அவனுக்கு சந்தேகம் வந்தது. அந்த பெரியவர் பற்றி சற்று விசாரித்ததும் யார் என்றும் தெரிந்து கொண்டான். இருந்தும் மனதில் எந்த உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காது போய் அறுவை சிகிச்சை செய்துவிட்டு வந்தான். ஏழு மணிநேரம். அதீத கவனம், அர்ப்பணிப்பு, ஒரே சிந்தனை என்று. வெளியே வந்து அறுவை சிகிச்சை பற்றிய விளக்கம் பிற டாக்டர்களுக்குக் கொடுத்துவிட்டு ஓய்வறை எங்கே என்று கேட்டுப் போய் படுத்தான்.
மனதில் வருடங்கள் பல பின்னோக்கிப் போனான்…. அன்று அவன் ஒரு அநாதை. குடிகார அப்பாவால் மனம் வெறுத்தோ அல்லது வேறொருவனுடன் விரும்பியோ ஒரே பையனை விட்டு விட்டு காணாமல் போனாள் அம்மா. 14 வயதான அவன் ஒரு சைக்கிள் கடையில் மாலையில் மட்டும் பஞ்சர் போடும் வேலைக்கு சேர, பெரிய மனதுடைய அந்த சைக்கிள் கடை தாத்தா பகலில்  அவன் பள்ளிக்குச் சென்று வர உதவினார். மதிய உணவில் அவன் வயிறு நிறைய, அவன் நன்கு படித்தான். மாலை வந்து அந்த தாத்தாவுக்கு உதவியாய் இருந்து இரவு அங்கேயே உறங்குவான். தாத்தா தன் வீட்டுக்கு இரவு 8 மணிக்கு மேல் செல்வார். காலையில் 9 மணிக்கு மீண்டும் கடை திறப்பார். அவருக்கும் யாருமில்லாதது இருவருக்கும் இடையே எதோ புது பந்தத்தைத் தோற்றுவித்தது.
ஒரு நாள் அந்தக் கடைக்கு பஞ்சர் போட வந்தார் ஐயர்.
டாக்டர்! டாக்டர்! என்ற சத்தம் கேட்டு விழித்தான். உங்க பிளைட்டுக்கு டைம் ஆச்சு. ரெண்டு மணி ஆகும் இங்கேருந்து ஏர்போர்ட்டுக்கு. அதனால பெட்டெர் வீ லீவ்” என்றாள் ஒரு ஸ்மார்ட்டான ஹவுஸ் சர்ஜன் தங்கிலீஷில்.
கிளம்பினான்… செக் அவுட், செக்கூரிட்டி, இம்மிகிரேஷன் என எல்லாம் கடந்து தன் முதல்வகுப்பு இருக்கையில் அமர்ந்தான். கண்களில் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது.
அய்யர் பஞ்சர் போட வந்த நாளை மீண்டும் நினைத்தான். இவனைப் பார்க்கும் போதே ஒரு நல்ல அபிப்ராயம் தோன்ற, அவனைப் பற்றி அவர்  விசாரித்தார். பின் தன் கையில் இருந்த இட்லி  பொட்டலம் ஒன்றை கொடுத்து, “தினமும் இரவும் கூட வந்து என் கடையில் சாப்பிடு” என்று அன்பாகச் சொல்லிவிட்டுச் சென்றார். அவனும் தினமும் அவர் கடைக்குச் சென்று உண்டான். அவர் தினமும் காலையில் இட்லிப் பொட்டலம் தந்தார்.
இதுதான் அய்யரின் வழக்கம். ஏதாவது ஒரு தெருமுனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அனாதையாய் நிற்கும் சில சிறுவர் சிறுமிகள் அல்லது சைக்கிள் கடைகளில் வேலை செய்யும் ஏழைச் சிறுவர்கள் எனத் தேடித்தேடி பொட்டலங்களைக் கொடுத்து கொஞ்சம் சாப்பிடும் வரை பார்த்துவிட்டு திரும்ப கடைக்கு வந்து கல்லாவை கவனிப்பார்.
இவன் ப்ளஸ்டூவில் நல்ல மார்க் எடுத்து  தேர்வான விஷயத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தான் ஸ்பெஷலாக செய்த பால்கோவாவை அவரே ஊட்டி விட்டார். பின்னர் மேலே என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார். தான் டாக்டராக விரும்புவதாகவும் அவரை மாதிரியே ஒரு நல்லவர் மும்பையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்த்து படிப்புக்கு அவரே செலவு செய்யறேன்னு சொல்லிருக்கார் என்றும், நாளைக்கு மும்பை போக ட்ரெயின் டிக்கெட் அனுப்பி இருக்கார் என்றும் சொன்னான்.
