Ramanuja sand

பொங்கு புனல் காவிரியின் தாலாட்டில் ஆதிமூலமே மயங்கி உறங்கும் பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்றெல்லாம் புகழப்படும் திருவரங்கத்தில் ஒரு நாள். திருவரங்கன் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே! என்னும் வாக்கிற்கேற்ப உடையவர், எம்பெருமானார், பாஷ்யகாரர் என்று அந்த அரங்கன் கொண்டாடும் ஸ்ரீ ராமானுஜர் சிறப்புற  ஆலய நிர்வாகத்தை நடத்திக் கொண்டு வந்திருந்த காலத்தில் ஒரு நாள் காவிரியில் தீர்த்தமாடி அரங்கனின் பெயரை உச்சரித்துக் கொண்டே அவர் தன சீடர் குழாமோடு கோவிலை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது உத்தர வீதிகளில் சுற்றிச்சுற்றி ஒரே கும்மாளமாய் சிறுவர் பட்டாளமொன்று துள்ளிக் குதித்து, ஆடிப்பாடி, அளவிலா மகிழ்ச்சியில் திளைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். தம்மோடு விளையாட வருமாறு பிற சிறுவர்களையும் அழைத்தனர்.

சிறுவன்1: டேய்! குண்டு ரங்கா! குண்டு ரங்கா! வாடா விளையாடப் போலாம்

சிறுவன்2 : டேய்! பல்லை உடைப்பேன். என்னை குண்டு ரங்கான்னு கூப்பிடாதேன்னு சொல்லி இருக்கேனோல்லியோ?

சி1: நம்ம குழுவிலேயே 4 ரங்காக்கள் இருந்தா? வேற எப்படிக் கூப்பிடறதாம்? ஒல்லி ரங்கா, கட்டை ரங்கா, நெட்டை ரங்கா ன்னு சொன்னாத்தானே தெரியும்… ஹா ஹா..

சி2: ஆமாமா, இந்த ஊர்ல திரும்பின இடமெல்லாம் ரங்கா தானே? இது அவன் சொந்த வீடாச்சேடா! சரி வாடா!

சி 1: டேய்! இன்னிக்கு கொள்ளிடத்துல ரொம்ப தண்ணி வர்றதாம். அம்மா அங்கே போகாதேன்னு சொன்னா!

சி 2: ஆமாண்டா! காவேரிலேயும் வெள்ளம் தான்! அம்மா நன்னா அடிச்சே சொன்னா போகாதேன்னு!

சி 3: அப்போ எங்கே தாண்டா போய் விளையாடறது?

சி 4: ஏண்டா கவலை படறேள்! தெற்கு வாசல் மொட்டை கோபுரம் தாண்டிப் புலி மண்டபம் இருக்கோன்னோ? அதையும் தாண்டி கொஞ்சம் மணல் வெளி இருக்கே. அங்கே விளையாடுவோம்.

சி 2: டேய்!  வேண்டான்டா! அது ஸ்ரீ ராமானுஜர் ஸ்வாமி வந்து போகும் இடமாச்சே! அவர் கண்ணில் பட்டா என்ன ஆகுமோ? ஸ்வாமி நாம விளையாடறதை பார்த்து எதாவது சொல்லப் போறார்டா

சி 3: என்னடா பயப்படறாய்? ஸ்வாமி ரொம்ப அன்பானவர் டா! கருணா சாகரம், அவரைப்போல ஒரு கனிவான அன்பான ஒருத்தரைப் பார்க்கவே முடியாதுன்னு ஆத்துல எல்லாரும் பேசிக்கறதை நான் கேட்டிருக்கேன். நானே பார்த்திருக்கேண்டா கோவில்ல யார் வந்தாலும் அவ எப்படி இருந்தாலும் அவர் எந்த பாகுபாடுமே இல்லாம அன்பா பேசறதை… ஸ்வாமிகிட்டே மரியாதை இருக்கணும். பயம் தேவை இல்லைடான்னு போன மாசம் ஏகாதசி அன்னிக்கு அம்மாவும் நானும் சேவிச்சப்போ அம்மா சொன்னா.

