ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடியேனின் 4வது சிறுகதை (முயற்சி). Fantasy writer இல்லை நான். கற்பனைக் கதைகள் எழுதத் தெரியாது.  Experiential writer  அனுபவ எழுத்தாளன் என்ற (எனக்கு நானே  உருவாக்கிக்கொண்ட) பிரிவில் உள்ளவன். பின்குறிப்பையும் மறக்காது படிக்கவும்….

6289_train-looted

டிக் டிக் டிக் என்று வழக்கமாக சென்னை மின்சார ரயில்களில் கேட்டுப் பழகிய அதே கட்டை சத்தம். நிமிர்ந்து பார்த்தால் இந்தச் சின்னப் பெண். பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் இருப்பாள். அடர் ஊதா நிற சுடிதார் சற்று அழுக்கேறி இருந்தது அவள் வறுமையின் செழுமையால். பிய்ந்து விழும் நிலையில் இருந்த அவள் கண்ணாடி வைத்த செருப்பு அதை உறுதிப் படுத்தியது. ஆனாலும் கண்ணியமாகத் தெரிந்தாள். ரயில் புறப்படும் சில நிமிடங்கள் காத்திருந்து விட்டுப் பின் பாட ஆரம்பித்தாள். ஏதோ ஒரு இந்திப் பாடல் அவளது உச்சரிப்பு என் முதல் இந்தி வகுப்பையும் ப்ராத்மிக் தேர்வில் தேற செய்ய நான் செய்த பிரம்ம பிரயத்தனங்களையும் நினைவூட்டியது.

இத்தனை மணிக்குக் கிளம்பி இத்தனை மணிக்குள் சென்று சேர வேண்டுமென கால நிர்ணயம் கொண்ட நகர நரக வாழ்வின் அன்றாட இன்னல்களிலிருந்து ஒதுங்கி சுதந்திரமாக எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் போய்ச் சேரலாம் என்று எண்ணிக் கிளம்பும் பயணங்கள் அரிது. அதுவும் வயதாக ஆக அவ்வாறு ஒன்று கிடைப்பதே நம் தேசத்தில் அரசின் மானியங்கள் நூறு சதவீதம் சரியான பயனாளிகளைச் சென்றடைவதைப் போல மிக மிக அரிது. அவ்வாறான ஒரு அவரசமில்லாப் பயணத்திற்கு நான் தேர்ந்தெடுத்தது ஒரு பாஸஞ்சர் ரயில். ஷதாப்தி, பிஎஸ்எல்வி, வாயேஜர் அனைத்தையும் மிஞ்சும் வேகத்தில் அலைந்து கொண்டே இருக்கும் மனதைக் கட்டிப் போட்டு மெதுவாகச் செல்ல வைக்க இந்தப் பாஸஞ்சர் ரயில் பயணம் ரொம்பவும் உதவி செய்வதைப் போலத் தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேல் திரும்பத்திரும்ப சில நடுத்தர வயதுப் பேருந்து ஓட்டுனர்கள் எஸ்.ஏ.ராஜ்குமாரின் லாலாலாவையும், இளந்தாரிகள் டங்காமாரியையும் கொண்டு நம் மூளையைக் கைமா செய்யாமல் தவிர்க்கத்தான்.

நான்கு மணி நேரப் பயணம் என்றாலும் புதிய வழித்தடத்தை ஆராயும் என் சிறுவயதின் ஆர்வம் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்ததால் ஏறிவிட்டேன். ஜன்னலோர இருக்கையில் நான் மட்டும் எனக்கே எனக்கென ஒரு தனி பிரபஞ்சத்தைப் படைத்து பிரம்மனுக்கே சவால் விடும் கர்வம் மனதுக்குள் தோன்றியது.

ஒரு குடும்பம் அம்மா, அப்பா, கல்யாணமான இரண்டு பெண்களும் அவர்களின் பிள்ளைகளுமாக கலகலவென்று சிரித்துக் கொண்டு வம்பளந்து கொண்டு, சீட்டுக்கட்டு விளையாடிக் கொண்டு வந்தது மெட்ரோக்களில் மனிதர்களே தனித் தனித் தீவுகளாக வாழ்வது போலல்லாது கூட்டுக் குடும்பங்கள் இன்னும் இருக்கின்றன என்று உணர்த்தியது. இன்னும் சில குழந்தைகள் அழுது கொண்டு விளையாடிக் கொண்டும் இருந்தன. முதல் நாள் பெய்த மழையின் குளிர்ச்சியை நான் ரசிப்பதை சூரியன் பொறுக்காது அதை சுட்டுப் பொசுக்காமல் பெரிய மனதுடன் இதமாக மேகத்தின் இடுக்குகளில் இருந்து அவ்வப்போது வெளிவந்து தன்னைக் காட்டிக் கொண்டான்.

