Child on hands

 

அப்படி என்ன கண்டாய்?

அந்த ஓட்டை கிலுகிலுப்பையில்

அரதப் பழசான மின்விசிறியில்

காற்றில் ஆடும் கந்தல் துணியில்

 

அக்ர்ர்ர் புக்க்ர்ர் என்று…

அழகாய் அவற்றோடு நீ பேச

பொங்கும் மனதில் ஆயிரம்

பொறாமை எரிமலைகள்…

 

அவ்வளவு பிடிக்குமா? அப்போ

போடா! அதுங்ககூடயே!

பொய்யாய் ஒரு கோபமும்…

அப்போதும் ஓர்

அங்குலம் கூட

அப்பால் நகராமல் தான்…

உன் மேல் ஒட்டிய கண்ணை

ஒரு கணமும்

இமைக்காமல் தான்…

 

எதிர்பாராத தருணத்தில்

என் சட்டையையோ

பூனை போல் நீ தூங்கும்

தூளியையோ திடீரென

சிறுநீரால் நனைத்துவிட்டு

சிரிப்பாய் நீ திருடன் போல்

 

துண்டுபோல் தோளில்

உன்னைக் கிடத்தித் தட்ட

உனக்கு ஏப்பம் வந்தால்

எனக்கு நிம்மதி வரும்

 

நீ சப்பித்துப்பிய  மிட்டாயையும்

பாதி கடித்த பிஸ்கட்டையும்

வாய் திருப்பிக்கொண்டு

சாப்பிட மறுத்த செரலாக்கையும்

ரசித்துத் தின்றிருப்பேன்

எத்தனையோ நாட்கள்

 

துவைத்தாலும் போகாது

என் ஆடையிலும் கூட வீசும்

உன் உடம்பின் பால்வாசம்

 

நீ உடைத்த பின்தான்

முழுதாகின பொம்மைகள்

உன் கிறுக்கல்களால் தான்

அழகாகின சுவர்கள்

உன் முத்தத்தால்

மெருகேறியது என் கன்னம்

ஆனால்…

என்னைப்பார்த்த பின்னும்

நான் யாரென்றே தெரியாது

நீ விழித்த அந்தக் கணம்…

நரகத்தின் கொடுந்தீயில்

எரிந்து வெந்தது என் மனம்

ரத்த நாளெமெங்கும்

கொதிக்கும் தார் ஊற்றியது …

நான் யார் என்ற கேள்விக்கு

பதிலாக வந்த உன் மௌனம்

 

விந்து மட்டும் ஓர்நாள் நானும்

தந்துவிட்டு பின் பலரைப் போல்

விட்டேத்தியாய்த் திரிந்திருந்தால்

வீணாய் இந்த வலி இருந்திருக்காதோ?

 

அன்று உன் பிஞ்சுக்கால்களால்

உதை வாங்கிய தொட்டில் தான்

சபித்ததா என்னை?

எங்கே எப்போது ஒரு

தொட்டிலைக் கண்டாலும்

அதன் வலி

என் நெஞ்சில் வர?

 

நிற்கவே முடியாத உனக்கு

சப்பரத்தில் உலாவரும்

சாமியைப் போல்

என்ன ஒரு மிடுக்கு?

யார் நீ, எங்கிருக்கிறாய்

என்றெல்லாம் கூட

உனக்கே தெரியாதபோது

உன்னைச் சுமந்து திரிந்தது

இந்த இடது கை

இன்றும் வலிக்கிறது…

இடதுபுறம் தான்

ஆனால் கை அல்ல!

 

உன் மூளைச்செல்கள்

அபரிமிதமாய் வளரும் காலமாமே…

மகிழ்ச்சிதான் எனக்கு…

பழைய நியூரான்கள்

ஏதாவது ஒன்றில்

பதப்படுத்தப்பட்டு

ஆழத்தில் புதைக்கப்பட்ட

என் நினைவுகளின் எச்சமாவது

மறுசுழற்சியாகும் நாளுக்காக

மகிழ்ச்சியுடன் காத்திருக்கும்

இதே இடது கை

…….

ஆனால் இதை மனதில் கொள்…