godfather

The Godfather 3 – Brucia La Terra

“நல்லா பாடினீங்க”

“ஓ பல்லவி சூப்பரா இருக்கே!”

என்று சொல்லத் தோணிற்று அவனுக்கு. பிறகு சிறுமூளையில் பொறி தட்டவே இது போன வாரம் அவன் ஒரு மேடையில் பாடியதற்கு அவள் கொடுக்கும் காம்ப்ளிமெண்டஸ் எனப் புரிந்து கொண்டான்.

“ஹாஹா… தேங்க்ஸ்… உங்க பாட்டும் அற்புதமா இருந்தது. ராமர் பத்தின பாட்டு தானே?”

“ஆமா உங்களுக்கு சங்கீதம் தெரியுமா? கத்துகிட்டிருக்கீங்களா?”

“ம்ஹ்ம்… கத்திக்கிட்டிருக்கேன்…. நான் ஒரு பாத்ரூம் பாடகன். ஏதோ மேடையைப் பார்த்ததும் ஒரு நப்பாசையில் அன்னிக்கு பாடீட்டேன்…”

என்றதும் ஒரு அழகான மொழியில்லாக் கவிதை அவள் உதட்டோரம் பூத்து மறுநொடியில் முக்தி பெற்று மறைந்ததை கவனித்தான்.

“நீங்க எத்தனை வருஷமா கத்துகிட்டிருக்கீங்க?”

“ஓ! ஓவர் 10 இயர்ஸ். வருஷா வருஷம் இண்டியா போய் ரெஃப்ரெஷ் பண்ணிப்பேன் கேரளாவில் என் குருகிட்ட. அம்மா அதில் ரொம்ப பர்டிக்குலர். ஸோ நோ எஸ்கேப்”

என்று மறுபடியும் மெல்லிதாய் சலித்துக் கொண்டு சிரித்தாள். அவளின் சலிப்பும் கூட சங்கீதமாய்க் கேட்டது அவனுக்கு.

பொதுவாக வைரம் மூக்கில் காதில் பார்த்ததுண்டு. இவளுக்கு ஆனா கண்ணில் கூட இருக்கே என்று அப்போது தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

“மூக்குத்தியா? வாட் புல்ஷிட். மாடர்ன் ட்ரஸ் போட்டா கேவலமா இருக்கும். என்ன நாட்டுப்புறம் மாதிரி!”

என்று பீட்டர் விடும் நாரீமணிகள் இருக்க இந்தப் பொண்ணு எப்படி ட்ரெடிஷனலா? அங்கே அப்படி. இங்கே யூனியில் ஃப்ரீ ஹேரோடு இப்படி… வாவ்!

“என்ன பண்றீங்க இங்க? ஐ மீன் என்ன கோர்ஸ்?”

சொன்னான். சொல்லிவிட்டு யோசித்தான். சரியான பதில் தான் சொன்னேனா? அவள் சிரிக்கவில்லை. ஸோ! சீரியஸா சரியான பதில் தான். “ஆனா ஏண்டா உனக்கு பதில் சொல்ல இவ்ளோ தடுமாற்றம்? புரியவில்லை…. இனம் புரியாத? ம்ம்ம்… இருக்கலாம்….” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டான்.

“நீங்க? என்ன கோர்ஸ்? எவ்ளோ நாள் ஐ மீன் வருஷம் ஆச்சு?”

“நான் PhD இன்…”

என்று அடுத்த பத்து நொடிகளுக்கு அவள் சொன்னது அவன் ஐன்ஸ்டீன் ஆக இருந்திருந்தாலும் அவனுக்கு விளங்கியிருக்கப் போவதில்லை. விளங்காவிட்டால் என்ன அதுவா முக்கியம்? அவளும் இதே கேம்ப்பஸ்… அதான். ஆனா டைமிங்ஸ் எப்படியோ தெரியவில்லை. நம்ம ஊர் ஆராய்ச்சியாளர்கள் போலில்லை இங்கெல்லாம்… அதனால் அவளை பார்ப்பது அரிதாகக் கூட இருக்கலாம்.