பாஸஞ்சர் ரயில் பயணம் ஒரு சுகமான அனுபவம். உதாரணமாக, இளம் காதல் ஜோடிகளுக்குப் பேசப் பேச நேரம் போதாது. அதே போல் புதிதாய்த் திருமணமான ஜோடிகள் தங்கள் இடையே இருக்கும் இனம்புரியாத ஈர்ப்பை இறங்க வேண்டிய இடம் மெதுவாக வரும் வரை ரசித்துக் கொண்டிருக்கலாமே. அதாவது அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வெறுக்க ஆரம்பித்தும் குழந்தைகள், சமுதாயம் இன்ன பிற காரணங்களுக்காக சேர்ந்து வாழத் தொடங்கும் காலத்திற்கு முன் வரை.

அமைதியாக வீசும் காற்றை ரசித்துக் கொண்டிருந்த என் கவனம் பட் பட் என்று கைகள் விரித்த வண்ணம் தட்டும் சத்தத்தால் கலைந்தது. ஆமாம்! வழக்கமாக ரயில்களில் பிச்சை எடுக்கும் திருநங்கைகளில் ஒருத்தி. உரிமையுடன் தோளில் தட்டி காசு கேட்டாள். நான் திரும்பவில்லை என்றதும் கை தட்டிக் கொண்டே அடுத்த பெட்டிக்குச் சென்றாள். சிறிது நேரம் கழித்து இன்னொரு வயதான பெண் தன் பேரக்குழந்தை போல இருந்த ஒரு பிள்ளையோடு வந்து பிச்சை கேட்டாள். கோபமாக வந்தது. பிச்சையில் பல வருடம் அனுபவம் பெற்றதால் வேறு உருப்படியான வேலைகளுக்குச் செல்வது வீண் என்று உணர்ந்திருப்பாள் போல. மீண்டும் நான் திரும்பவேயில்லை. ஆனால் பாவம்! தான் யார், எங்கே இருக்கிறோம், எதற்காக கையேந்தி நிற்கிறோம் என எதுவுமே தெரியாது ஒரு கையில் பாதி சாப்பிட்ட குச்சி மிட்டாயோடும் ஓட்டை விழுந்த சட்டையோடும் பிச்சை எடுத்த அந்தச் சிறுவனை எண்ணி மிகவும் வேதனைப் பட்டேன். ஆனாலும் நான் காசு போட்டிருந்தால் அந்தக் கிழவி இவனை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்குவாளோ என்ற எண்ணத்தில் போட மறுத்து விட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து இந்தச் சிறுமி ஏறினாள். அவள் பாட ஆரம்பித்தாள். நான் தேட ஆரம்பித்தேன். அந்த பெரிய குடும்பத்துப் பெண்கள் இருவர் நான் முன்பு கேட்டவர்களுக்கு மறுத்ததையும் இப்போது நான் சில்லரையைத் துழாவுவதையும் கவனித்தனர். அதை நான் கவனித்தேன்.
beggar

டிக்டிக் டிக்… டிக் டிக் டிக் என்று தட்டி அவள் பாடி முடித்து வேறு பெட்டிக்குச் சென்றதும் அந்தப் பெண்களின் சந்தேகத்துக்கு விடை என் மனதுக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.