சி 4: ஆமாண்டா, இந்த ஊர்லயே எல்லாரும் அதைத்தான் சொல்றா! வாங்கடா விளையாடப் போலாம்…

சி 1: சரி! இரு நான் என் குடுமியை முடிஞ்சுண்டு வந்துடறேன்! இல்லைன்னா அம்மா திட்டுவா!

சி 4: டேய்! சரி சரி எல்லாம் தயார் ஆகுங்கோ. இதோ நான் கோவிலை இங்கேயே மணலில் வரையப்போறேன். இதோ இதுதான் மதில் சுவர். இது தான் ப்ரணவாகார விமானம். தாயார் சன்னதி  இங்கே. நரசிம்மர் சன்னதி இங்கே.  நெட்டை  ரங்கா! நீ தான் தாயார் சன்னதிக்கு! டேய் சாரதி! நீ தான் பெரிய பெருமாள் சன்னதிக்கு!

சி 2: டேய்… முக்கியமான இடம் எங்கேடா?

சி 4: ஹா ஹா! சரியா கேட்டாய். டேய் குண்டு ரங்கா! இதுதான் திருமடைப்பள்ளி. உனக்கு சரியான இடம். நான் ஆளவந்தார் சன்னதியில் இருப்பேன்.

சி 1: சரிடா! இப்போ எப்படி ஆரம்பிக்கறது? என்ன சொல்லி தொடங்கறது? சரி முதல்ல திருப்பாவை பாடுவோம்.

சி 3: இல்லடா! அமலன் ஆதிப்பிரான் பாடுவோம்

சி 2: டேய்! எதுக்குடா சண்டை! ஆளாளுக்கு தெரிஞ்சதைப் பாடுவோம் டா!

சி 3: பிரசாதம் என்ன பண்றது? சரி.. இந்தா இந்த மண் தான் நமக்கு பிரசாதம்.

சி 4: இந்தாங்கோ! பெரிய பெருமாள் பிரசாதம்! பிடிங்கோ!

சி 1: இதோ! தாயார் பிரசாதம்! இதையும் பிடிங்கோ!

இராமானுஜர்: ஆஹா! என்ன இது சத்தம்! எல்லாப் பாசுரங்களும் மழலை மொழியில் அமுதமாகக் கேட்கிறதே!

சீடர் 1: ஸ்வாமி! சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இதோ அவர்களை அனுப்பி விடுகிறேன்.

இரா: வேண்டாம் வேண்டாம். அது என்ன? நம் கோவில் போல வரைந்து இருக்கிறதே? அடடா! விளையாட்டில் கூட ரங்கனின் புகழ் தானோ? அவர்களின் பெற்றோர்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்களை சொல்லுங்கள். குழந்தைகள் அனைவரும் அந்த குன்றெடுத்தவனின் அம்சங்கள். சிறிது நேரம் கவனிப்போம் என்ன செய்கிறார்களென்று.

சி 4: இந்தாங்கோ! பிடிங்கோ! சீக்கிரம்!

சி 3: டேய்! அது ஸ்வாமி டா… வாடா பின்னாலே…

சி 4: ஆ! ஸ்வாமி! தெரியாம உங்களாண்டை குடுத்திட்டேன்! மன்னிச்சுக்கோங்கோ!

இரா: இல்லையப்பா! சரியாகத்தான் கொடுத்தாய்! அடியேன் செய்த பாக்யம். என்ன இது?

சி 4: அடியேன் பெரிய பெருமாளுக்கு அர்ச்சனை செய்த பிரசாதம்! ம்ம்ம்… இல்லை… வெறும் மண்…

இரா: ஆகா! இது என் பாக்கியமாயிற்றே! ஏன் பயம் அடியேனிடத்தில்? வேண்டாம்! அருகே வா! என் கையில் கொடு! இரு.. இரு… இது தானே அரங்கனின், அரங்க நாயகியின் சன்னதிகள்? அடியேன் சாஷ்டாங்கமாக சேவித்துப் பின் வாங்கிக்கொள்கிறேன்.

சி 4: இதோ ஸ்வாமி!