“எனிவே! ஸோ நைஸ் டு மீட் யூ. ஸீ யூ தென்…” என்றாள்

“ஷ்யூர்… ப்ளஷர்”

என்று அவனும் அளவோடு நிறுத்திக் கொண்டான். பிறகு ஒரு பத்து நிமிடம் அந்த உரையாடலை மனதிற்குள் எழுத்து எழுத்தாக ரீவைண்ட் செய்து பார்த்து ஏதும் வழிசலாகப் பேசிவிடவில்லை என உறுதியானதும் அடுத்த வகுப்புக்குக் கிளம்பினான்.

வயது முப்பதை நெருங்கும் போது ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த போது வலை வீசித் தேடிக் கொண்ருடிந்தனர்  வீட்டில் எல்லோரும். வேறு எதற்கு? அதுவுமின்றி கரியரில் நன்கு உயரவேண்டுமென்று மேல் படிப்பு படிக்கும் ஆசையில் வெளிநாடு வந்திருக்கும் தருணத்தில் மனதில் அதுவும் இந்த பெண்ணைப் பார்த்ததும் வருவது எல்லாம் என்ன?

“அதெல்லாம் விடலை வயதில் வரும் தானே? அப்போவே வரல… இப்போ எப்படி இந்த டிஸ்டர்பன்ஸ்? புரியல. ஆனா என்னமோ நல்லாருக்கு. பார்ப்போம் என்ன தான் நடக்குதுன்னு”

என்று எப்போதெல்லாம் அவள் ஞாபகம் தோன்றுமோ அப்போதெல்லாம் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

அவ்வப்போது கேம்பஸ்ஸில் சில நிமிடங்களிலும் பேசிக் கொள்வதும் முக்கால்வாசி சயின்ஸ் சம்பந்தப்பட்டதாகவும் மீதி ஏதாவது அடிக்கடி நடக்கும் வீக்கெண்ட் இண்டியன் ஃபேமிலீஸ் கெட் டுகதெர்களில் அவள் பாடிய கர்நாடக சங்கீதத்தைப் பற்றியுமோ இருக்கும். தன் மனதின் சிறு அசைவும் அவளுக்குத் தவறாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் தனி கவனம் கொண்டே எச்சரிக்கையாகப் பேசினான்.

உலகில் எல்லா புது முயற்சிகளையும், முன்னேற்றத்தையும் தடுப்பது “ஓவர் திங்கிங்” எனும் அதீத குழப்பமும்  மற்றும் “செல்ஃப் டவுட்” எனும் முயலாமையும்  தான்.

நான் இப்படிச் செய்தால் அப்படி நடக்குமோ… இப்படிச் சொன்னால் அவள் அப்படிச் சொல்வாளோ? என்று எல்லா பெர்முட்டேஷன் காம்பினேஷன்களிலும் கன்னாபின்னா வென்று மனம் அலைக்கழிக்க அதுவும் ஒரு இன்பமாகத் தான் உணர்ந்தான்.

அவளிடம் சொல்லப் போனால்

“என்ன இது இண்டியன் பாய்ஸ் ஒரு பொண்ணு சிரிச்சு நல்லா பேசினா ஒடனே ப்ரொபோஸ் பண்ணுவீங்களா?” என்று கேட்டால்? (ஓவர் திங்கிங் 1.0)

“உனக்குத் தெரியுமா? தானே வலிய வந்த ப்ரொபோஸல்களையும் கூட மெச்சூர்டாக ஒதுக்கித்தள்ளியவன் தான் நான்”

என்று என்னதான் சப்பைக் கட்டு கட்டினாலும் எடுபடாது. அது அசிங்கமும் கூட.

“என்னை என்னன்னு நெனச்சே?” என்று அவள் கேட்டால்? இப்படி கேள்வியும் அவனே கேட்டு அவள் சொல்லவேண்டிய பதிலையும் அவனே சொல்லிக்கொண்டான்.