இறைவா! பாவம் இந்தச் சிறுமி! எந்தக் குடிகார பொறுப்பில்லாத அப்பனுக்கு மகளாய்ப் பிறந்தாளோ? அவன் எந்த கோடீஸ்வர கரைவேட்டி ஏழைப்பங்காளனுக்கு,  காசுக்கு நடிக்கும் தானைத் தலைவனுக்கு பாலாபிஷேகம் செய்ய, சுவரொட்டி ஒட்ட என்று குடும்பத்தை கவனிக்காது திரிகிறானோ? ஒரு வேளை எந்த ஓடுகாலித் தாய்க்கு இவள் மகளாகி அவள் பெற்றுப் போட்ட தன் சகோதர சகோதரிகளுக்காக இவ்வாறு பாடிப் பிச்சை எடுக்க வேண்டி வந்ததோ? நிச்சயம் முன் வந்த கிழவி போல் கை கால்கள் நன்றாய் இருந்தும் உழைப்பது மூடத்தனம் என்று பரம ஞானம் பெறும் வயதில்லை. அதனால் தானோ என்னவோ குறைந்த பட்சம் தன் குரலால் பாடி காசு கேட்கிறாள். இளமையில் வறுமை கொடிதல்லவா! இவளைப் பார்த்த பின் என் நல்விதியை, நிலையை உணர்ந்து நான் உனக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இதே நொடியில் எப்போதோ பார்த்த கஹானி, மர்த்தானி போன்ற இந்திப் படங்கள் மனதில் மின்னலாக வந்து போகின்றன. அதனால் என் பிரார்த்தனையோடு நான் உன்னிடம் அளிப்பது ஒன்றல்ல இரண்டு கருணை மனுக்கள்.

முதலில் இந்தச் சிறுமிக்கு நல் வழி காட்டு. குரலை மட்டும் நம்பிப் பிழைக்கும் இன்றைய நிலையில் இருந்து அவளை இன்னும் கீழே தள்ளி அவள் விற்கக் கூடாததை விற்று ஜீவனம் செய்ய வைத்து விடாதே. சுயமரியாதைத் தறியில் அவள் மானம் என்னும் பட்டாடை இன்னும் கிழியாது இருக்கிறது என்பது வெறுமனே வந்து எகத்தாளமாகப் பிச்சை கேட்காமல் குறைந்தது பாடவாவது செய்யலாம் என நினைத்ததிலிருந்தே புரியவில்லையா? வறுமையாலோ, பசிக் கொடுமையாலோ எதனாலும் அவள் சில மானங்கெட்ட மனிதப் புலிகளின் உடல் மற்றும் பணப்பசிக்கு இரையாகாமல் காப்பாற்று. சிறிதே என்றாலும் உழைப்பின் பலனை அவளுக்கு உணர்த்தி அவள் வாழ்வை வளமாக்கு. வாயில் ஃபாரின் சிகரெட்டும், நூறடிக்கு அப்பாலும் நாறும் பர்ஃப்யூமும், நுனி நாக்கு ஆங்கிலமும், ஐஃபோனும் பல்லிளிக்க, நட்சத்திர ஓட்டலில் நாசூக்காகத் தன் உடம்பையே மூலதனமாகக் கொண்ட “ஸோ வாட்? ஐ லைக் திஸ் லைஃப் ஸ்டைல். ஐ கெட் குட் மணி அண்டு பர்ஸனல் ஸாட்டிஸ்ஃபாக்ஷன். ஐ கேர் எ ஷிட் அபவுட் சொஸைட்டி, மாரல்ஸ், எத்திக்ஸ்” என்று சொல்லிக்கொண்டு வாளிப்பான உடம்பின் திமிர் திமிறித் திரியும் நாகரிக வியாபாரியாக இவள் ஆக வாய்ப்பில்லை. ஏமாற்றுக்கார நாய்கள் சுற்றி வளைக்க, போக்கிடமின்றி, சாராய வாடையுடன் பீடிகளின் சூடும் தேகம் பொசுக்கத் தன் உறவுகளுக்காக தன்னைத் தியாகம் செய்யும் நிலையை இந்தச் சிறுமிக்கு உண்டாக்காதே! இது தான் என் முதல் மனு.

இரண்டாவது, முகத்தில் கள்ளமில்லாச் சிரிப்புடன் கையேந்தி நின்ற அந்த குச்சி மிட்டாய்க் குழந்தையையும் வஞ்சகர்களின் கோரப்பிடியில் இருந்து காப்பாற்று என்பதே.

——————————–

பி.கு. இந்தப் பதிவு முழுதுமே கைப்பேசியில் அடியேன் எழுதியது. அழகான ஒரு பாஸஞ்சர் பயணத்துக்குப் பின் தவிர்க்க முடியாத பேருந்துப் பயணத்தில் எழுதியது. மெலடி என்ற பெயரில் எஸ். ஏ. ராஜ்குமார் உன்னிமேனனின் கழுத்தைத் திருகிக் கொலையாய்க் கொன்று   கொணர்ந்த கதறல் கேட்டு அந்தப் பேருந்தில் ஏறாமல் அரைமணி நேரம் காத்திருந்து அடுத்த பேருந்தில் ஏறி அமைதியான சூழலில் எழுதப்பட்டது.