மணிமேகலை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்

Manimegalai

 

மணிமேகலை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்

மணிமேகலையைப் பற்றி நினைத்தாலே நம் மனம் மெழுகாய்க் கசிந்துருகும்.

 

உலகில் பாவப்பட்ட ஜன்மங்களுக்கு எல்லாம் ஒட்டுமொத்தமாய்  ஒரு பெயர் இருக்குமானால் அதுவே மணிமேகலை. அதிகாலைப் பனி, மலையில் தோன்றும் நதி, தாயின் கருவறை, சிறு குழந்தையின் சிரிப்பு போல மிகத் தூய்மையானவள்.

 

உள்ளத்தில் கள்ளம் எள்ளின் முனையளவும் இல்லாதவள். பெண்ணின் நால்வகை இயல்புகளின் அச்சுவார்ப்பானவள். அன்றலர்ந்த அல்லியைப் பழிக்கும் அழகுடையவள். வரைகளே புருவங்களாகக் கொண்ட வானமகளின் நெற்றியின் மத்தியில் திலகமென எட்டிப்பார்க்கும் காலைக் கதிரொளி போல பொலிவுடையவள். பெயரில் மட்டுமின்றி மணி முடிகொண்ட

 

இளவரசியாய் பிறந்தும் இனிய இயல்புடையவள். எவர்க்கும் தீங்கு கனவிலும் நினைக்காதவள்.

காதல், களவு, சூது வாது, வஞ்சகம், நல்லவர் கெட்டவர் என எதுவுமே தெரியாத வளர்ந்த குழந்தை. எடுப்பார் கைப்பிள்ளையென இறக்கும் வரை அப்பாவியாக ஒன்றுமே அறியாப் பேதையாக இருந்தவள்.

 

யார் யாரோ தத்தம் சுயநலத்திற்காக அவளைத் தங்கள் இஷ்டம் போல் பயன்படுத்திக்கொள்ளவும் அவளை தான் விரும்பியவருக்கு மணம் முடித்துவைக்கவும் எண்ணினர். அத்தனைக்கும் ஆளாகி இறுதியில், விதியின் கோரைப் பற்களுக்கு தன்னையே பலியிட வேண்டி வந்ததே! என்ன கொடுமை!  ஆனாலும், வேறு எவரையும் மனதால் கூட எண்ணாமல் தன் இறுதி மூச்சிலும் அவன் நினைவிலேயே திளைத்தாள்.

 

ஆரம்பத்தில் அவள் அண்ணனின் வர்ணனைகளைக் கேட்டுக் கேட்டு வரித்துவிட்டாள் வந்தியத்தேவனை காதலனாக. முதல் காதல் முளைவிடும் முன்பே சூதின் அனல் காற்று அதனை அளைத்தது. அவள் காதல் ஒரு மாயம் என அறியவில்லை அவள் பாவம். கானல் நீரில் அவள் விட்ட காதல் ஓடம்  கரைசேராது காலத்தின் கரங்களில் சிதையுண்டது.

 

நந்தினி எனும் மாயப்பாம்பு அவள் காலைச் சுற்றி வளையவந்தது கூட அவளது குழந்தை மனதுக்குத் தெரியவில்லை. பெண்ணின் குணங்கள் கொண்ட மதுராந்தகனை அவள் முற்றிலும் வெறுத்தாள்.

 

பெட்டை போல் பல்லக்கில் ஒளிந்து செல்லும் அவன் எங்கே? வீறு கொண்ட சிங்கம் போல் எட்டுத்திக்கும் குதிரையில் பாய்ந்து செல்லும் வந்தியத்தேவன் எங்கே? அரசாங்கத்தை சூழ்ச்சியால் கைப்பற்ற ஆசைப்படும் இந்தக் குள்ளநரி எங்கே? தன உயிரையே ஐந்தே சோழ தேசத்திற்காகக் கொடுக்கத் தன அரைப்பையில் கட்டிக்கொண்டு திரியும் அந்த வாலிப சிங்கம் எங்கே?

 

சீச்சீ… புலியின் இடத்தில் ஓர் புல்லுருவியா? என அவள் காதலுக்கு என்றுமே தகுதியானவன் வந்தியத்தேவன் மட்டுமே என்று உறுதியாய் இருந்தாள்.

 

பயணம் மட்டுமே நம் கையில் அதன் முடிவு விதியின் கையில் என்பது போல். அவள் எண்ணியது ஒன்றிருக்க, வேறொன்றாய் முடிந்து போகையிலும், தானே ஆதித்த கரிகாலனைக் கொன்றதாகப் பழியையும் தன காதலன் மேல் சுமத்தாது தானே சுமந்த நல்மகள். சலனமற்ற ஓடையில் பிரதிபலிக்கும் சந்திரனைப்போல் அவள் மன ஓடையில் ஒரே ஓடம் என்றுமே ஓடிக்கொண்டிருக்கும். அது வந்தியத்தேவன் எனும் வாலிபவீரன் மேல் அவள் கொண்ட தெய்வீகக் காதல்.

 

பொன்னியின் செல்வன் முதற்கொண்டு எவரது காதலிலும் ஒரு மெல்லிய சுயநலம் இருக்கும். ஆனால், அனைத்து காதல்களிலும் இதுவே தூய்மையான மற்றும் உயர்ந்தகாதல் என்பது என் கருத்து.

————————————