சீடர் 1: என்ன ஸ்வாமி இப்படிச் செய்கிறார்? பிரசாதம்ன்னுட்டு மண்ணைக் குடுக்கறான் அந்தப் பையன்! இவரும் பாக்கியம்னு சொல்லி வாங்கிக்கறாரே? என்ன இது அபத்தம்?

சீடர் 2: ஆமாம். இப்போ தான் குளிச்சுட்டு வந்தோம். அதுக்குள்ளே கையெல்லாம் மண். ஸ்வாமி ஏன் இப்படி?

இரா: சீடர்களே! என்ன வீண் பேச்சு! ஆழ்வான் எங்கே?

கூரத்தாழ்வான்: அடியேன் தாஸன் ஸ்வாமி!

இரா: ஏன் நீர் எப்போதும் எல்லோருக்கும் கடைசியில் வருகிறீர்? என் மனத்தில் இக்கணம் தோன்றிடும் அந்த மந்திரத்தைச் சொல்லும். இந்த சீடர்களுக்கு காதில் நன்றாக விழுமாறு…

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ்வாஸீதேவோ ரங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:

இரா: புரிந்ததா? இந்த க்ஷேத்திரம் வைகுந்தத்திலும் உயர்ந்ததென அறிய மாட்டீர். இங்கு இருக்கும் ஒவ்வொரு அணுவும், அவன் அருள் பெற்றது.

சீடர்கள்: அதற்காக இந்த மண்ணைப் போய் பெரிய பெருமாள் பிரசாதம் என்பதா ஸ்வாமி?

இரா: வேதங்கள் வெறும் ஒலிகளாய் உங்கள் காதுகளில் நுழைந்து வெற்று வார்த்தைகளாய் வாய் வழியே வெளியேறுகின்றன போலும்! உங்கள் மூளையில் இருப்பது என்னவோ அதைப் போல் தான் என் கையில் இருப்பதும் தெரிகிறதோ உங்களுக்கு?

சீடர்களே! தெரிந்து கொள்ளுங்கள்! பத்ரம் புஷ்பம் பலம் தோயம் என்று எதை முழுமனதோடு அர்ப்பணித்தாலும் அந்த அரங்கன் ஏற்பானென்று! இந்த மண்ணையும் உண்டவன் தானே அவன்? அன்று அவன் உண்ட மண்ணை இன்று நமக்கு இந்தச் சிறுவர்கள் மூலம் பிரசாதமாகக் கொடுக்கிறான் என்றே அடியனுக்குத் தோன்றுகிறது!

பாருங்கள் இந்தப் பிஞ்சு முகங்களை! பக்தியின் விதைகள் இவை! பின்னாளில் சனாதன தர்மத்தை நிலை நாட்டும் தூண்கள் இவை! உயர்ந்த நம் விசிஷ்டாத்வைதத்தின் ஒளி விளக்குகள் இவை! உலகெங்கும் அரங்கனின் புகழ் பரப்பப் போகும் ஞான தீபங்கள் இவை!

உங்கள் பாவங்கள் மண்ணோடு மண்ணாய்ப் போகவேண்டுமென்றால், மறுபிறப்பென்ற ஒன்று மறைந்தே போகவேண்டுமென்றால் வெறும் மண்ணென்று கூறி இந்த மஹா பிரசாதத்தை மறுக்காதீர்கள்! அனைவரும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து சேவித்துவிட்டு வாங்கிக்கொண்டு வாருங்கள் போவோம்!

சீடர்கள்: அடியோங்களை மன்னித்தருள வேணும் ஸ்வாமி! பரம பக்தி என்றால் என்னவென்று இன்று இந்தச் சிறுவர்கள் போல் வந்த அந்த அரங்கனே உமது வாக்கின் மூலம் உணர்த்திவிட்டான்.

கண்ணா! கோபித்துக்கொள்ளாமல் எங்களுக்கும் சிறிது பிரசாதம் தாயேன்.

சி 4: அடியோங்கள் பாக்யம் ஸ்வாமி! இதோ…

————————–

ஆசார்யன் திருவடிகளே சரணம்