இன்னிக்கும் இட்லியா? மனுசனுக்கு எரிச்சலா வருதில்ல. அறிவில்ல உனக்கு? போ! நான் ஆபீஸ் கேன்டீன்ல சாப்டுக்கறேன். இதை நீயே தின்னு.

 

செந்தில் கத்துவது ஒன்றும் புதிதல்ல. சந்தியாவுக்கு கல்யாணமான இந்த ஒன்றரை வருடத்தில் பழகிவிட்டது. அவளும் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் பதவியில் இருக்கும் ஒர்கிங் வுமன் என்ற வகையில் அலுவலகத்திலும், வீட்டிலும் அவளுக்கு சுமை அதிகமே. சிறுவயதில் இருந்து பொறுப்புகளைச் சுமக்கக் கற்றுக் கொடுத்து வளர்ந்திருக்கும் அவள் பெற்றோர் தான் அவள் ஒரு நல்ல குடும்பத்தலைவியாக பரிமளிக்கக் காரணம். ஆனாலும், சில ஆண்களை மட்டும் திருப்திப்படுத்தவே முடியாது இந்த உலகத்தில்.

 

அவர்கள் வேலைக்குச் செல்லும் பெண்களின் கஷ்டங்களை கிஞ்சித்தும் நினைத்தே பார்ப்பதில்லை. பாராட்டு வேண்டாம். அட திட்டாமலாவது இருக்கலாமே. ம்ஹ்ம். புதுப் பொண்டாட்டி மோகம் என்பது தணிந்தவுடனே செந்தில் அந்த ஜாதியாகிவிட்டான். கொஞ்சம் முன்கோபம், சுடுசொல் தவிர மற்றபடி அவனிடம் எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லாததால், சந்தியா இதையெல்லாம் குடும்பவாழ்க்கையில் சகஜம் என்று மனமுதிர்ச்சியுடன் ஒதுக்கிவிட்டு அவனிடம் உள்ள நிறைகளை மட்டும் பார்த்து அட்ஜஸ்ட் செய்ததால் அவள் குடும்ப வண்டி நன்றாகவே ஓடிக்கொண்டிருந்தது. தான் எவ்வளவு அன்பும், அக்கறையும் கலந்து சமைக்கும் சாப்பாடு மேல் செந்திலுக்கு ஏன் இவ்வளவு அலட்சியம் என்று சந்தியாவால்  சங்கடப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் அவன் நல்லவன் தான். குடி, போதை  போன்ற பழக்கங்கள் இருப்பவர்களின் மனைவிகளை நினைத்துப் பார்த்து கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்.

 

அந்தக் கண்ணாடி வேய்ந்த பெரிய கட்டடம் எத்தனை விதமான மனிதர்களைப் பார்க்கிறது தினமும். ஒரு டவர் முழுக்க எதோ வெளிநாட்டு வங்கிக்காக இங்கே மாங்கு மாங்கென்று மாடாய்  உழைத்து மென்பொருள் வடிவமைக்கும் ஒருவித இயந்திர மனிதர்கள். அவர்களில் ஒரு மைனாரிட்டி சதவிகிதம் தவிர மற்றபடி “ஐடி கல்ச்சர்” எனப்படுகிற பலகோடி மைல்களுக்கு அப்பால் வானவெளியில் வேறு ஒரு சூரியக்குடும்பத்துக்குள் இருக்கும் வேறு ஒரு கோளைச் சேர்ந்த வாழ்க்கைமுறை, சமூக வரையறை, நெறிகள், சட்ட திட்டங்களைப் பின்பற்றும் ஆனால், துரதிர்ஷ்டவசமாக பூமி என்ற இந்த பாழும் பொல்லாக் கிரகத்தில் வந்து பிறப்பெடுத்து விட்டதாகத் தங்களை எண்ணிக் கொள்ளும் அன்ஃபார்ச்சுனேட் அயல்கிரகவாசியினர்  பெரும்பான்மையாக  வேலை செய்யும் அலுவலகம்.

 

இன்னொரு டவரில் விதவிதமாக பல கம்பெனிகள். அங்கும் விதவிதமாக ஆனால், ஒரு பெருநகரம்… இல்லை… நரகத்தில் வாழ்வோரின் அன்றாட வாழ்வில் வரும் எல்லா சோதனை, வேதனைகளோடு கூடிய இன்னொரு வித இயந்திர மனிதர்கள். செந்திலும் அதில் ஒருவன்.