என்னடா இது? விடலை வயதில் இருக்கும் குருட்டு தைரியம் இப்போது எல்லாத் தகுதி இருந்தும் வரவில்லையே. பின் மிகுந்த ஊசலாட்டத்திற்குப் பின் ஒருவாறாக இது சாத்தியமாகும் என முடிவுக்கு வந்து சீக்கிரம் ஒரு நாள் தெளிவாக ஆனால் டீசண்டாக சொல்லிவிடலாம் என்று முடிவும் எடுத்தான். ஆனால் அதற்கு முன் எத்தனை முறை மனம் பெண்டுலம் போல் முன்னும் பின்னும் அலைந்ததோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அதற்கேற்றார்போல ஒரு நாள் எதேச்சையாக ஒருநாள் கேம்பஸ்ஸில்

“ஹேய்! ஹௌவார்யூ? ரொம்ப நாளான மாதிரி இருக்கு பார்த்து”

என்று குரல் கேட்டு எதிர்பாராத சமயத்தில் முகத்தில் தொட்டுச் சென்ற தென்றலை உணர்ந்ததைப் போல சின்ன சிலிர்ப்புடன் திரும்பிப் பார்த்தான். அவளே தான்! ஆகா! எவ்வளவு ப்ராக்டீஸ் எவ்வளவு செல்ஃப் அஸ்யூரன்ஸ் செய்தாலும் மனம் இந்த நொடியில் நாலாபுறமும் சிதறி ஓட எத்தனிப்பதைத் தடுக்கப் பெருமுயற்சி எடுக்க வேண்டியிருந்தது.

என்றாவது ஒருநாள் என எண்ணி தயார் செய்து கொண்டவனை அவள் இன்றேவா இப்போதேவா என ஒரு நிமிடம் பதற வைத்துவிட்டாள். அமைதியான குளமொன்றில் வசிக்கும் தங்க மீன்களிலே மிகவும் அழகான ஒன்றுக்காக எந்நேரமும் தயாராக காத்திருக்கும் ஒருவன் ஒருநாள் அதுவே திடீரெனப் பாய்ந்து துள்ளி அவன் மடியில் குதித்தால் அவன் மனம் எப்படிப் படபடக்குமோ அவ்வாறு உணர்ந்தான். ஒரே நொடியில் சுதாரித்து, படபடப்பை வெளிக்காட்டாது,

“ஓ ஹாய்! அயாம் ஃபைன். யுவர்செல்ஃப்? நான் ப்ராஜக்ட் வொர்க்குக்காக இன்னும் 3 டேஸ்ல இண்டியா போகணும் அதான் கொஞ்சம் ஹெக்டிக் ப்ரிப்பரேஷன்” என்றான்.

சுவாசம் கொஞ்சம் சீராக… “நீங்க என்ன பிஸியா?” எனக்கேட்டான்.

பதிலாக ஒரு சிறுநகையை அவிழ்த்துப் போட்டாள். அவனுக்கு அவள் சொன்ன பதில் காதில் விழவில்லை. ஆனால் எது விழ வேண்டுமோ அது விழுந்தது.

“நாளைக்கு என்ன க்ளாஸ் இருக்கா? ஷல் வீ கேட்ச் அப் ஃபார் காஃபி?” என்றாள்.

நல்ல வாய்ப்பாகத் தோன்றியது அவனுக்கு.

“ம்ம்ம் க்ளாஸஸ் இல்ல. பட் நான் லைப்ரரி வருவேன். ஷ்யூர் வீ கேன்” என்று மீண்டும் பட்டென்று முடித்துக் கொண்டான்.

படித்து பட்டம் பெற்று வேலையில் நன்கு சம்பாதித்து குடும்பப் பொறுப்புகளை நன்கு உணர்ந்தபின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் என்ற லேபிளுடன் எல்லா மாமிகளின் கண்ணிலும் பட்டு

“யாருடி இந்த பையன்? நன்னா இருக்கானே? நம்ம (யாரோ) வுக்கு கேக்கலாமே?”

என்று மனதில் எண்ணிக்கொண்டு அவர்கள் டோல்கேட் போல் அங்கங்கு நிறுத்தி நிறுத்தி இவனை விசாரிக்கும் வயதில் இங்கே ஒருத்தி மேல் வரும் இதை வெறும்… சேச்சே அப்படி ஒரு சிறிய வார்த்தையால் அடையாளப்படுத்த முடியுமா? தெரியவில்லை.

ஆனால் மனது ஒருநாளும் கிழமாவதில்லை. நாமாக அப்படி எண்ணிக்கொண்டால் தவிர.