ரொம்ப சந்தோசம். சங்கரா! நீ நல்லா படிச்சு கைராசி டாக்டராகி, உனக்கு இந்த மும்பை ஆள் போல யாரோ செய்யும் உதவிக்கு பதிலா உன்னைப் போலவே கஷ்டப்படறவங்களுக்கு நீ உதவி செய்யும் நிலைக்கு வளரணும்… போயிட்டு வா!  என்றார் அய்யர்.
“உங்களுக்கு நான் என்ன செய்யப்போறேன்னு தெரியலையே” என்று கேட்பதற்குள் சைக்கிளில் இட்லிப் பொட்டலங்களோடு கிளம்பி விட்டார்.
சில வருடம்  மும்பை வாசம். மீண்டும் ஊருக்கு வந்து, ஐயரைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கப் போனான். அங்கே அந்த ஒட்டு வீடு இடிந்து கிடக்க, என்ன ஆனது என்று அக்கம் பக்கம் விசாரித்தான். அய்யர் யாருக்கோ கடன் திருப்பிக் கொடுக்க வழி இல்லாது கஷ்டப் பட்டதால், கடையை எழுதிக் கொடுத்து விட்டதாகச் சொன்னார்கள். எங்கு போனார் அவர் என்ற கேள்விக்கு யாருமே சரியான பதில் சொல்லாததில் அவனுக்கு மிகவும் கோவம் தான். பின் மருத்துவப் படிப்பு முடித்து, மேல் படிப்புக்கு என்று அமெரிக்கா போனாலும், மனதில் ஒரு குறை அவனுக்கு. அய்யருக்கு தான் பட்ட நன்றிக் கடனை எப்படி அடைப்பது என்று.
“எக்ஸ்கியூஸ்மீ ஸார்!  டூ யூ வாண்ட் எனிதிங் டு ஈட்?” என்று கேட்டாள் சீரான புருவம் கொண்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பணிப்பெண்.
“நோ தேங்க்ஸ்” என்று சொல்லிப் படுத்தான்.
அங்கே அந்த குட்டிப்பெண் கண் விழித்ததும் அந்த பெரியவருக்கு மகிழ்ச்சியில் அழுகை வர… வாயைத் துண்டால் பொத்திக்கொண்டு பில் பணம் செலுத்த கவுண்ட்டருக்குச் சென்றார்.
அங்கே அவர் பெயரை விசாரித்து, அந்த சிகிச்சைக்குச் செலவு அனைத்தையும் டாக்டர் சங்கரன் செலுத்திவிட்டதாகவும், இன்னும் எவ்வ்ளவு செலவானாலும் தனக்கு நேரிடையாக தெரிவிக்கச் சொல்லி சொன்னதாகவும் சொன்னார்கள். அய்யருக்கு புரியவே இல்லை. யார் இந்த சங்கரன்? எதற்கு அவர் என் குழந்தைக்கு செலவு செய்ய வேண்டும் என்று.

பின் ஒரு சீல் செய்த கவர் ஒன்றையும் அவரிடம் டாக்டர் சங்கரன் கொடுக்கச் சொன்னதாகக் கொடுத்தனர். அய்யர் பிரித்துப் படித்து அப்படியே சேரில் உட்கார்ந்தார். அவர் இந்த உலகத்திலேயே இல்லை…

“அய்யர் மாமா! பட்ட கடனை அடைக்க உங்க கடையையே எழுதிக் குடுத்துட்டீங்கன்னு கேள்விப் பட்டேன். இன்னிக்கு நான் உங்க குட்டிப் பொண்ணுக்கு பண்ண ஆபரேஷன் உங்க ஒரு இட்லி பொட்டலத்துக்கு கூட ஈடாகாது. அதனால, நீங்க  சங்கடப்பட வேண்டாம். நான் உங்களை அடையாளம் கண்டுக்கிட்டேன். அப்புறம் என்னால அந்த ஆஸ்பத்திரியில் பேசக் கூட முடியலை. அதனால, இந்த கடிதம். இன்னும் கூட நான் உங்களுக்கு கடன் பட்டவன். நல்ல விசாரிச்சப்போ உங்க மூத்த பொண்ணு கல்யாணத்துக்காக வாங்கின கடனால தான் உங்க கடை போச்சுன்னு தெரிஞ்சுகிட்டேன். அவ விதவையா வீட்டுக்கு திரும்ப வந்தப்போலேர்ந்து உங்க உடம்பும் மனசும் சரியா இல்லைன்னும் அதனால மெஸ்ஸும் சரியா நடக்கலைன்னும் தெரிஞ்சுது. உங்களுக்கு சம்மதம்னா உங்க மூத்த பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். உங்களுக்கு சரின்னு தோணினா, இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க.
இப்படிக்கு
உங்க சங்கரன் (சைக்கிள் கடை பையன்)”
கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.