 

காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடாததால் வயிறு பசியில் துடிக்க, ஒரு வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்து வந்து ஒரு டேபிளில் உட்கார்ந்தான். அடுத்த டேபிளில் முதல் டவரைச் சேர்ந்த வேற்றுகிரக வாசிகள் வந்து அமர, அவர்கள் பேசியது பிடிக்காவிட்டாலும், காதில் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

ஹேய்! ஹவ்வார்யூ? சாரிடி… உன் கல்யாணத்துக்கு வர முடியல…ஆன்சைட் முடிஞ்சு நான் போன வாரம் தான் வந்தேன். என்ன உன் ஹப்பி எப்படி இருக்காரு?

 

பரவால்ல… அயம் குட்.. அவனும் நல்லா இருக்கான்.

 

ஓ! லவ் மேரேஜா? அதான் அவன் இவன்… ஹாங்?

 

இல்லப்பா… அரேஞ்சுடு தான் ஆனா. சும்மா இல்ல. எக்கச்செக்க கண்டிஷன் போட்டேன்ல. எனக்கு மாப்பிள்ளையா வரணும்னா ப்ராட் மைண்டடா இருக்கணும். நான் இருக்கறபடி தான் இருப்பேன். யாருக்காகவும் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்து எனக்கு சின்ன வயசுலேந்தே பழக்கம் இல்ல. நான் அப்படி வளரவும் இல்ல. அவன் இவன்னு தான் கூப்பிடுவேன். அப்புறம். பிக்கல் பிடுங்கல் இருக்கக்கூடாது. என்னன்னு புரியுதா? கிட்டத்தட்ட 1000 ஜாதகம் பார்த்தாரு எங்கப்பா. பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது. எப்படி இருந்தாலும் அவ வேலைக்குப் போயே தீருவான்னு எங்கப்பா எல்லா கண்டிஷனும் முன்னாடியே அவன்கிட்ட சொல்லிட்டாரு. நானும், எனக்கு ட்ரடிஷனலா இருக்க புடிக்காது. மூக்குத்தி எல்லாம் போட மாட்டேன். மாடர்ன் ட்ரஸ்க்கு சரி வராதுன்னு மொதல்லயே சொல்லிட்டேன். அப்புறம் அத செய்யல இத பண்ணலன்னு நொட்டை சொல்லகூடாது பாரு.

 

அதெல்லாம் சரி! ஆனா, எங்க வீட்ல அப்படி இல்லப்பா… என்ன இருந்தாலும், சில விஷயங்களை நாம ஃபாலோ பண்ணித்தானே ஆகணும்?

 

என்ன நீ? ஆன்சைட்லாம் பொய் வேலை செஞ்சுட்டு வந்திருக்க. இன்னும் பத்தாம்பசலி மாதிரி பேசறியே?

 

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எந்த நாடு, எந்த ஊருக்கு போயி என்ன வேலை செஞ்சாலும் லேடீஸா நமக்கு குடும்பத்துல சில கடமைகள்  இல்லையா? எங்க அப்பா அம்மா அப்டித்தான் சொல்லிக்குடுத்தாங்கப்பா… அவ்ளோ தான் எனக்குத் தெரியும்…

 

ப்ப்ப்பர்ர்ர்ர்ர்… கடமையா? அப்படீன்னா?

 

அட! என்ன நீ? டு ஸ்டார்ட் வித்… தி பெஸ்ட் வே டு என்டர் எ மேன்’ஸ் ஹார்ட் இஸ் த்ரூ ஹிஸ் ஸ்டமக்… இல்லையா?

 

ஓ! அப்படீன்னா சமையல் செஞ்சாத்தான் பொண்டாட்டியோ?

ஏன்? உங்க வீட்ல?

ம்ம்ம்  இங்க பாரு… அந்த டேபிள்ல இருக்காளே… அவளை மாதிரி அதிகம் படிக்காத, பட்டிக்காட்டுல வளர்ந்த, பெரிய  வேலைக்குப் போயி சொந்தக்கால்ல நின்னு பெருசா காசு சம்பாதிக்க வக்கில்லாத பொம்பளைங்க பேசறது…

அங்கே ஒரு மிடில்கிளாஸ் என்பதற்கு இலக்கணமாக நடுத்தர வயதுப் பெண் தன் டிஃபன் பாக்ஸைத் திறந்து கொண்டிருந்தாள்.