அதனால் மனதில் மீண்டும் முடிவை உறுதி செய்து கொண்டான். அன்று சாப்பிட்டுவிட்டு படுத்தவுடன் நாளைக்கு எப்படி ஆரம்பிப்பது எப்படி என்ன சொல்வது என ஓரிரு முறை ஸ்கிரிப்ட்டை ஓட்டிப்பார்த்தான். கடைசியாக சம்மதம் என்றால் மேற்கொண்டு இரு குடும்பங்களையும் சந்திக்க வைக்கலாம். இல்லையெனில் எந்த ஜன்மத்திலும் அவளுக்கு இடையூறாக இல்லாது சுத்தமாக ஒதுங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்து

“ஹாய்! நைஸ் மீட்டிங் யூ. ஷ்யூர்லி லெட்ஸ் கேட்ச் அப் டுமாரோ அட்…”

என்று ஒரு காஃபிஷாப்பின் பெயரை எழுதி ஒரு SMS அனுப்பினான். அது இரவு 1 மணிக்கு மேல் என்று தெரிந்தும். ஒருவேளை ஏன் அகாலத்தில் மெசேஜ் அனுப்பினாய் என்று  கேட்டால் (ஓவர்திங்கிங் 2.0) மொபைல் டவர் அப்போதான் வந்ததால் மதியம் அனுப்பியது லேட்டாக டெலிவரானது என சமாளிக்கலாம் என்று தன் தோளைத் தானே தட்டிக்கொண்டான். நாளை அவ்வாறு பேச முடிந்தால் சம்மதமோ இல்லையோ தெரிந்து கொண்டு மறுநாள் விமானம் நிம்மதியாக ஏறலாமே.

அதேபோல் மறுநாள் அந்த காஃபி ஷாப்பில் அவன் உட்கார்ந்திருந்தான். சொன்ன நேரத்துக்கு மேல் கால்மணி அரைமணி என நேரமாகியும் அவள் வரவில்லை. அவன் நேற்றிரவு ஒருமணிக்கு அனுப்பிய மெசேஜ் டெலிவர்டு எனத் தெரிந்தது ஆனால் படிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. காத்திருந்தான் இன்னும் ஒரு பத்து நிமிடங்கள். தங்க மீன் குளம் அசைவேதுமின்றி உறைந்தது போல் ஒரு எண்ணம் மனதில் தோன்ற மீண்டும் ஒரு ரிமைண்டராக ஒரு மெசேஜ் அனுப்பலாமா என பலமுறை யோசித்தான்.

ரொம்பவும் அலைவதைப் போல தோன்றக் கூடுமோ (ஓவர் திங்கிங் 3.0) என்று நினைத்து இரண்டு மூன்று முறை எழுதி எழுதி அழித்தான். அதோடு அவளைப் பற்றிய எண்ணத்தையும் சேர்த்து. பின் தானே முடிவுக்கு வந்து அடுத்த நாள் விமானம் ஏறத் தயாராக எண்ணி நடையைக் கட்டினான்.

எப்போதுமே செல்போனில் இளையராஜா பாடல்களையே கேட்கும் அவன் திடீரென எப்போதோ கஷ்டப்பட்டு தேடி எடுத்து வைத்த Al Pacino வின் Godfather பிண்ணனி இசையை அதிலும் ஆண்டனி தன் அப்பாவுக்காக ஸ்பெஷல் என்று (அந்த இத்தாலிய அழகியை மைக்கேல் கோர்லியோன் நினைத்துப் பார்க்கும்) வாசிக்கும் அந்த இசைத்துணுக்கைக் கேட்டுத் தன் மனமும் அசைபோடுவதைத் தடுக்க விரும்பாது அனுமதித்தான்.

ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்.

காலம் என்னும் ரூத்லெஸ் ஜட்ஜ் நிச்சயம் நம் செய்த முயற்சிகளுக்குப் பலனளிப்பது உண்மை. அதேபோல் செய்யத் தவறிய முயற்சிகளுக்கு என்றுமே தப்பித் தவறிக்கூட பலன் கிடைக்கும் என எதிர்பார்ப்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்பதும் உண்மை.

***********