குத்துவிளக்கு தொடர்ந்தாள்.

அதான்… எங்க வீட்ல சமையலே கெடையாது. ஏன்னா, நாங்க என்னோட பேரண்ட்ஸ் வீட்டு கிட்டேயே… நான் அப்படி கறாரா கண்டிஷன் போட்டு.. வீடு எடுத்து…  எதுக்கு? எனக்கும் ஹஸ்பன்ட்க்கும் அம்மாவே டெய்லி சமைச்சு குடுத்துடுவாங்க. எனக்கு சமையல்ல அவ்வளவா ஆர்வமில்ல. சின்ன வயசிலேர்ந்து சுடு தண்ணி கூட வைக்கத் தெரியாது. என் ஹஸ்பன்ட் கூட நீதான் சமைச்சி போடணும் அப்போ தான் சாப்டுவேன்னெல்லாம் என்னிக்குமே  சொன்னதில்ல. அவன் அப்படி எதிர்பார்த்தாலும் எனக்கு கவலையுமில்ல… நான் செய்யப்போறதுமில்ல… மீறிப் பேசுனான்னா… போடா… எங்கப்பா என்னை படிக்க வச்சு வளர்த்து  ஆளாக்கி வேலைக்கு அனுப்பி நான் லட்சத்துல சம்பளம் வாங்கறேன்… எனக்கு தனியா வாழவும் தெரியும்னுட்டு போயிட்டே இருப்பேன்….

செந்திலுக்கு சோறு இறங்கவில்லை. அந்த பாவப்பட்ட கணவனை ஒரு நொடி நினைத்துக் கொண்டான். அதிர்ச்சியும் ஆச்சரியமும் மேலோங்க அந்தக் குடும்பக் குத்துவிளக்கை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். பிரியாணி புளித்தது.

செந்தில் சாப்பிடாத இட்லியை உடனே உதிர்த்து உப்புமாவாக்கி, மதியம் லஞ்ச்சாக சாப்பிட்டுக் கொண்டிருந்த  சந்தியாவின் போன் கூவ…

 

செந்திலா? இந்த நேரத்திலா? அதுவும் வாட்ஸாப் வீடியோவா?

 

ஹலோ! சொல்லுங்க…

என்னடி? இட்லியை உப்புமாவாக்கி லஞ்சுக்கு எடுத்துட்டு போய்ட்டியா? எனக்கும் கொஞ்சம் மிச்சம் வை… எப்படித்தான் இருக்குன்னு நானும் டேஸ்ட் பண்ணிப் பார்க்கறேன்… இங்க வெஜிடபிள் பிரியாணி நல்லாவே இல்ல…. செம பசி… எனக்கு என்ன காய் புடிக்கும்னு உனக்கே நல்லா தெரியுமே… செஞ்சு வை… நான் கொஞ்சம் சீக்கிரமே வந்துடுவேன்… வந்து ஒரு புடி புடிக்கறேன்… சரியா?

பொறுப்பான குடும்பப் பெண்களின் களைப்பு நிறைந்த  வெட்கச் சிரிப்பே தனி அழகு என செந்திலுக்கு அந்த நொடியில் தெரிந்தது. பிரியாணியை அப்படியே எடுத்துக் கொண்டுபோய் செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டுத்  தன் மேனேஜரிடம் சென்று…

 

சொக்கலிங்கம் சார்! ஒரு 2 அவர் பர்மிஷன் வேணும்.

 

சொக்கலிங்கம் கிண்டலாக…

 

என்ன செந்தில்? புதுமாப்பிள்ளை கூட இல்லையே நீ? இப்போ என்ன திடீர்னு? என்று கண்ணடிக்க…

 

மாப்பிள்ளை பழசு தான் சார்… ஆனா ஒரு பொறுப்பான பொண்டாட்டியோட வாழற வாழ்க்கை தினமுமே புதுசு தான்… வரேன்…. பைபை…

 

அந்தப் பழைய இட்லி உப்புமாவுக்காக அவன் மனம் ஏங்கியது.

————–